Viral
400 கோடி வருடங்களுக்கு முன்பு .. உயிர் எப்படி உருவாகிறது? : அதன் பயன் என்ன?
400 கோடி வருடங்களுக்கு முன் உயிர் உருவானது, கடல் உருவாகி, நீராவியாகி, பாசி படர்ந்து, முதல் உயிர் நுண்ணுயிராக உருவானது போன்ற அறிவியல் தகவல்கள் பல இருப்பினும் நம்மைப் பரவசத்துக்குள்ளாக்கும் கேள்வி ஒன்றுதான்.
‘உயிர் எப்படி உருவாகிறது?’
இக்கேள்வியை எப்படி வேண்டுமானாலும் அணுகலாம். குறிப்பாக விஞ்ஞானத்தின் பக்கம் நின்று அணுகும்போது நிறைய வேடிக்கைகளை காணும் வாய்ப்பு கிட்டும். அதுதான் எனக்கு சுவாரஸ்யத்தை கொடுக்கிறது. பூனை எலியை சீண்டி விளையாடுவது போன்ற ஒரு சுவாரஸ்யம்!
மனிதனின் ‘உயிர் எப்படி உருவாகிறது?’ என்ற கேள்விக்கு மூடிய பதிலாக அவன் உருவாக்கிக் கொண்ட விஷயம்தான் கடவுள். கடவுளிலிருந்து பல பிரச்சினைகள் தொடங்கியிருக்கின்றன. மனிதப் பரிணாமத்தின் மொத்த மூடுபதில்களுக்கும் தொடக்கமாக இருக்கும் மூடுபதிலே ‘கடவுள்’!
கடவுள் என்ற மூடுபதிலை திறப்பதற்கான தொடக்கம்தான் ‘உயிர் எப்படி உருவாகிறது’ என்ற கேள்வி. அந்த கேள்வியை பிடித்து சென்றால் நமக்கு தேவையான விளக்கங்களும் தெளிவும் அளவுக்கு அதிகமாகவே கிடைக்கும். ஆனால் எளியரிடம் பகிர்ந்து கொள்ள முடியாத விஞ்ஞான மண்டை பதில்கள் எல்லாமும். அதனால்தான் புத்தரிடம் ‘கடவுள் இருக்காரா இல்லையா?’ என்ற கேள்வி கேட்கப்படுகையில், ‘தெரியாது’ என விட்டுவிடுகிறார். கேள்வி கேட்டவனை அவனது சொந்த முயற்சியில் விடை தேடும் வேலையை தொடங்க வைக்கும் பதில்.
புத்தரின் பதில் மூடுபதில் அல்ல. திறப்புக்கான பதில்!
உண்மையில் மனிதனின் கேள்வி கேட்கும் திறன்தான் பெரும் சுவாரஸ்யம். அவன் கேள்வி கேட்பதற்கான நோக்கம், purpose!
மனிதனுடைய பிறப்பு பிற உயிர்களை போல் அநாமத்தாக இருக்கக் கூடாது. அதற்கு காரணம் இருக்க வேண்டும். எல்லா உயிர் உருவாக்கத்தை போன்ற யதேச்சை நிகழ்வாக இருக்கக் கூடாது. அவசியம் இருக்க வேண்டும். அந்த அவசியத்தை அவன் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த பயணத்தில் மட்டுமே மொத்த வாழ்க்கையையும் செலவழிக்கிறான் வெவ்வேறு விதங்களில்.
நம்முடைய பிரச்சினையே அவசியத்துக்கான தேடல்தான். கொஞ்சம் விஞ்ஞானப்பூர்வமாக சொன்னால், தன்னுணர்வு!
வானில் உருவாகும் மேகங்கள் ஓடியாடி ஒன்று சேரும் போது சமயங்களில் நமக்கு தெரிந்த உருவங்களை தோற்றுவிப்பதுண்டு. நாம் உடனே குதூகலித்து கொண்டாடிக் கொள்கிறோம். கவிதை பாடுகிறோம். பின் அவை கலைந்து அதன் போக்கில் சென்றுவிடுகின்றன. ஒருவேளை மேகத்துக்குள் இருக்கும் அணுக்கள் தன்னுணர்வு பெற்றால் என்ன நடக்கும் என யோசியுங்களேன்.
சொந்த முயற்சியில் கடுமையாக உழைத்து பறவை போன்ற வடிவத்தை உருவாக்கி விட்டதாக சொல்லி, பெருமை கொண்டு, கலைந்து போவதை பற்றிய உணர்வு இல்லாமல் அவை காவியங்கள் படைத்துக் கொண்டிருந்தால் எத்தனை நகைச்சுவையாக இருக்கும்?
அவ்வளவுதான் நாம்!
அத்தனை முக்கியத்துவமற்றவர்களே நாம்!
நம்முடைய முக்கியத்துவமற்ற தன்மையை புரிந்து கொள்ளாமல், அர்த்தமற்ற காரணங்களை தேடி ஓடும் வாழ்க்கைகளுக்குள், பிற டிஎன்ஏ கூடுகளை சுரண்டி ஒழிப்பது மட்டுமின்றி மொத்த இயற்கையையும் நாசமாக்கி எல்லா உயிர்களையும் அழித்துக் கொண்டிருக்கும் கோரத்துக்கு முன்னால் நாம் தன்னுணர்வு என்ற மகுடத்தை அணிந்திருந்தால் என்ன, அணியாவிட்டால்தான் என்ன?
நம் பிறப்புகளுக்கு காரணமென ஒன்று இருந்தால் என்ன, இல்லாவிட்டால்தான் என்ன?
பரிணாமத்தின் உச்சியில் மனிதனுக்கு இடம் இருந்தால் என்ன, இல்லாவிட்டால்தான் என்ன?
உயிர் உருவானது எப்படி என தெரிந்தால் என்ன, தெரியாவிட்டால்தான் என்ன?
மனிதனின் காரண காரியங்களை கொண்டு இறுதியாக விளைந்திருப்பது ஒன்றே ஒன்று மட்டும்தான்.
நாசம். சர்வநாசம்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!