Viral
நியூயார்க்கில் 30 இடங்களில் வெடிகுண்டுகள்.. நிறுவனத்தை பழிவாங்க ஊழியர் எடுத்த நூதன முடிவு : நடந்தது என்ன?
1940ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி.
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருக்கும் கன்சாலிடேடட் எடிசன் நிறுவனத்தில் பரபரப்பு தொற்றியிருந்தது. அது ஒரு ஆற்றல் நிறுவனம். அந்த நாளில் நிறுவனத்தில் ஜன்னலருகே ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. பைப் வெடிகுண்டு. சிறிய அளவுதான். ஒரு துண்டுச் சீட்டும் கிடந்தது. ‘கான் எடிசன் திருடர்களே… உங்களுக்குதான் இது’ என எழுதப்பட்டிருந்தது.
துண்டுச்சீட்டில் இருந்த கான் எடிசன் என்கிற வார்த்தைகள் நிறுவனப் பெயரின் சுருக்கம். நிறுவனத்தில் வேலை பார்த்தவர்கள் மீதுதான் முதல் சந்தேகம் காவல்துறைக்கு வந்தது. நிறுவன ஊழியர்கள் அனைவரையும் விசாரித்து பார்த்தனர். பொருட்படுத்தப்படும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
ஆனால் பிரச்சினை அன்றோடு நின்றுவிடவில்லை.
கிட்டத்தட்ட 30 இடங்களில் வெடிகுண்டுகள். அதில் பாதியளவு வெடித்தன. உயிர்ச்சேதம் ஏதும் இல்லையென்றாலும் பலருக்கு காயங்கள். தொடர்ச்சியாக ஒருவன் குண்டுகளை தாம் வாழும் பகுதிகளில் வைத்துக் கொண்டிருக்கின்றான் என்கிற செய்தி மக்களின் மனங்களில் அச்சத்தை விதைத்தது. காவல்துறை தீவிரமடைந்தது.
முன்னரே குற்றம் புரிந்தவனா என தெரிந்துகொள்ள காவல்துறை ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டன. மனநல மருத்துவமனைகள் அனுமதி ரசீதுகள் பரிசோதிக்கப்பட்டன. சந்தேகம் வரும்படி நடந்து கொண்ட தனி நபர்கள் பிடித்து விசாரிக்கப்பட்டனர். வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கவெனவே தனிப்படை அமைக்கப்பட்டது. பிரயோஜனமில்லை.
வெவ்வேறு இடங்களில் வெடிகுண்டுகள். ஏன் வெடிகுண்டு வைக்கிறான் என்பதை அறிய மனோவியல் மட்டுமே உதவ முடியும்.
1956ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம்.
வெடிகுண்டு வைப்பவன் வெளிநாட்டில் பிறந்தவனாக இருக்கலாம். கிழக்கு ஐரோப்பிய வம்சாவளியை சேர்ந்தவனாக இருக்கலாம். 40லிருந்து 50க்குள் அவன் வயது இருக்கலாம். திருமணம் ஆகாதவன். பெண் உறவினர்களுடன் வாழ்பவனாக இருக்கலாம். மீசை தாடி இன்றி முற்றிலும் மழித்து, நேர்த்தியாக உடை உடுத்துபவனாக இருப்பான். நல்ல உடல்வாகு கொண்டிருப்பான். பாடப்புத்தகங்களுக்கு பயந்தவனாக இருப்பான்.
கிடைத்த சிற்சில தகவல்களை கொண்டு குண்டு வைப்பனின் தன்மையை வரையறுத்திருந்தார் மனவியல் நிபுணர் ப்ரஸ்ஸல்.
காவல்துறைக்கு திசை கிடைத்தது.
குண்டு வைப்பவனுக்கு MAD BOMBER எனப் பெயர் சூட்டினார்கள். ப்ரஸ்ஸல் கொடுத்த துப்புகளிலேயே முக்கியமான துப்பு பிரபலமான தகவலாக மாறியது. குண்டு வைப்பவன் பட்டன் வைத்த சூட் போட்டிருக்கலாம் என்கிற தகவல்.
அந்தக் காலகட்டத்தில் இன்று இருக்கும் நவீனங்கள் எதுவும் கிடையாது. அதுவும் மனோதத்துவ நிபுணருக்கான வாய்ப்புகள், வழக்குகளில் அன்று சுத்தமாக கிடையவே கிடையாது.
ஒருவரை அறிந்துகொண்டு, அவரின் தன்மையை ஆராய்வதற்கு பதிலாக, வெடிகுண்டு வைப்பவரின் தன்மைகளை ஆராய்ந்து அவரை கணித்தால் என்ன என யோசித்தார் ப்ரஸ்ஸல். சரியாக சொல்வதெனில் வெடிகுண்டு வைப்பவரை கண்டுபிடிக்க அவரது பாலினம், தோற்றம், வேலை அனுபவம், ஆளுமைத்தன்மை போன்ற விஷயங்களை வைத்து முயல நினைத்தார். முக்கியமாக அவரது அகச்சிக்கல்களை கணிக்க முயன்றார்.
இந்த முறையை தலைகீழ் மனோதத்துவ முறை என அழைத்தார் ப்ரஸ்ஸல். இந்த முறை துப்பு துலக்கலில் பயன்படுத்தப்பட்டது அதுவே முதல் முறை. இன்று இம்முறை எல்லா வழக்குகளிலும் மிக சகஜமாக கையாளப்படுகிறது. Criminal Profiling எனப் பெயரிட்டு இன்று இம்முறையை அழைக்கிறார்கள்.
1957ம் ஆண்டு ஜனவரி 21.
இரவு நேரத்தில் நான்கு காவலர்கள் மெட்டஸ்கியின் வீட்டுக்குச் சென்றனர். இரவு நேர உடையுடன் மெட்டஸ்கி அவர்களை வரவேற்றார். கண்ணாடி போட்டிருந்தார். நடுத்தர வயது. லித்துவேனிய நாட்டை சேர்ந்தவர். சகோதரிகளுடன் வாழ்ந்துவந்தார். திருமணம் ஆகவில்லை. காதலியும் இல்லை. மெட்டஸ்கியின் படுக்கையறையில் கடிதங்களில் இருந்து எழுத்துகள் கொண்ட நோட்டுப்புத்தகம் இருந்தது. காவலர்கள் மெட்டஸ்கியிடம் ஒரு பேனாவையும் பேப்பரையும் கொடுத்து அவரின் பெயரை எழுதக் கேட்டனர். கடிதங்களில் பார்த்த அதே எழுத்துகள். காவல் நிலையத்துக்கு செல்ல அவரை கிளம்பி வரச் சொன்னார்கள் காவலர்கள். உடைகளை மாற்றி அவர் திரும்பினார். ப்ரஸ்ஸல் கணித்தது போன்றே ஒரு சூட் அணிந்திருந்தார் மெட்டஸ்கி.
எந்த அடிதடி, விரட்டிப்பிடியும் இல்லை. ஒரு கேள்வி மட்டும் கேட்டார்கள் காவலர்கள். எல்லாக் கடிதங்களிலும் இருந்த F.P. என்கிற எழுத்துகளுக்கு என்ன அர்த்தம் என கேட்டார்கள். கடிதத்தை பற்றி தெரியாதது போலவோ தனக்கும் கடிதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போலவோ மெட்டஸ்கி நடந்துகொள்ளவே இல்லை. அவருக்கும் தெரியும் எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது என. ஆகவே FP என்றால் Fair Play என பதில் கூறி 17 வருட தேடலை முடிவுக்கு கொண்டு வந்தார். Fair Play என்றால் நியாயமான விளையாட்டு என பொருள். கைதானார் மெட்டஸ்கி.
வெடிகுண்டுகளை வைத்து மொத்த நகரத்தையும் மெட்டஸ்கி மிரட்சிக்கு உட்படுத்த என்ன காரணம்?
கான் எடிசன் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது விஷ வாயு சிறு அளவில் வெளியாகியிருக்கிறது. அதை சுவாசித்திருக்கிறார் மெட்டஸ்கி. அதிலிருந்து அவருக்கு காசநோய் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு நிர்வாகத்திடம் அவர் நியாயம் கேட்கப்போக, நிர்வாகம் அவரை மதிக்கவில்லை, நஷ்ட ஈடாக மிகக் குறைவான தொகையை கொடுத்து அவரை வேலையை விட்டு நிறுத்தியது நிர்வாகம். நிறுவனம் அவரிடம் நடந்துகொண்ட விதம் ஏற்படுத்திய கோபமும் தனக்கான நியாயம் கிடைக்கவேண்டும் என்கிற ஆதங்கத்திலும் மெட்டஸ்கி வெடிகுண்டுகளை வைக்கத் தொடங்கியிருக்கார்.
சொல்லுங்கள், இங்கு மனநிலைப் பிறழ்வு கொண்டிருப்பது ஜார்ஜ் மெட்டஸ்கி மட்டும்தானா?
Also Read
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!