Viral
TTF VASAN -இதை நாம் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் இதை நம்மால் தவிர்க்கமுடியாது!
நேற்று ஒரு புகைப்படம் வைரலானது. யாரோ ஒரு இளைஞர் ஒரு செல்ஃபி எடுத்திருக்கிறார். அவருக்குப் பின் ஒரு பெருங்கூட்டம் அவரைப் பார்த்துக் கையை ஆட்டிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அக்கூட்டத்தின் இயல்பைக் கொண்டு, புகைப்படம் எடுக்கும் இளைஞரைக் காணவே அவர்கள் வந்திருக்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்கிறோம். ஆனால் யார் அவர்?
கடந்த இரண்டு நாட்களாக முகநூலைச் சுற்றிக் கொண்டிருக்கும் கேள்வி இதுதான்.
இளைஞரின் பெயர் வாசனாம். Twin Throttlers என்ற ஓர் யூட்யூப் சேனல் வைத்திருக்கிறார். அதன் சப்ஸ்கரைபர்கள் அனைவரையும் Twin Throttlers Family என்கிறார். அதைத்தான் சுருக்கமாக TTF என்கிறார். யூட்யூப் சேனலில் மொத்தம் 27 லட்சம் சப்ஸ்க்ரைபர்கள் இருக்கின்றனர்.
27 லட்சமா? அப்படி என்ன காணொளிகளை பதிவேற்றுகிறார்?
வாசன் தன்னை ஒரு ரைடர் (Rider) எனச் சொல்லிக் கொள்கிறார். பல இடங்களுக்கு பைக்கில் பயணிக்கிறார். அவற்றை காணொளிகளாகத் தயாரித்து யூ ட்யூப் சேனலில் பதிவேற்றியிருக்கிறார். பல பைக்குகள் பல இடங்கள் என சுற்றிக் கொண்டிருந்த அவர், ஒரு கட்டத்தில் ஒரு சூப்பர் பைக் வாங்கியிருக்கிறார். கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய் விலை.
மெல்ல அவர் தன் வாழ்க்கையை ஓர் சமூகதள பாணிக்கு மாற்றியிருக்கிறார். அதிக சப்ஸ்க்ரைபர்கள், அதிக வருமானம் என்பதால் அதை நோக்கி ‘content' உருவாக்கத் தொடங்குகிறார். பொதுவாக சமூகதளச் செய்திகள் சார்ந்து இயங்கத் தொடங்கிவிட்டால், யானைக் கட்டி போர் அடிப்பது போல் ஆகிவிடும். தேவை எப்போதும் தீராது. தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்க வேண்டும். வாசனும் யூட்யூப் சேனலுக்கான உள்ளடக்கத்தைத் தேடத் தொடங்கி தன் வீடு, வாழ்க்கை, பயணம், புது விஷயங்கள் என புதிது புதிதாக உள்ளடக்கங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் அவரது பிறந்தநாள் வந்திருக்கிறது. அதைக் கொண்டாடவென அவரது சப்ஸ்க்ரைபர்களை சந்திக்க நிகழ்வு திட்டமிட்டிருக்கிறார். காவல்துறை அனுமதியையும் பெற்றிருக்கிறார். அந்த நிகழ்வையும் திட்டமிட்டு உள்ளடக்கமாக்குகிறார். நிகழ்வைத் திட்டமிடுவதற்கு ஒரு நிறுவனத்தை பணியமர்த்துகிறார்.
வாசனின் ஹெல்மெட் 40,000க்கும் மேல். அதற்குள்ளேயே ஒரு கேமிராவையும் மைக்கையும் வைத்திருக்கிறார். பைக் ஓட்டுகையில் பேசிக் கொண்டே செல்கிறார். ஒளிப்பதிவு ஆகிக் கொண்டே இருக்கிறது. அவரது வாழ்வின் எதுவும் 'content' ஆகிறது.
பிறந்தநாளன்று பைக்கில் செல்கிறார். நடுவே ஒரு சிறு கிராமத்துக்குள்ளிருந்த மக்களும் இளைஞர்களும் கொண்டாடியபடி அவரை மறிக்கின்றனர். அவரும் ஆனந்தமாக பைக்கை நிறுத்துகிறார். அவர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர். செல்ஃபி அவருடன் எடுத்துக் கொள்கின்றனர். நடுரோட்டில் கேக் வெட்டப்படுகிறது. இதே போல் ஆங்காங்கே போகும் வழியில் இளையோர் கூட்டம். நிற்கிறார். கொண்டாட்டம். செல்ஃபிக்கள். மீண்டும் பைக் கிளம்புகிறது.
அவரைச் சந்திக்க வந்திருக்கும் அனைவரும் ஒரு மைதானத்துக்கு வரவழைக்கப்பட்டிருக்கின்றனர். அங்கு சுற்றி வலை பின்னப்பட்டு அதற்குள் வாசன் கொண்டு வரப்படுகிறார். மக்கள் வலைகளினூடாக அவரை அழைக்க, அவரும் சென்று அனைவரின் வாழ்த்துகளையும் பெற்று புகைப்படங்களுக்கு போஸ் அளிக்கிறார். இறுதியாக ஒரு சிறு மேடையில் ஏறி நின்று மைக்கில் பேசி, அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறார். மேடையில் நின்றபடி கீழே நிற்கும் மக்களின் பின்னணியில் புகைப்படம் எடுக்கிறார். அந்தப் புகைப்படம்தான் சமூகதளங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது.
ஒரு சாதாரண இளைஞனால் பல இடங்களுக்குப் பயணிக்க முடிகிறது, சூப்பர் பைக் வாங்க முடிகிறது என்பதையெல்லாம் மக்கள் ரசிக்கின்றனர். அந்த இளைஞர் பைக்கில் செய்யும் சாகசங்களைத் தன் சாகசங்களாக கொண்டாடுகின்றனர். தங்களின் வாழ்நிலைகளில் அடைய முடியாத வாழ்க்கையை வாசனுக்குள் கண்டெடுத்து வாழ்ந்து பார்த்து அனுபவித்துக் கொள்கிறார்கள்.
சமூகதளம் பயன்படுத்தும் நாம் அது உருவாக்கும் வாழ்க்கைமுறை, சிந்தனைமுறை, priorities ஆகியவை மாறியிருப்பதை கவனிப்பதே இல்லை. ஆனால் அந்த மாற்றங்கள் நம் கால்களுக்கடியில் படர்ந்து கொண்டிருக்கிறது.
வாசனின் பேச்சில் வழக்கமான அன்பு, மக்கள், இரக்கம் என பாசாங்கு தொனியில் மக்களைக் கொண்டாடும் தன்மை இருக்கிறது. அது சமூகதள நட்சத்திரங்களின் தொனி. இயல்பற்ற தொனி. எனினும் அவருக்குப் பின் ஒரு பெருங்கூட்டம் கூடுகிறது.
இதை நாம் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் இது போன்ற விசயங்கள் நடப்பதை நாம் தவிர்க்கமுடியாது. அந்த உலகம் இயங்கும் விதி அது.
இனி வரும் காலத்தில் நம் சமூகங்கள் இரு வேறாக இருக்கலாம். இரண்டிலும் வேறு வேறு பிரச்சினைகள், வேறு வேறு முக்கியத்துவங்கள் இருக்கலாம். இரண்டுமே அடுத்தடுத்த உலகத்தின் பார்வையாளர்களாக மட்டும் மிஞ்சலாம்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!