Viral
“பூமியில் வாழ்வதற்கு சூழல் இல்லாமல் போய்விட்டால் பணக்காரர்கள் என்ன செய்வார்கள் ?” - பகீர் பின்னணி இதோ!
Elysium என்றொரு ஹாலிவுட் திரைப்படம் உண்டு. எதிர்காலத்தில் நடப்பதாக கதை அமைக்கப்பட்டிருக்கும். எலிசியம் என்பது பூமியின் சுற்றுப்பாதையில் அமைக்கப்பட்டிருக்கும் வாழ்விடம். அங்குதான் பணக்காரர்களும் முதலாளிகளும் வாழ்வார்கள். எல்லா நவீன தொழில்நுட்பமும் மருத்துவமும் அங்கு இருக்கும். பூமியில் வறியவர்களும் உழைப்பவர்களும் மட்டுமே இருப்பார்கள். அவர்கள் நோய்வாய்ப்பட்டால் மரணம்தான். நவீன சிகிச்சை எல்லாம் கிடையாது.
நாயகன் பூமியில் இருப்பவன். வேலை பார்க்கும் இடத்தில் நேரும் ஒரு விபத்தில் கதிர்வீச்சு வெளிப்பட்டு அவன் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. அவனை குணப்படுத்தும் மருத்துவம் பூமியில் இல்லை. எலிசியத்தில்தான் இருக்கிறது. தன் உயிரை எப்படி காப்பாற்றிக் கொள்கிறான் என்பதும் அதற்கான முயற்சியில் எப்படி பூமியில் உள்ளோருக்கும் எலிசியத்தில் கிடைக்கும் நவீன வசதிகள் கிடைக்கச் செய்கிறான் என்பதுதான் கதை.
சயின்ஸ் பிக்ஷன்தான். ஆனால் வெறும் படம் என ஒதுக்கிவிட முடியாது. படத்தின் கதை உண்மையாவதற்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றன. பூமி வறியோருக்கும் செவ்வாய் போன்ற கிரகமோ நிலா போன்ற துணைக்கோளோ அல்லது ஏதேனும் ஒரு விண்வெளி வாழ்விடமோ பணக்காரர்களுக்கு என உருவாக்கப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை. ஏனெனில் பணக்காரன் – ஏழை பிரிவினை சமூகத்தின் எல்லா தரப்பிலும் எல்லா கட்டங்களிலும் இருந்தே வந்திருக்கிறது. சுரண்டலும் சுரண்டப்படுதலும்தான் மனிதகுல வரலாறாகவும் இருந்திருக்கிறது.
ஏற்கனவே நிலவை எரிவாயு நிரப்பும் இடமாக்கி செவ்வாய் கிரகத்தை காலனியாக்கும் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. விண்வெளிச் சுற்றுப்பயணங்கள் கூடப் பேசப்பட்டு வருகின்றன. அறிவியலின் வளர்ச்சி ஒரு பக்கம் அறிவுக்கு பயன்பட்டாலும் மறுபக்கத்தில் லாபமீட்டலுக்கு பயன்படுவதை தவிர்க்க முடிந்ததே இல்லை. ஆக்கத்துக்கான அறிவியல் மற்றும் அழிவுக்கான அறிவியல் ஆகிய இரு முனைகளுக்கு இடையே வரலாறு முழுக்க விவாதம் நிகழ்ந்தே வந்திருக்கிறது.
சுரண்டலின் உச்சமாக பூமியையும் லாபவெறி தணிக்க சுரண்டி முடித்தாகிவிட்டது. இன்னும் லாபவெறி தணிந்தபாடில்லை. மனித வாழ்க்கைக்கான சூழல் பூமியில் அழிக்கப்பட்டுவிட்டதோடு மட்டுமல்லாமல், அதை சீரமைக்கும் காலக்கெடுவும் முடிந்துவிட்டது. அதாவது இன்றிலிருந்து மனிதன் காடுகளை அழிப்பதையும், வாழ்சூழலை அழிக்கும் கரியமில வெளிப்பாட்டையும் நிறுத்தத் தொடங்கினாலும் மனித இனத்தை காப்பாற்ற முடியாது என்ற காலத்துக்குள் வந்துவிட்டோம். மனித குலம் இனி வடக்கிருந்து உயிர் துறப்பது மட்டும்தான் பாக்கி.
மனிதனை சுரண்டத் தொடங்கிய தனியுடைமையும் பெருகி சேரத் தொடங்கிய உபரி உற்பத்தியும் எங்குமே நின்றிடாமல் மேலும் மேலும் வளர்ந்து மிகச்சிலரை மட்டும் உலகளவில் பணக்காரர்களாக்கி அவர்களின் லாபவெறிக்கு உலகின் மக்கள் அனைவரும் உழைத்து, சுரண்டப்பட்டு, பூமியையும் சுரண்டி அதையும் குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்கி வைத்திருக்கிறார்கள்.
பூமியில் மனிதனின் வாழ்சூழல் இல்லாமல் போய்விட்டால் இந்த பணக்காரர்கள் என்ன செய்வார்கள்?
எலிசியம்தான்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!