Viral
நீங்கள் விருப்பப்படி உங்களின் வாழ்க்கையை வாழ்கிறீர்களா?
உங்களின் அந்திமக் காலம். விட்டத்தை பார்த்துக் கிடக்கிறீர்கள். வாயில் வழியும் எச்சிலை கூட உங்கள் கை கொண்டு துடைக்க முடியாத நிலை. அந்த நேரத்தில் உங்களுக்கு ஓர் எண்ணம் வருகிறது.
‘என் விருப்பப்படி என் வாழ்க்கைய நான் வாழல!’
ஒரு நான்கு வருடங்கள் இருக்கும். BPO-வில் வேலை பார்த்த காலம். மாலை 7.30 க்கு தொடங்கி அதிகாலை 3.30 மணிக்கு முடியும் வேலை. ஷிப்ட் முடிந்த பிறகு வடபழனியிலிருந்து டீ குடிக்க கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு செல்வோம். உடனே தூக்கமும் வந்து தொலையாது பாருங்கள். நானும் நண்பனுமென இருவர் மட்டும் செல்வோம். டீக்கடையில் நின்றுகொண்டு அரசியல், சமூகம் என எல்லா கதைகளும் பேசுவோம். ஒரு வாறாக ஐந்து மணிக்கு வீட்டுக்கு கிளம்புவோம். அவனுக்கு முகப்பேரில் வீடு. எனக்கு குன்றத்தூர் அருகே வீடு. சென்று சேரும்போது சூரியன் முகம் காட்டி விடுவான். தூக்கம் பல மைல் தொலைவில் இருக்கும்.
ஏதேனும் படம் பார்த்து, புத்தகம் படித்து தூக்கத்தை கொண்டு வர மன்றாடிக் கொண்டிருப்பேன். கண் இமைகள் சோர்வின் சுமையில் கனத்துக் கொண்டே இருக்கும். தூக்கம் மட்டும் வராது. கடிகார முள் சுற்றும் வேகம் கோபத்தை வரவழைக்கும். தூங்கி ஆக வேண்டும். மாலையில் மீண்டும் வேலை. வராத தூக்கத்தை எப்படி கத்தி தீர்ப்பது என தெரியாது. இயலாமை கோபத்தின் மேல் அடர்ந்து கொண்டே இருக்கும். கோபம் காட்டவும் முடியாது. ஒரு வழியாய் கண்ணயருகையில் மணி 11 ஆகியிருக்கும். மீண்டும் ஒரு மணிக்கு எழுந்தால்தான் கிளம்பி 3.30க்கு அலுவலகம் சேர முடியும். அலாரம் அடித்து இரண்டு மணி நேரங்களில் கண்கள் வீங்கி அரை தூக்க கனத்துடன் ஜாம்பியாய் எழுந்து மீண்டும் வேலைக்கு ஓடுவேன்.
நண்பனுக்கும் இதே போன்ற நிலைதான். எங்களின் ஆசுவாசம் காலை 3.45 மணி டீக்கடையில் மட்டும்தான். எங்கள் வாழ்க்கையில் நாங்கள் படித்த, கேட்ட, பார்த்த மானுட வாழ்க்கைகளின் சுவாரஸ்யங்களை மானுட வாழ்க்கைக்கான முறையில் அளவளாவிக் கொள்ளும் நேரமும் அப்போது மட்டும்தான். பிறகு மீண்டும் வாழ்க்கை என்கிற பெரு ராட்டினம்!
இதற்கு மறுபக்கம் ஒன்று இருக்கிறது. தேங்கி இருப்பதை போன்ற உணர்வு. ஒரே அலுவலகத்தில் ஒரே வேலையை மாதக்கணக்கில் செய்வதால் ஏற்படும் அலுப்பு நிலை. எந்த முன்னேற்றமும் இல்லையென ஒரு எண்ணம் கழுத்தை நெறித்துக் கொண்டே இருக்கும். என்ன செய்வதெனவும் தெரியாது. Monotonous வேலைக்கு பயந்து வேறு ஒரு வேலைக்கு ஓடுவோம். அங்கு ஏதோ அற்புதம் நிகழ்ந்து விடும் என்பதைப் போல. புது பொம்மை வாங்கி குழந்தையின் குதூகலத்துடன் கொஞ்ச நாள் அற்புதமாக பாவித்து கொண்டாடி தீர்க்கலாம். அவ்வளவுதான். மற்றபடி நெருப்புக்கு பயந்து எண்ணெய் கொப்பறைக்குள் விழுந்த கதைதான்.
கோயம்பேடு டீக்கடையில் ஒருநாள் நண்பன் சொன்னான், "கல்யாணம் பண்ண போறேன் மச்சான். அடுத்து என்ன ஏதுன்னு தெரியல. அப்படியே ஓடிக்கிட்டு இருக்கேன். இப்படி ஒரு lifeல கல்யாணம்ங்கறது எந்தளவு optimalலா இருக்கும்னு தெரியல!"
இன்றைய தலைமுறையின் வாழ்க்கைமுறையில் மன அழுத்தமும் குழப்பமும் பதட்டமும் வாழ்வியல் கூறுகளாக மாறியிருக்கின்றன. காரணம் நாம் விரும்பாமல் திணிக்கப் பட்டிருக்கும் இந்த வாழ்க்கைமுறை. ஏதோவொரு வகையில் பணம் வர வேண்டும், எப்படியோ ஓர் அடையாளத்தை அடைந்திட வேண்டுமென வேட்கை நிறைந்த வாழ்க்கைமுறை!
ஒரு சின்ன கணக்கு. உங்களின் வேலை நேரம் 8 மணி நேரங்கள் இருக்கப் போகின்றன. ஆறு நாட்கள் வேலை என வைத்துக் கொள்வோம். மொத்தமாக 48 மணி நேரங்கள் ஒரு வாரத்திற்கு. அதாவது வாரத்தின் 168 மணி நேரங்களில் 48 மணி நேரங்கள். அடடே மீதி 120 மணி நேரங்கள் இருக்கின்றனவே? வெயிட் கரோ சாப். குறைவான தூக்கம் என்றாலும் 50 மணி நேரங்கள் வாரத்துக்கு தூங்குகிறீர்கள். அலுவலகம்-வீடு பயணத்துக்கு குறைவாக 2 மணி நேரங்கள் வைத்துக் கொண்டாலும் பயணத்திலேயே 14 மணி நேரங்கள் கழிந்து விடும். மூன்று வேளை உணவுக்கு 2.5 மணி நேரம் என வைத்துக் கொண்டாலும் 17.5 மணி நேரங்கள். அலுவலக கிளம்பலுக்கு ஒரு மணி நேரம், திரும்பி வந்து சோர்வு களைய ஒரு மணி நேரம் (சோர்வு களைய நேரம் கிடைக்காது எனினும்) என்றாலும் 14 மணி நேரங்கள் ஓடிவிடும். மொத்தத்தில் மிச்சம் இருப்பது 24.5 மணி நேரங்கள். ஒரு நாளுக்கு 3.5 மணி நேரங்கள்.
இந்த 8 மணி நேர வேலை, ட்ராபிக் இல்லா பயண நேரம் முதலிய கணக்குகளை ஒரு fair world-ல் வைத்துதான் சொல்கிறேன். ஒரு நாளில் 3.5 மணி நேரங்களுக்கும் குறைவான நேரம் மிச்சமிருப்பதற்கே சாத்தியங்கள் அதிகம். இந்த 3.5 மணி நேரத்துக்குள்தான் உங்களின் பெற்றோர், காதல், சண்டை, உறவு, குடும்பப் பளு, குடும்பத்தினர் புரிந்து கொள்ளாத மன அழுத்தம், நட்பு, பிரிவு, துயர், மருத்துவம் எல்லாமும். இந்த 3.5 மணி நேரங்களுக்குள்தான் உங்கள் வாழ்க்கையை திறம்பட கையாளச் சொல்கிறார்கள். சாத்தியமா?
நிச்சயம் சாத்தியமில்லை. ஆனாலும் நீங்கள் சாத்தியமென நம்புவீர்கள். ஏனென்றால் உருட்டு அப்படி. Survival of the fittest என்பார்கள். ஓடு, உழை, சம்பாதி என்பார்கள். இறுதியில் மோட்டுவளையை பார்த்துக் கிடக்கும்போது எச்சிலை துடைக்க கூட வர மாட்டார்கள்.
உங்களின் அலுவலகங்கள் உங்கள் வாழ்க்கைகள் அல்ல. உங்கள் வாழ்க்கைகளை ஓட்டுவதற்கான பணம் கிடைக்கும் இடங்கள் அவை. அவ்வளவுதான். அங்கே சென்று உங்கள் உழைப்பை பேரம் பேசும் வக்கு கூட இன்றி விற்கிறீர்கள். ஏன் தெரியுமா? அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு உங்கள் வாழ்க்கையை வாழ்வதற்கு. ஆனால் வாழ்கிறீர்களா?
நீங்கள் உங்களின் வாழ்க்கையை வாழ்கிறீர்களா அல்லது எது உங்கள் வாழ்க்கை என கண்டறிய அடிப்படையாக இரண்டு கேள்விகள் இருக்கின்றன.
ஊதியம் வாங்காமல் நீங்கள் ஏதேனும் வேலை செய்கிறீர்களா?
அலுவலகம், அலுவலகத்தில் அறிந்த நண்பர்கள் இல்லாமல் புதிய நண்பர்களுடன் புதியவொரு நோக்கத்துக்கு ஒன்றாக இயங்குகிறீர்களா?
இரண்டுக்கும் பதில், ‘இல்லை’ என்றால் நீங்கள் வாழவில்லை என அர்த்தம்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!