Viral

“ஜனநாயகத்தின் கறையைப் போக்கி உள்ளாட்சித் தத்துவத்தை உலகுக்கு உணர்த்திய பாப்பாபட்டி” : அன்றும் - இன்றும் !

அக்டோபர் 2 ஆம் தேதி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இது வெறும் செய்திகள் மட்டுமல்ல; வாழும் தொடர் வரலாறு .

ஜனநாயகத்தின் குரலை கலைஞரின் மகனாக எங்கும் எப்போதும் எதிரொலித்துக்கொள்வதில் யாருக்கும் சளைத்தவர் அல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உள்ளாட்சி ஜனநாயகத்தின் கறையைப் போக்கிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வரலாற்றுத்தடத்தில், உள்ளாட்சித் தத்துவத்தை உலகுக்கு உணர்த்தியது பாப்பாபட்டி.

மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ள பாப்பாபட்டி கிராமத்தை யாரும் எளிதில் கடந்து சென்று விட முடியாது. கிராமங்களை ஜனநாயகப்படுத்தாமல் அவற்றைப் பலப்படுத்துவது அர்த்தமற்றது என்பதை உணர்ந்ததுதான் தி.மு.க அரசு. பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்காச்சியேந்தல் உள்ளிட்ட தமிழகத்தின் நான்கு பஞ்சாயத்துகளில் பத்து ஆண்டுகாலம் (2006 வரை) பஞ்சாயத்துத் தேர்தலை நடத்த முடியவில்லை.

வேட்புமனு தாக்கல் செய்யவே எவரும் முன்வர முடியாத அளவுக்கு அச்சுறுத்தல், மீறி யாரேனும் வேட்புமனு தாக்கல் செய்தால் போட்டிக்கு ஒரு வேட்பாளரை நிறுத்தி அவரை உடனடியாக ராஜினாமா செய்யவைத்த கொடுமை. இந்திய ஜனநாயகத்தின் மீது கறையாகப் படிந்திருந்த இந்த அவமானம் உலக அரங்குகளில் இந்தியாவின் மதிப்பையே சீரழித்துக்கொண்டிருந்தது.

2006ஆம் ஆண்டு முதல்வராகப் பொறுப்பேற்ற முத்தமிழறிஞர் கலைஞர் அந்த அவலநிலைக்கு முடிவுகட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அப்போது மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த உதயசந்திரன் அவர்களும் அர்ப்பணிப்போடு அந்த முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்தார். அதன் காரணமாக, 2006ஆம் ஆண்டு அந்த நான்கு ரிசர்வ் பஞ்சாயத்துகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு தலித் பஞ்சாயத்துத் தலைவர்களையும் சென்னைக்கு அழைத்துவந்து தமிழ்நாடு அரசு சார்பில் மிகப்பெரும் விழா எடுத்து அன்றைய முதலமைச்சர் கலைஞர் கௌரவித்தார். இத்தனை ஆண்டுகள் ஒரு ஊராட்சியில் தேர்தல் நடத்தாமல் இருப்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு..’ என முதல்வர் கலைஞர் வருந்தியதை உள்ளுணர்வுடன் எடுத்துக் கொண்ட உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தல் ஜனநாயக முறைக்கு இடையூறு வந்த போது அப்போதைய துணை முதல்வராக இருந்தபோது முதல்வரே இப்பகுதிக்கு நேரில் சென்று பேச்சு வார்த்தை நடத்தினார்.

ஊராட்சி தலைவர் முருகானந்தத்திடம் கேட்டபோது அவர் கூறியபோது, “2006 வரை நடக்காத தேர்தல் பிரச்சினைக்குரியதாக இருந்தது. முன்ன மாதிரி இப்போது இங்கே எந்த பிரச்சனையும் இல்லை.. போன முறையும் நான் தான் ஊராட்சி தலைவர். இந்த முறையும் நான் தான் தலைவர். போன முறை 5 பேர் போட்டி போட்டாங்க. இந்த முறை யாரும் போட்டி போடாததால், நானே தலைவராக அன்னபோஸ்ட் முறையில் தேர்வானேன். நிர்வாகம் பண்றதில எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. அப்போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது வந்த முதல்வர் தற்போது வருவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. மக்கள் கிராமசபையில் அவரிடமே கோரிக்கைகளைத் தெரிவிக்க தயாராக இருக்கிறார்கள்” என்றார்.

பாப்பாபட்டி அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மணிமாறன் கூறுகையில், சமுதாயத்தினரிடையே இருந்த பிரச்சினைகளை தீர்த்து வைத்தவர் கலைஞர். உள்ளாட்சியில் ஜனநாயகத்துக்கு வித்திட்ட தி.மு.கவின் கொள்கையை ஏந்தி வரும் முதல்வரை பொதுமக்களும் தாய்மார்களும் உற்சாகமாக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அன்று தேர்தல் ஜனநாயகம் தழைக்க முயன்றவர்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின், தற்போது ஜனநாயகத்தின் குரல் வலுப்பெற, பல்வேறு காரணங்களுக்காக முடக்கப்பட்ட கிராம சபைக் கூட்டம் பெரும் எழுச்சியோடு அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளில் நடைபெறுகிற நேரத்தில், முதல்வராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாக மக்கள் மன்றத்தை அலங்கரிக்க வரும் மக்களின் முதல்வரை மதுரை மண் மகிழ்வோடு மழைதூவி வரவேற்று மகிழ்கிறது.

Also Read: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் முதல் கிராம சபைக்கூட்டம்: பாப்பாப்பட்டி முக்கியத்துவம் பெறுவது ஏன்?