Viral
வேட்டையாடப்படும் கானகத்தின் பேருயிர்.. கவனம் குவிக்கும் ‘களிறு’ - காட்டு யானைகளின் வலி சொல்லும் ஆவணம் !
கம்பீரத் தோற்றத்துடன் கூட்டமாக வாழக்கூடிய யானைகள் காடுகளின் பாதுகாவலன் என போற்றப்படுகிறது. நாள்தோறும் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் தனது வலசு பாதையில் பல கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதி நடந்து சென்று ஒரு பகுதியில் இருக்கும் விதையை மற்ற பகுதிக்கு பரப்புவதில் மிகப்பெரிய பங்கு யானைகளுக்கு உள்ளது. அத்தகைய பேருயிர்கள் இன்று, அழிவுப்பாதையை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது.
கடந்த 2017ஆம் ஆண்டில் தேசிய அளவில் நடந்த யானைகள் கணக்கெடுப்பில் நாடு முழுவதும் 27 ஆயிரத்து 212 யானைகள் இருந்தன. அவற்றில் 10% யானைகள், அதாவது 2,761 யானைகள் தமிழகத்தில் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்தது. தமிழகத்தில் 4 புலிகள் காப்பகங்கள் ஒன்பது வனக்கோட்டங்கள், 4 வன உயிரின சரணாலயங்களில் யானைகள் பரவலாக வாழ்கின்றன.
யானைகளின் வாழ்விட பரப்பு குறைவது, உணவுப் பற்றாக்குறை, நீர் மாசு, பூச்சிக்கொல்லிகள், சட்டவிரோத மின் வேலிகள், வேட்டை, ரயில் மற்றும் வாகன விபத்துகள், விவசாய பயிர்களை காக்க விவசாயிகள் கையாளும் தவறான உத்திகள் போன்றவற்றால் யானைகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
அதேபோல் காட்டு யானைகள் தாக்கி உயிரிழக்கும் மனிதர்களின் எண்ணிக்கையும் இதற்கு இணையாக உயர்ந்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் காட்டு யானைகள் தாக்கி மனிதர்கள் உயிரிழப்பது குறைந்துள்ளது.
ஆனால், யானைகள் உயிரிழப்பு தமிழகத்தில் அதிகரித்துள்ளது. குறிப்பாக கோவை, சத்தியமங்கலம், நீலகிரி, கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் உள்ள வனப்பகுதி மற்றும் கிராமப்பகுதிகளில் யானைகள் உயிரிழப்பு அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், யானைகள் மீது நடக்கும் தாக்குதலை தடுக்கும் வகையில், பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் யானை நல பாதுகாப்பாளர்கள் என பலரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, பெரும் உடலமைப்பைத் தவிர வேறு எதையும் கொண்டிராத அப்பாவி பேருயிர் உயிரினமான காட்டு யானைகள் தொடர்ந்து விரட்டி அடிக்கப்படுவதை ஆவணப்படுத்தும் விதமாக, சந்தோஷ் கிருஷ்ணன் - ஜெஸ்வின் கிங்ஸ்லி ஆகியோர் ‘களிறு’ என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளனர்.
18 நிமிடங்கள் ஓடும் இந்த ஆவணப்படம், யானைகள் மீது நடக்கும் தாக்குதலும், குறிப்பாக பொது கவனத்திற்கு அதிகம் வராத பிரச்சனைகளை முன்வைக்கிறது. மரபு வழியாக தங்கள் வலசை பதையை இழந்தும், காடுகள் தொடர்ச்சியாக துண்டாடப்படுவதையும் உணரமுடியாத குழப்பத்தில் யானை இனங்கள் இருப்பதாக யானை நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
அதுமட்டுமல்லாது, தார் சாலைகள், கட்டிடங்கள், வயல்கள், தோட்டங்கள் மற்றும் மின்வேலிகள் போன்றவற்றால் தங்களின் மரபு வழித்தடங்கள் மறைக்கப்பட்டதை உணர்ந்து யானைகள் ஆக்ரோஷம் அடைவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், பாதைகளே மனித குடியிரிப்பாய் இருக்கும் பட்சத்தில் அவை குடியிருப்பு பகுதிகளில் புகுந்துவிட்டதாகவும் இரட்டிப்பு செய்து செய்தியை வெளியிடுகிறது சில கார்ப்பரேட் ஊடகங்கள். குறிப்பாக, உணவு தேடி மனிதக் குடியிருப்புகள், வயல்களுக்கு யானைகள் வரும் போக்கு என்பது சமீபகாலமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அதனை இந்த ஆணவப்படம் எடுத்துக்காட்டியுள்ளது. குறிப்பாக, கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு திம்பம் சாலை வழியாகக் கரும்பாலைகளுக்கு லாரிகளில் கரும்பு கொண்டு செல்லப்படும்போது செக்போஸ்ட்டில் நிற்கும்போது யானைகள் கரும்பை எடுத்து உண்கின்றன. இப்படி உணவைப் பெறும் யானைகள், திரும்பவும் காட்டுக்குள் சென்று பெரிதாக உணவு தேடுவதில்லை என்பதை காட்டுகின்றனர்.
அதேபோல், யானைகளை தடுக்க மனிதர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கையால், மின்சாரம் பாய்ந்தும், யானையின் மீது எரிபொருள் வீசியும் என வேறுவகைகளிலும் பல யானைகள் இறக்கின்றதை சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் நீலகிரி ரிசார்ட் ஒன்றுக்கு வந்த யானையின் மீது எரிபொருளில் நனைக்கப்பட்ட துணியைத் தீயுடன் மனிதர்கள் வீசியெறிந்து, அந்த யானை பலியானதும் இந்தப் படத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, தேயிலைத் தோட்டங்களின் வழியாக இடம்பெயரும் யானைகள் தோட்ட உரிமையாளர்களால் விரட்டப்படுவது, பட்டாசுகள், சத்தமெழுப்புதல், விளக்கு களை ஒளிரவிடுதல் எனப் பல்வேறு அச்சுறுத்தும் நடவடிக்கைகள் மூலம் யானைகள் துரத்தப்படுவதையும் காட்சிப்படுத்தியுள்ளது.
அதேவேளையில், யானைகள் வாழும் பகுதிக்கு அருகே வாழ்பவர்கள் யானைகளுடன் இணக்கமாக வாழ்வது எப்படி என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஆவணப் படம் கூடுதல் புரிதலைத் தரும் வகையில் அமைந்துள்ளது.
என் சினி சுமா பாஸ் சர்வதேசத் திரைப்பட விழா விருது, தாகூர் சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘எமர்ஜிங் டேலன்ட்ஸ் இன் கன்சர்வேஷன்’ விருது உள்ளிட்டவற்றை இந்தப் படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 46,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?