Viral
விண்வெளிப் புதிர் Blackhole.. அறிவியல் தரும் பதில் என்ன?
விண்வெளி பல சுவாரஸ்யங்கள் கொண்டவை. பிரம்மாண்டமும் சூட்சுமம்தான் அந்த சுவாரஸ்யங்களின் அடிப்படை. அத்தகைய ஒரு சுவாரஸ்ய விஷயம்தான், கருந்துளை (Blackhole).
கருந்துளை சார்ந்து அறிவியலுலகத்தில் ஒரு முக்கியமான விவாதம் நடந்தது. அதாவது கருந்துளை உட்கொள்ளும் ஒரு பொருளின் தகவல்கள் எங்கே போகும் என்பதை பற்றிய விவாதம். அறிவியலில் அடிப்படையான விஷயம் ஒன்று இருக்கிறது. இவ்வுலகிலும் மொத்த பிரபஞ்சத்திலும் இருக்கும் எல்லா தகவல்களும் (data) அப்படியேதான் இருக்கும் என்பதே அந்த அடிப்படை. அதாவது தகவல்கள் வேறொரு உருவை எடுக்கலாம். ஆனால் நிச்சயமாக அழியாது. அறிவியல் சொல்லும் இந்த அடிப்படையிலிருந்து பார்க்கும்போது கருந்துளையில் இழுக்கப்படும் என் உடலின் தகவல்கள் என்னவாகும் என்ற கேள்வி அறிவியலில் எழுந்தது.
தகவல்களும் கருந்துளைக்குள் சென்றுவிடும் என்றார்கள் சிலர். ஹாக்கிங் போன்றவர்கள் கருந்துளைக்குள் தகவல்கள் செல்லும்பட்சத்தில் அவை நிச்சயமாக ஏதோவொரு வழியில் வெளியேறும் என்றார்கள். அங்கிருந்துதான் parallel universe அல்லது இணை பிரபஞ்சம் என்ற கருதுகோள் உருவானது. அதாவது கருந்துளையை ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் ஊற்ற பயன்படுத்துப்படும் புனலாக (funnel) கற்பனை செய்து கொள்ளுங்கள். அகலத் திறந்திருக்கும் பக்கத்திலிருந்து உள்ளே ஊற்றப்படும் எண்ணெய் மறுபக்கத்தில் வெளியேறுகிறதல்லவா? அதே போல் ஒரு பக்கத்திலிருந்து உள்ளே செல்லும் தகவல்கள் கருந்துளையின் மறுபக்கத்தில் வெளியேறி பிரபஞ்சமாக மாறும் என்கிறது கருதுகோள். அதாவது தகவல்கள் முதலில் இருந்த பிரபஞ்சத்தின் பிரதியாக தகவல்கள் வெளியேறி உருவான பிரபஞ்சம் இருக்கும். கிட்டத்தட்ட கண்ணாடி பிம்பம் போல் இருக்கலாம் என்கிறார்கள்.
படுசுவாரஸ்யமாக இருக்கிறதல்லவா? இதில் அடுத்தக்கட்ட ட்விஸ்ட்தான் ஹோலோகிராம் யுனிவர்ஸ்!
கருந்துளையில் தகவல்கள் எங்குப் போகும் என்கிற கேள்விக்கு இன்னொரு விளக்கமும் கொடுக்கப்படுகிறது. அதாவது கருந்துளையின் விளிம்பிலேயே உள்ளிழுக்கப்படும் பொருட்களின் தகவல்கள் தேங்கிவிடும் என்கிறார்கள். அந்த தகவல்கள்தான் பிரதிபலித்து கருந்துளையை சுற்றியிருக்கிற வெளிச்சமாக தெரிகிறது.
ஒரு கிரகம் மொத்தமாக கருந்துளையில் இழுக்கப்பட்டால் அக்கிரகத்தின் மண், கடல், மலை, உயிர்கள், மனிதர்கள், அவர்களின் பால் கணக்கு வரை எல்லாமும் தகவல்களாக கருந்துளையின் விளிம்பில் தேங்குமாம். ஒரு மொத்த பிரபஞ்சமுமே உள்ளிழுக்கபப்ட்டிருந்தாலும் அதன் மொத்த தகவல்களும் தேங்கும் என்கிறார்கள். ட்விஸ்ட் எங்கு வருகிறது தெரியுமா? கருந்துளையிலிருந்து அவ்வப்போது கதிர்வீச்சு வெளிவருகிறது என கண்டுபிடித்திருக்கிறார்கள். கருந்துளையின் விளிம்பில் தேங்கும் தகவல்கள் யாவும் இரட்டை பரிமாணத்தில் தேங்கும். இவை யாவும் உள்ளிருந்து வெளிப்படும் கதிர்வீச்சினாலோ அல்லது அண்டத்தின் பண்பினாலோ மொத்தமாக முப்பரிமாணத்தில் படமாக தொடர்ந்து காண்பிக்கப்படுகிறது என்கிறார்கள்.
நம் தியேட்டர்களில் ஃபிலிம் ரோல் போட்டு திரையில் ப்ரொஜக்ட் செய்வார்களே அந்த பாணியில் முப்பரிமாண ப்ரொஜக்ஷனை கற்பனை செய்து பாருங்கள். பல theme parkகளில் டைனோசர் போன்ற பல வடிவங்களை முப்பரிமாணமாக ப்ரொஜக்ட் செய்யும் பாணியை பார்த்திருக்கிறோம். அதே போல் கருந்துளையில் தேங்கிய தகவல்கள்தான் அண்டவெளியில் தொடர்ந்து பிரபஞ்சமாகவும் நட்சத்திரமாகவும் கிரகமாகவும் உயிர்களாகவும் நானாகவும் நீங்களாகவும் ப்ரொஜக்ட் செய்யப்படுகிறோம் என சொன்னால் நம்ப முடிகிறதா?
அதாவது பிரபஞ்சம் உருவானது தொடங்கி கருந்துளைக்குள் அது விழுந்து அழியும் வரையிலான தகவல்கள் சேமிக்கப்பட்டு ஒரு பெரும் loop-ஆக தொடர்ந்து அண்டத்தில் ப்ரொஜக்ட் செய்யப்படுவதை கற்பனை செய்து பாருங்கள். நம் வாழ்க்கைகள் வெவ்வேறு combinationகளுடன் தொடர்ந்து முப்பரிமாண வடிவம் கொள்ளும். நாம் சந்திக்கும் பிரச்சினைகளும் தகவல்களும் மக்களும் தனிநபர்களும் என எல்லாமும் ஒரே data setதான். ப்ரொஜெக்ட் செய்யப்படும் தன்மைக்கு ஏற்ப வெவ்வேறு நிகழ்வு சாத்தியங்கள் எந்த திட்டமிடலுமின்றி தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருப்பதாக யோசித்துப் பாருங்கள்.
சுவாரஸ்யமோ பயமோ, உங்களின் நெஞ்சை நிரப்பும்!
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !