Viral

உங்களை பார்த்து நீங்களே கேட்க வேண்டிய கேள்வி இது.. காதலில் சுயநலம் இருக்கா?

நீ யாரை உண்மையா காதலிக்கிறே.. உன்னையேவா..? Whom do you really love?"

இந்த கேள்வி எவ்வளவு பெரிய உளவியல்-உயிரியல் பார்வை கொண்டது தெரியுமா? கமல் தெரிந்தே இந்த வசனம் வைத்தார் என்று சொன்னால் ஒரு கும்பல் என்னை அடிக்க ஓடி வரும். அதனால் அவர் அறியாமல் வைத்த வசனம் என்றே எடுத்துக்கொண்டு பதிவை தொடர்வோம்.

The Selfish Gene படித்திருப்பீர்களே... "We are survival machines – robot vehicles blindly programmed to preserve the selfish molecules known as genes" என்றிருப்பார் ரிச்சர்ட் டாக்கின்ஸ். உயிர் வாழ்க்கையே அடிப்படையில் சுயநலத்தை கொண்டதுதான். அதனால்தான் கம்யூனிஸம் எட்டாக்கனியாக இருக்கிறது. அதனால்தான் கம்யூனிஸம் மனிதனுக்கான பரிணாம வளர்ச்சி என்பேன்.

ஆக, உயிர் வாழ்க்கையின் அடிப்படையே சுயநலம் ஆகிவிட்டபின் காதலும் அப்படித்தானே இருக்க முடியும்.

நீங்கள் ஒரு பெண்ணை காதலிக்கிறீர்கள். அவள் திரும்ப காதலிக்க வேண்டுமென விரும்புவீர்கள். ஏனெனில் அவள் காதல் கொடுக்கும் வெப்பம் உங்கள் உணர்ச்சி கடலுக்கு தேவைப்படுகிறது.

உங்களின் உணர்ச்சிக்கடல் என்பதற்குத்தான் அவளை தேடுகிறீர்கள். ஆகவே நீங்கள் காதலிப்பது அவளை என்பதை காட்டிலும் உங்களின் உணர்ச்சிக்கடலை என்பதே உண்மை. அதாவது உங்களை. அப்படித்தான் அவளும். அவளுக்கு அவளுடைய விருப்பங்கள்தான் உங்களைவிட முக்கியம்.

அப்படியெனில் காதலே சுயநலமா?

ஆம். சுயநலம்தான். இருவருக்கான சுயநலம். அதனால்தான் அழகு. இச்சமூகமே கூட்டு சுயநலம்தானே. அதன் முதல் அடிப்படை கூட்டு சுயநலம், காதல். அந்த அடிப்படை புரிந்ததால்தான் காதலை சமூக தீர்வாக வைத்தார் பெரியார். இருவர் சுயநலம் அடைய முனைகையில் தனி சுயநல கற்பிதங்கள் களையப்படும் என அவர் எதிர்பார்த்தார். ஆனால் அந்த காதலையும் நம் பிற்போக்குக்கு மாற்றி அமைத்தது நமது வீழ்ச்சி.

காதல் என்பதை விட்டுவிட்டாலும் மேலே சொன்ன கேள்வி உங்களின் ஜீனை பார்த்து கேட்கப்படும் கேள்வி. அக்காட்சியில் கமல் பதில் சொல்லவில்லை எனினும் அவர் உடலுக்குள் இருந்த அத்தனை ஜீன்களும் கோரஸாக ஆமென்றுதான் சொல்லி இருக்க வேண்டும். சத்தம்தான் கேட்கவில்லை.

ஆம். இவ்வுலகில் நீங்கள் உங்களைத்தான் காதலிக்கிறீர்கள். உங்களை மட்டும்தான் காதலிக்கிறீர்கள். அதனால்தான் அடுத்தவனை ஒடுக்குகிறீர்கள். இயற்கையை அழிக்கிறீர்கள். சுரண்டுகிறீர்கள். மக்களை கொல்கிறீர்கள். உங்கள் மீதான உங்கள் காதல்தான் உலகை, சமூகத்தை, பூமியை எல்லாம் இப்படி அலங்கோலமாக மாற்றி வைத்திருக்கிறது.

அதை மாற்ற உங்களின் selfish gene-ஐ மாற்ற தொடங்குங்கள். இப்போது தொடங்கினாலே முடிப்பதற்கு பல வருடங்கள் ஆகும். ஆனால் இன்னும் தொடங்காமல் இருக்கிறோம்.

மனிதகுல அழிவில் இருந்து நம்மை காப்பாற்ற போவது, கூட்டு சுயநலம் கொண்ட பொதுநலச்சமூகமே. அங்கு சென்றடைய நாம் பேதம் பார்த்து பழகக்கூடாது. Empathy உருவாக்க வேண்டும். வீழ வீழ எழும் வீரம் கொள்ளல் வேண்டும். இன்னும் நீங்கள் சாதியும் கட்டமும் பார்த்து காதலிக்கிறீர்கள் எனில் நீங்கள் மனித குலத்துக்கான அழிவுச்சக்தி என அறியுங்கள். சுவரை தாண்டி இருப்பவனை தொட கையை நீட்டுங்கள்.

ஜீனை புறச்சூழல் மற்றும் மூளையின் அறிதல் கொடுத்த நம்பிக்கைகள் மூலம் மாற்றலாம். ஜீனை பயிற்றுவியுங்கள். சுயநலத்திலிருந்து பொதுநலத்துக்கு மாற்றுங்கள். Selfish Gene-ஐ Altruistic Gene ஆக மாற்றுங்கள். அதிசயமாய் வரலாற்றில் தோன்றிய புத்தர்கள், இயேசுக்கள், சே குவேராக்களை திரும்ப செய்யுங்கள். அவர்கள் மட்டுமே மனித குலத்தை அழிவில் இருந்து காப்பாற்ற போகிறவர்கள்.

Also Read: “தூங்கிக் கொண்டிருக்கும் மிருகத்தின் உணர்வு.. மனிதன் கணநேரத்தில் மிருகமாக மாறுவது ஏன்?” : உண்மை இதுதான்!