Viral
தனிமை சார்ந்த சிக்கல்களை தீர்ப்பதற்கு தனி அமைச்சர்... உலகத்தையே அச்சுறுத்தும் தனிமை மரணங்கள்!
இன்று நாம் எத்தனை தனிமையாக இருக்கிறோம் தெரியுமா?; பக்கத்து வீடுகளில் யார் இருக்கிறார்கள் என்பதே தெரியாது. நாமுண்டு நம் வேலை உண்டு என இருப்போம். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தாலொழிய அருகே வசிப்போரைப் பற்றி பெரியளவில் நாம் தெரிந்துகொள்ளும் வாய்ப்பே கிடையாது.
ஜப்பான் நாட்டிலும் இதே சூழல்தான் இருக்கிறது. ஆனால் வேறு விஷயமாக முடிகிறது. பக்கத்து வீட்டில் மரணம் நேர்ந்தால் கூட ஒன்றும் நடக்காது. நாற்றம் வந்து அடுத்த வீட்டின் கதவை தட்டும்போதுதான் சிறு அசைவேனும் ஏற்படும்.
ஒரு நிறுவனத்துக்கு தகவல் கொடுக்கப்படும். நிறுவனத்தார் வந்து காவலர்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே நுழைவார்கள். உள்ளே முதியவர் எவரேனும் இறந்து கிடப்பார். பல நாட்கள், சமயங்களில் பல வாரங்களுக்கு முன்பே இறப்பு நிகழ்ந்திருக்கும். யாருக்கும் தெரிந்திருக்காது. இறந்தவரின் உடல் அழுகி நாற்றம் எடுத்து அடைத்திருக்கும் கதவை தாண்டி வெளியே வருகையில் மட்டும்தான் சம்பவம் தெரியும். அதைக் காட்டிலும் முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? அருகே இருந்த வீட்டில் ஒரு முதியவர் இருந்தார் என்கிற விஷயமே அப்போதுதான் மற்றவர்களுக்குத் தெரியும்.
வீடுகளில் தனியே இருந்து இறந்து போகிறவர்களின் உடல்களை அகற்றுவதற்காகவே பல நிறுவனங்கள் ஜப்பானில் இயங்குகின்றன. சொல்லப் போனால் அத்தகைய நிறுவனங்களின் வளர்ச்சி கடந்த சில வருடங்களில் அதிகமாகி இருக்கிறது. அந்தளவுக்கு தனியாக இருந்து இறந்து போகிறவர்களின் எண்ணிக்கை அங்கு அதிகமாக இருக்கிறது.
எல்லா நாடுகளிலும் முதியவர்கள் இறப்பதுண்டு. இன்றைய சூழலில் வாரிசுகள் அனைவரும் அவரவர் வாழ்க்கைகளுக்குள் மூழ்கியிருப்பதால், பெரும்பாலான முதியவர்கள் தனிமையில்தான் இறந்து போகிறார்கள். ஆனால் அந்த இறப்புகள் எதுவும் ஜப்பான் நாட்டில் நேரும் இறப்புகளுக்குச் சமமாக முடியாது.
ஒரு மாதமாகியும் ஒருவரின் மரணம் அறியப்படாமல் இருக்கும் நிலையில்தான் ஜப்பானிய மக்களின் தனிமை இருக்கிறது. வீட்டு உரிமையாளருக்கு வாடகை நேராக வங்கிக் கணக்கிலிருந்து செலுத்தப்பட்டு விடும். இறந்த முதியவரின் வீடு சென்று பார்க்க யாருக்கும் வாய்ப்பில்லாத ஒரு வாழ்க்கை.
ஜப்பான் நாட்டின் மக்கள்தொகையில் கால்வாசி பேர் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள். 2050ஆம் ஆண்டிலெல்லாம் முதியோரின் எண்ணிக்கை 40% ஆகிவிடும் என்கிறார்கள். இத்தகைய தனிமை மரணங்களை அரசு வெளியிடுவதில்லை. ஆனாலும் சில ஆய்வு நிறுவனங்கள் கணக்கெடுத்து தரவுகளை வெளியிடுகின்றன. ஒரு வருடத்தில் மட்டும் குறைந்தபட்சமாக 30,000 பேர் இத்தகைய தனிமை மரணங்களில் உயிரிழப்பதாக கணக்கெடுப்புகள் குறிப்பிடுகின்றன.
இன்னும் ஒரு படி மேலே செல்வோம். பல காப்பீட்டு நிறுவனங்கள் மரணங்களை சுத்தப்படுத்துவதற்கான காப்பீடுகளை விற்கத் தொடங்கியிருக்கின்றன. வீட்டு உரிமையாளர்களுக்கான காப்பீடு. அதாவது உங்கள் வீட்டில் ஏற்படும் தனிமை மரணத்தை சுத்தப்படுத்தவும் குறிப்பிட்ட காலத்தில் நேரும் வாடகை இழப்புக்கும் காப்பீடு வழங்குகின்றன நிறுவனங்கள். இன்னும் சில காப்பீட்டு நிறுவனங்கள் கூடவே சுத்தப்படுத்தும் சடங்கையும் செய்து கொடுக்கின்றன.
எறும்பைப் போல் துறுதுறுவென உழைப்பவர்கள். தொழில்நுட்பத்தில் உயர்ந்தவர்கள். வசதியான வாழ்க்கை கொண்டவர்கள். இன்னும் பல செய்திகளால் குறிக்கப்பட்ட ஜப்பான் நாட்டு மக்களின் வாழ்க்கைகள் பெரும்பாலும் இத்தகைய தனிமை நிரம்பியதாகவே இருக்கிறது.
துர்நாற்றத்தின் காரணமாக மரணங்கள் கண்டறியப்படுவது அதிகமென்றாலும் வாடகை செலுத்தப்படாமல் கண்டுபிடிக்கப்படும் சம்பவங்களும் நேர்கின்றன. இன்னும் பல இடங்களில் தபால் பெட்டியில் எடுக்கப்படாமல் குவிந்துகிடக்கும் தபால்களும் தனிமை மரணங்களை அறிவிக்கும் காரணியாக இருக்கின்றன.
ஜப்பான் நாட்டில் தனிமை வாழ்க்கை அதிகமாக விரும்பப்படுவதற்கு என்ன காரணம்?
அங்கிருக்கும் குடும்ப உறவுகளில் பெரிய மாற்றங்கள் நேர்ந்திருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். மூன்று தலைமுறையினரும் ஒன்றாக வசிக்கும் குடும்பங்கள் சில பத்து வருடங்களுக்கு முன் வரை ஜப்பான் நாட்டில் மிகச் சாதாரணமான விஷயமாக இருந்தது. ஆனால் தற்போதைய சூழலில் பெரும்பாலான ஜப்பானியர்கள் தனியராகவே வாழ்ந்துவிட விரும்பும் தன்மை அதிகரித்திருக்கிறது.
முதுமையடையும் ஆண்கள் யாரிடமும் உதவி கேட்கத் தயங்குகிறார்கள். வேலைகளில் இருந்து ஓய்வு பெற்றதும் சமூகத்துடன் அவர்கள் கொண்டிருந்த ஒரே உறவும் அற்றுப்போகிறது. எப்போதுமே வேலை, வீடு என வாழ்ந்து வந்தவர்களுக்கு வேலைக்கான காலம் முடிந்ததும் வீடு மட்டுமே மிஞ்சுகிறது. அந்த வீட்டிலும் உடன் வாழவென யாரும் இருப்பதில்லை. அவர்களின் நட்பு வட்டம் கூட அலுவலகத்தை தாண்டி வேறு இருப்பதில்லை. மொத்த வாழ்க்கைகளையும் அலுவலகத்துக்குள்ளேயே புதைத்துக் கொள்கிறார்கள்.
காதல், மனைவி, தந்தை, தாய், சகோதரி, சகோதரன் போன்ற எல்லா உறவுகளையும் தேவையற்ற சுமைகளாகப் பார்க்கும் சிந்தனை அங்கு வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. அடிப்படையில் எல்லா உறவுகளும் பணத்தை நிர்பந்திக்கும் விஷயங்களாகப் பார்க்கப்படுவதால் முடிந்தவரை உறவுகளின்றி வாழ்வதே சிறப்பு என்கிற மனநிலையை அடைகிறார்கள்.
ஜப்பானில் மட்டும்தான் இத்தகைய பாரமான தனிமை உருவாகிறதா? இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் உலகம் முழுவதும் தனி நபர்களைத்தான் அதிகம் உருவாக்குகிறது என்கிறார்கள். தனியாக இருப்பது மிகச் சுலபம். பெரிய அளவுக்கு சுதந்திரமும் கொண்டது. யாரைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. யாரின் கவலைகளுக்கும் நாம் துன்பப்பட வேண்டியதில்லை. இந்த வாக்கியங்கள்தாம் மரணத்தையே தனிமையாக்கும் வேலைகளை செய்கின்றன.
உலகெங்கும் இத்தகைய தனிமை வாழ்க்கைகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன என்பதற்கு அச்சமூட்டும் ஓர் உதாரணம் இருக்கிறது. 2018ஆம் ஆண்டில் பிரிட்டன் நாடு, ‘தனிமை’க்கு என்றே ஒரு அமைச்சரை நியமித்தது. நாட்டில் அதிகரித்து வரும் தனிமை மற்றும் தனிமை சார்ந்த சிக்கல்களை குறைப்பதே இந்த துறை அமைச்சரின் பிரதான பணி.
யோசித்துப் பாருங்கள்.
கடைசியாக குடும்பத்துடன் நீங்கள் அதிக நேரம் செலவழித்தது எப்போது?
உங்கள் பெற்றோருக்கென நேரம் ஒதுக்கியது எப்போது?
நண்பர்களுடன் அமர்ந்து அரட்டை அடித்தது எப்போது?
எதிர்காலத்துக்கு பயன்படுமென பார்த்து நீங்கள் உருவாக்கிக்கொண்ட நட்புகள் எத்தனை?
நீங்கள் அறிந்திராத இன்னொரு மனிதனுக்காக முன் நின்று எப்போதேனும் போராடியிருக்கிறீர்களா?
இவை அனைத்திலும்தான் மனிதம் இருக்கிறது. சமூகம் இருக்கிறது. வாழ்க்கை இருக்கிறது. மற்ற அனைத்திலும் பணமும் தனிமையும் மரணமும் மட்டுமே இருக்கிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!