Viral

‘Bella Ciao’ சொல்வது என்ன? : துயர கீதம் துள்ளல் பாடலானது எப்படி? - உருவான இடம் எது தெரியுமா?

O partigiano portami via,

o bella ciao, bella ciao, bella ciao ciao ciao

o partigiano portami via

che mi sento di morir.

இது ஒரு இத்தாலிய பாடல்!

‘Bella Ciao' (பெல்லச் சாவ்) என்கிற வார்த்தைகளை கொண்டு இப்பாடலை அடையாளப்படுத்துகிறார்கள். நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் Money Heist என்கிற ஒரு தொடரில் இடம்பெற்றிருக்கும் பாடல். உலகமெங்கும் பரவி வரலாறு படைத்த பாடல்களுள் ‘பெல்லச் சாவ்’ என்கிற பாடலும் ஒன்று என்கிறார்கள். குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு தொடர்ந்து மனிதப்பரப்புக்கு மேலெழுந்து வரும் பாடலாகவும் இது அமைந்திருக்கிறது. அதற்குக் காரணம், பாடல் கொண்டிருக்கும் மண், எளிமை, அரசியல் மற்றும் சித்தாந்தம்!

Bella Ciao என்ற இத்தாலிய வார்த்தைகளை ‘விடைபெறுகிறேன் அழகே’ என மொழிபெயர்க்கலாம். மரணத்தை அறிவிக்கும் பாடலில் இத்தனை துள்ளல் இருக்க முடியுமா? மரணத்தை வரவேற்க பாடலே உருவாக்கப்படுகிறதெனில், இருத்தலில் எத்தனை துயரம் இருந்திருக்கும்?

மூலப்பாடலின் பொருள் இதுதான்.

‘காலையில் எழுந்தேன். நெல் வயல்களுக்கு நான் செல்ல வேண்டும். பூச்சிகளுக்கும் கொசுக்களுக்கும் இடையில் கடின வேலை காத்திருக்கிறது. முதலாளி கையில் பிரம்புடன் நின்று கொண்டிருக்கிறான். எங்களின் முதுகு ஒடிய நாங்கள் வேலை பார்க்கிறோம். ஒவ்வொரு காலையும் புலம்புவதைப் போலவே புலம்புகிறேன். என்ன வேதனை கடவுளே! இங்கு கழிக்கும் ஒவ்வொரு மணி நேரத்திலும் எங்களின் இளமையைத் தொலைக்கிறோம். ஆனாலும் ஒருநாள் வரும். நாங்கள் எல்லாரும் விடுதலையுடன் வேலை பார்க்கும் ஒரு நாள் வரும். அதுவரை விடைபெறுகிறேன் அழகே!’

வடக்கு இத்தாலியில் நாட்டுப்புறப் பாட்டாக உருவான பாடல். உருவாக்கியவர்கள், வயல்வெளிகளில் அன்றாடம் கூலி வேலை பார்த்த பெண் விவசாயத் தொழிலாளர்கள். கண்காணிகளின் ஒடுக்குமுறையையும் பிரபுக்களின் சுரண்டலையும் முதுகு நோக முணுமுணுத்து தங்களுக்குள் பெண்கள் வெளிப்படுத்திக் கொள்ள உதவிய பாடல். பிற்காலத்தில் அந்த கண்காணிகளை எதிர்க்கும் உணர்வில் கூலி விவசாயிகளை இணைப்பதற்கு இப்பாடல் பெரும்பங்காற்றியது.

பிறகு இரண்டாம் உலகப் போர் துவங்கியது. இத்தாலியில் முசோலினியின் பாசிச ஆட்சிக்கு எதிராக கம்யூனிசப் போராளிக் குழுக்கள் உருவாகின. Partisan என்கிற பொதுப்பெயரில் வழங்கப்பட்ட போராளிக் குழுக்களுக்கான பாடலாக Bella Ciao மாறியது. முசோலினியின் பாசிசத்தை எதிர்த்தும் ஹிட்லரின் ஆக்கிரமிப்பை எதிர்த்தும் ஐரோப்பாவின் பல இடங்களில் போராளிக் குழுக்கள் மக்களை ஒருங்கிணைத்தனர். பாசிசத்தை விட கம்யூனிஸ்ட்டுகளின் நியாயம் மக்களுக்கு சரியெனப்பட்டது. ‘விடைபெறுகிறேன் அழகே’ பாடல் புரட்சியையும் விடுதலையையும் வேண்டும் மக்களின் குரலாக உயர்ந்தது. சில மாற்றங்களுடன் பாடலின் வரிகள் எளிய மக்களின் அரசியல் கீதமாக உருமாறியது. கம்யூனிச போராளிக் குழுக்களை போற்றி மக்கள் பாடிய அப்பாடலின் அர்த்தம் இதுதான்.

‘ஒரு காலை நான் விழித்தேன். படையெடுத்து வந்த எதிரியை கண்டேன். மரணம் நெருங்கி வருவது தெரிந்து விட்டது. ஓ போராளிகளே... என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள். போராளியாக நான் இறந்து போனால், என்னை புதையுங்கள். ஒரு மலையின் மேல் என்னை புதையுங்கள். அழகிய மலரின் நிழலில் என்னை புதையுங்கள். கடந்து போகிறவர்கள் ‘எத்தனை அழகான மலர்’ எனச் சொல்வார்கள். விடைபெறுகிறேன் அழகே! இது போராளியின் மலர். விடுதலைக்காக போராடி உயிரிழந்தவனின் மலர். ’

எளியவனின் துயரமும் கோபமும் பாசிசத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்ததை பதிவு செய்யும் வரிகள்!

‘விடைபெறுகிறேன் அழகே’ என்ற வரியில் அழகென குறிக்கப்படுவது நாம் வாழ்கிற மண், அம்மண்ணை கொண்டிருக்கும் பூமி, அப்பூமி கொண்டிருக்கும் மனித வாழ்க்கை! உயிர் துறப்பை ஈகையாக செய்யும் போராளிகளின் பாடலாக மீண்டும் மனிதப்பரப்பை அடைந்தது ‘பெல்லச் சாவ்’.

2017ஆம் ஆண்டில் Money Heist என்கிற பெயரில் ஸ்பானிய தொலைக்காட்சித் தொடரை நெட்ஃப்ளிக்ஸ் வாங்கி ஒளிபரப்பியது. இத்தாலியில் முசோலினிக்கு எதிராக பாசிசப் போராட்டத்தில் உயிரிழந்தவரின் வழிதோன்றல்கள் இருவர் ஸ்பானிய ரிசர்வ் வங்கியை கொள்ளையடிக்கத் திட்டமிடுகின்றனர். இருவரின் தந்தையும் வறுமையின் காரணமாக வங்கியில் கொள்ளையடிக்க முயன்று அரசால் கொல்லப்பட்டவர். தாத்தாவின் பாசிச எதிர்ப்பு, தந்தையின் வறுமை இரண்டும் சேர்ந்து வங்கியை கொள்ளையடிக்கும் முடிவுக்கு அவர்களைத் தள்ளுகிறது.

வங்கி என்பது வட்டி, கடன் என்கிற அடையாளங்களை கடந்து பாசிசமாகவும் அரசாகவும் முதலாளித்துவமாகவும் நேரடியாக அடையாளப்பட்டிருப்பது இந்த நூற்றாண்டில்தான். உலகின் எல்லா நாடுகளிலும் விலைவாசி, வாழ்வாதாரம், கல்வியின்மை, மருத்துவ மறுப்பு ஆகியவற்றை எதிர்த்து கொந்தளிப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் சூழல். ஸ்பானிய ரிசர்வ் வங்கியை கொள்ளையடிக்கச் செல்லும் Money Heist தொடர் கொள்ளையர்களின் உணர்வு கீதமாக Bella Ciao முன்னிறுத்தப்படுகிறது.

உலக மக்கள் மொத்தப் பேரின் கோபத்தையும் ஒற்றைப் பாடலுக்குள் அடக்கி அதை எங்குமே பிரசாரமாக்காமல் காட்சிகளின் வழியே இயல்பாக வளரவிட்டு பார்ப்பவர்களுக்கும் கடத்தி, அப்பாடலின் வரலாற்றுத் தேவையையும் அரசியலையும் உணர்த்தி கை கோர்க்க வைப்பதற்கு பெயரே சிறந்த படைப்பு. சிறப்பான இலக்கியம்!

Also Read: “தமிழர்களை வஞ்சிக்கும் மோடி அரசு.. தமிழ்நாட்டு தேர்வர்களுக்கு இந்தியில் பயிற்சியா?” : மதுரை MP ஆவேசம்!