Viral

பணக்கார வீட்டு ஆண்கள்தான் டார்கெட்.. சினிமா பாணியில் கட்டாய திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார் !

பீகார் மாநிலத்தில் கால்நடை மருத்துவராக பணிபுரிந்து வருபவர் 'சத்ய குமார் ஜாவ்'. அந்த பகுதியில் பிரபல மருத்துவராக இருக்கும் இவருக்கு, பெகுசராய் மாவட்டத்தில் உள்ள விலங்கு ஒன்றுக்கு உடல் நிலை சரியில்லை என்று தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மருத்துவரை மிரட்டி, ஒரு பெண்ணின் கழுத்தில் சிலர் கட்டாய தாலி கட்ட வைத்துள்ளனர். மேலும் மருத்துவர் தாலி கட்டுவதை வீடியோவாக எடுத்து அதனை இணையத்திலும் வெளியிட்டுள்ளனர் மணமகள் வீட்டார்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து மருத்துவரின் தந்தை காவல்துறையில் புகார் ஒன்றை அளித்தார். இவரளித்த புகாரின் பேரில், விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பீகாரில் இது முதல்முறையல்ல. பொதுவாக வட மாநிலங்களான பீகார், உத்தர பிரதேசம், ஜார்கண்ட் போன்ற சில பகுதிகளில், இது போன்று மணமகன் கடத்தல் அல்லது கட்டாய திருமணம் அடிக்கடி நடக்கும். அதாவது திருமணம் ஆகாத, வசதியுள்ள இளைஞரை கடத்தி, அவரை துப்பாக்கி முனையில் மிரட்டி, தங்கள் வீட்டு பெண்ணை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தி தாலி கட்ட வைக்கப்படுகிறார்கள். இதனை 'ஜாப்ரிய விவாஹா' என்று அழைக்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, பீகாரில் பொகாரோ ஸ்டீல் ஆலையில் ஜூனியர் மேனேஜராக பணிபுரிந்து வந்த 29 வயதான வினோத் குமார் என்பவர், பாட்னாவில் உள்ள பண்டாரக் பகுதியில் கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கி திருமணம் செய்து வைக்கபட்டார். குமார் மணமகன் உடையில் சடங்குகளை நிறுத்துமாறு கெஞ்சும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'அத்ராங்கி ரே' திரைப்படம் தமிழில் 'கலாட்டா கல்யாணம்' என்ற பெயரில் வெளியானது. அந்த திரைப்படத்தில் தனுஷ் பீகார் சென்றிருந்தபோது, அவரை கடத்தி கதாநாயகியின் கழுத்தில் கட்டாய தாலி கட்ட வைத்து, கதாநாயகியை தனுஷுடன் அனுப்பி வைக்கப்படும் காட்சி காட்டப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “பசுவுக்காக இஸ்லாமியர் கொல்லப்படுகிறார்கள்” : ‘காஷ்மீர் பைல்ஸ்’ குறித்து நடிகை சாய் பல்லவி பேசியது என்ன?