Viral
“கொடைக்கானல் நகரத்தில் மட்டும் 8 டன் குப்பை.. இதுவும் ஒரு தேச பக்தியே” : கார்த்திகேய சிவசேனாபதி பதிவு!
கொடைக்கானல் மலைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலே அதிகப்படியான குப்பை இருப்பதாகவும், குப்பைகளை கண்ட இடங்களில் வீசி எரிவதை தடுக்கவேண்டும் என தி.மு.க சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக கார்த்திகேய சிவசேனாபதி வெளியிட்டு முகநூல் பதிவில், “மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் தங்களை அன்புடன் வரவேற்கிறது. மனதிற்கும் உடலுக்கும் உற்சாகம் தர தேர்ந்தெடுக்கும் ஒரு அற்புதமான விஷயம் சுற்றுலா. அந்த சுற்றுலா இன்பமாகவும் இனிமையாகவும், மனதிற்கு மகிழ்ச்சியை தரும் பயணமாக அமைய வாழ்த்துகிறோம். கொடைக்கானலுக்கு இது சீசன் காலம். இந்த சீசன் காலத்தில் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலை நோக்கி வருகின்றனர். இந்த அதிகப்படியான கூட்டம் சுற்றுலா தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் கொடைக்கானலுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், கூடவே அச்சுறுத்தலையும் தருகிறது. அந்த அச்சுறுத்தல் வேறொன்றுமில்லை அது "குப்பை"
ஆம் கொடைக்கானல் மலைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலே அதிகப்படியான குப்பை தான். கொடைக்கானலில் கூட்டம் அதிகமாக உள்ள நாட்களில் கொடைக்கானல் நகரத்தில் மட்டும் சேரும் குப்பையின் அளவு சராசரியாக 8 டன். இது இந்த மலைக்கு அதிகப்படியான அளவு. கொடைக்கானல் மலை இவ்வளவு குப்பையை தாங்காது. கொடைக்கானல் நகராட்சி எவ்வளவு முயற்சித்தாலும் முழுமையாக தூய்மை செய்ய இயலவில்லை. காரணம் குறைவான பணியாளர்கள். அதிகப்படியான குப்பை.
நீங்கள் போடும் குப்பையால் வனத்திற்கும் வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. கொடைக்கானலுக்கு வரும் பல சுற்றுலா பயணிகள் சாலை ஓரங்களில் உணவுகளை தாங்களே தயார் செய்து உண்ணும் பழக்கத்தை கொண்டுள்ளனர். அல்லது கொடைக்கானலுக்கு அருகில் உள்ள ஊர்களில் இருந்து வருபவர்கள் உணவை வீட்டிலிருந்தே கொண்டு வருகின்றனர். அதை தவறு என்று வாதிட வரவில்லை. அப்படி செய்யும் போது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய தட்டுகள், டம்ளர்களையே அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
சாதாரணமாக ஒரு பேருந்தில் 50 நபர்கள் வருகின்றனர். குறைந்த அளவாக மூன்று மூன்று வேளை உணவு உண்கின்றனர். அப்படிப் பார்த்தால் ஒரு பேருந்தில் மட்டுமே 150 தட்டுகள் மூன்று நேரம் தண்ணீர் அருந்த 450 டம்ளர்கள் பயன்படுத்தப்படுகிறது. ஒரு பேருந்தில் இவ்வளவு என்றால் கொடைக்கானலுக்கு சராசரியாக கூட்டம் அதிகம் உள்ள காலங்களில் 50 முதல் 100 பேருந்துகள் வருகின்றன. அப்படி வரும் வாகனங்களின் உணவு அருந்தி தூக்கி எறியும் குப்பையை கணக்கிட்டால் தலையே சுற்றும். கொடைக்கானலில் ஒருமுறை பயன்படுத்தகூடிய பிளாஸ்டிக் டம்ளர்களுக்கு தடை உள்ளது ஆனாலும் பல வாகனங்களில் மறைவாக கொண்டுவந்து இங்கு பயன்படுத்தி வீசி செல்கிறார்கள். அதுபோல 5 லிட்டருக்கு குறைவான தண்ணீர் பாட்டில்கள் தடைசெய்யப்பட்டபின் நல்ல மாற்றத்தை காணமுடிகிறது.
பெருமாள்மலை வனதுறை சோதனைச்சாவடியில் வாகனத்தில் கொண்டுவரும் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்கின்றனர். ஒரு சிலர் அதையும் கொண்டு வந்து இங்கு வீசி செல்வது வேதனை. சுற்றுலா செல்வது எல்லாம் திடீரென முடிவு செய்து கிளம்பி வருவதில்லை. குறைந்தது இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பாக திட்டமிட்டு கிளம்பி வருவீர்கள். அப்படி கிளம்பும் போதே ஒரு சிறிய திட்டமிடலோடு கிளம்பினால் சிறப்பாக இருக்கும். வீட்டிலிருந்தே ஒரு தட்டு டம்ளர். கொண்டு வந்து பயன்படுத்தி திரும்பி எடுத்து செல்லலாம். வீட்டிலிருந்தே தட்டை தூக்கி கொண்டு வரவா என நினைக்க வேண்டாம். நீங்கள் செய்யும் ஒரு சிறு காரியம் சுற்றுச்சூழலை பெரிதாய் பாதுகாக்கும். அது உணவு சம்மந்தமான குப்பை சேராமல் இருக்க ஒரு காரணமாக அமையலாம் அதுபோல கூடுமானவரை குப்பை ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
அதுபோல குப்பையை குப்பைத்தொட்டியில் மட்டும் போடுங்கள். கண்ட இடத்தில் வீசி செல்லாதீர்கள். நாம் உண்ணும் எண்ணெய் சம்மந்தமான உணவுகள் ஒரு சில நேரம் நம் உடலுக்கே ஒத்துக்கொள்வதில்லை. நீங்கள் வீசி எரியும் உணவு குப்பையின் வாசத்தில் ஈர்க்கப்பட்டு வனவிலங்குகள் அதை உண்டு அவற்றிக்கும் மிகப்பெரிய ஒவ்வாமை பிரச்சனைகளை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது எனவே கண்டிப்பாக வனத்தில் உணவு குப்பையோ வேறு எந்தவிதமான குப்பையையும் போடாதிருங்கள். கொடைக்கானல் மலையில் குப்பைத்தொட்டி குறைவுதான். ஆனாலும் நீங்கள் நினைக்கும் இடத்தில் எல்லாமும், நீங்கள் நிற்கின்ற இடத்தில் எல்லாமும் குப்பைத்தொட்டி வேண்டும் என நினைக்காதீர்கள். குப்பைகளை குப்பைத்தொட்டியை தேடி போடுதலும் ஒரு தேச பக்தியே. மலைப்பிரதேசங்களில் சாலையின் வளைவு ஒவ்வொன்றும் சிறிய சுற்றுலா தளமே. நீங்கள் நினைத்த இடத்தில் வண்டியை நிறுத்திவீர்கள்.
அங்கேயே உணவு அளவு சிற்றுண்டி உண்பீர்கள். சிலர் அங்கேயே மது அருந்திவிட்டு பாட்டில்களை போட்டுவிட்டு செய்கிறீர்கள். கொடைக்கானல் மலையில் மிகப்பெரிய குப்பையே இந்த மது பாட்டிகள் தான். எனவே நீங்கள் வாகனத்தை நிறுத்தும் இடத்தில் எல்லாம் குப்பைத் தொட்டி வைக்க இயலாது வைக்கவும் கூடாது. இந்த மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் சுற்றுலா தலம் மட்டுமல்ல இந்த பழனி மலைக்கு கீழே உள்ள 10 நீர்த்தேக்கங்களுக்கும் இந்த மலையே நீர் உற்பத்தி செய்யும் இடம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே இந்த அழகிய மலையை குப்பை மேடாக மாற்றாதிருங்கள் என வேண்டுகிறோம்.
வளமான,
வனப்பான, பசுமையான
கொடைக்கானலாக இருக்க உதவுங்கள்.
நன்றி !!
(கொடைக்கானலில் உள்ள சோலைக்குருவி தன்னார்வலர் அமைப்பு பல ஆண்டுகளாக கொடைக்கானல் நகரில் உள்ள குப்பைகளை அகற்றிவருகின்றனர். மேலும் கொடைக்கானல் சுற்றுலா வரும் மக்களிடமும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடம் சுற்றுச்சூழலை பேணிப்பாதுகாப்பது நமது கடமை என்பதை விளக்கிக்கூறிவருகின்றனர்.)” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!