Viral

ஆயுதங்கள் மட்டும்தான் பேனாவாகவும் கொடியாகவும் வேறுபட்டிருக்கின்றன.. அரசியலுக்கு கருத்தியல் அவசியமா?

அரசியலுக்கு கருத்தியல் அவசியமா?

ஏன் ஒரு அரசியல் நடவடிக்கைக்கு கருத்தாக்கம் அவசியம்?

அரசியலை பொறுத்தவரை இரு களங்கள் உண்டு. சிந்தனைக்களம், நிகழ்க்களம்! சிந்தனைக் களத்தில் கருத்தியல் ரீதியான கேள்விகளுக்கு பதிலளித்தும் எதிர்த்தும் கருத்தியல் தன்னை விரித்துக் கொள்ளும். நிகழ்க்களம் அரசியல் செயல்பாடுகளைக் கொண்டிருக்கும்.

அரசியலில் சிந்தனைக்களம் என்பது கருத்தியல் களம். நிகழ்க்களம் என்பது போராட்டக் களம்!

போராட்டத்தில் இருப்பவர்கள் பல நேரங்களில் சிந்தனைக் களத்தில் பங்களிப்பவர்களாக இருப்பதில்லை. சிந்தனைக் களத்தில் இயங்குபவர்கள் பல நேரங்களில் களச் செயல்பாடுகளில் இருப்பதில்லை. மிகச் சிலர் மட்டும்தான் இரு விஷயங்களிலும் பங்களிக்கக் கூடிய தன்மையைப் பெற்றவர்களாக இருக்கின்றனர்.

இரண்டு களங்களுக்கும் ஒன்றோடொன்று எப்படி இணைகிறது? இணைவதன் தேவை என்ன?

களத்தில் நிற்பவர்களுக்கு, எதிர்ப்படும் உடனடி சவால்களை எதிர்கொண்டு, வீழ்த்தி களைந்து, முன்னேறுவதற்கு மட்டும்தான் நேரம் சரியாக இருக்கும். பொதுவான சமூகப்போக்கை அறிந்துகொள்ளும் அவகாசம் குறைந்த அளவில் கிட்டினாலும், அந்த நேரத்தில் உடனடி சமூகப்போக்கை மட்டும்தான் அறிந்துகொள்ள முடியும்.

வரலாறு, சமூகம், பொருளாதாரம், அரசியல், தற்கால சூழல், எதிர்ப்படும் சவால்கள், அவற்றை களைவதற்கான அரசியல் மற்றும் போர்க்கால உத்திகள் என அனைத்தையும் முழுமையாக அலசி, அவதானித்து களத்தில் பணிபுரியும் மக்களுக்கும் தலைவர்களுக்கும் பயன்படும் வகையிலான கருத்துகளாக - வெறும் கருத்துகளாக கூட அல்ல, verified தேற்றங்களாக(theorems) derive செய்து கொடுக்கும் வேலைகளை think tanks, theoreticians போன்றோர் செய்வார்கள்.

Theoriticians ஏன் களத்தில் இல்லை என்றோ களத்தில் உள்ளவர்கள் ஏன் கோட்பாடுகளை உருவாக்குவதில்லை என்றோ கேட்பவர்கள் ஓர் அரசியல் நடவடிக்கைக்கு பின் உள்ள இயங்கியலை புரியாதவர்கள். என்னிடமும் இந்த கேள்வி பல தடவை கேட்கப்பட்டிருக்கிறது. உண்மையில் களத்தில் இருப்பவர்களும் கருத்தாக்க வேலைகளில் இருப்பவர்களும் யாரும் அறிந்திடாத ஒரு சூட்சும புரிதறிதலில்தான் இருப்பார்கள்.

களத்தில் இருப்பவனுக்கு கருத்தாக்கம் செய்பவனின் பங்கும் அவசியமும் தெரியும். கருத்தாக்கம் செய்பவனுக்கும் களத்தில் இருப்பவனின் பங்கும் அவசியமும் தெரியும். இருவருமின்றி இருவரும் இல்லை என்பதும் இருவருக்கும் தெரியும். ஆயுதங்கள் மட்டும்தான் பேனாவாகவும் கொடியாகவும் வேறுபட்டிருக்கின்றன என இருவரும் அறிவார்கள்.

களத்தில் இருந்து பணி புரிபவனுக்கு இருக்கும் ஆபத்துக்கு நிகரான ஆபத்தே கருத்து உருவாக்குபவனுக்கும் அதிகாரத்திடம் இருந்து உண்டு. தபோல்கர், கல்புர்கி அவ்வகை ஆபத்தை சந்தித்தவர்கள்தாம்.

எல்லாவற்றையும் தாண்டி, மொத்த உலகை ஒரு பெரும் கடல் என உணர்ந்தால் அதற்குள் இருக்கும் ஒற்றை துளிதான் நீங்கள் என்றாலும் நீங்களும் சேர்ந்ததே அக்கடல் என்பதை புரிந்து உங்கள் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வீர்கள்.

Also Read: “பிரிட்டிஷ் அரசுக்கு 5 முறை கருணை மனு அனுப்பியவர் சாவர்க்கர்” : ‘அரைகுறைகளுக்கு’ வரலாற்றாசிரியர் பதிலடி!