Viral
பாஜக தேர்தலில் கொட்டி குவித்த கருப்புப் பணம்; SV.சேகர் வாக்குமூலம்: என்ன செய்யப்போகிறது வருமான வரித்துறை?
பா.ஜ.க பிரமுகர் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் ஸ்பேசசில், (Twitter Spaces) பா.ஜ.க தோற்றது குறித்து பேசுவது வைரலாக சமூக வலைதளங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
எஸ்.வி.சேகரின் ஒரு நண்பர் அவரிடம் கூறுகிறார் : ‘சாதி பொலிடிக்’ சில் போகும் போதுதான் எனக்கு ரொம்ப பயமாயிருக்கு. நாம் ‘இந்துக்களா’ உடைந்து போயிடுவோ மோன்னு... என்கிற நண்பருக்கு எஸ்.வி. சேகர் பதிலளிக்கிறார்.
‘இந்துக்களாக’ ஒண்ணு சேர முடியாது சார்.. நான் இன்னைக்குக் கூட ஒரு இண்டர்வியூவிலே சொல்லி இருக்கேன். ‘வேல்.. வேல்...ன்னு போனதாலே ஜெயிச்சிட முடியும்னு நெனைச்சா எப்படி முடியும்?’ அவரு வேல் வேல் வெற்றி வேல் என்பாரு... இன்னொருத்தன் ‘ஓம் நமசிவாயா’ என்பான், இன்னொருத்தன் ஓம்... நமோ... நாராயணா என்பான். பார்த்தசாரதி கோவிலுக்கு போறவங்க.. கபாலி கோயிலுக்கே வரமாட்டாங்க.. அப்படி இருக்கும் போது முண்டகக்கண்ணி அம்மன் கோவில் இருக்குது. வீரப்பசாமின்னு எத்தனையோ சாமி இருக்குது. அப்ப என்ன பண்ணியிருக்கணும்..
“வேல்... வேல் வெற்றிவேல்” யாத்திரைக்கு பதிலா... இறைநம்பிக்கை யாத்திரைன்னு நடத்தி கடவுள் நம்பிக்கை உள்ளவங்கள ஒண்ணு சேர்த்திருக்கணும். மோடியை கூப்பிட்டு வேல்... வேல்... வெற்றி வேல்னு சொல்ல வச்சு.... அவரை ஒரு ராசிபுரத்துக்கு கூப்பிட்டு - பேச வச்சு, மோடி வந்து பேசினாலும் தோற்கடிப்பேன்னா அவரை பண்றது... இப்படி சேகர் பேசியதும் அவரது நண்பர் இடைமறித்து பேசுகிறார்..
அந்தத் தொகுதியிலே இ.பி.எஸ். வந்து பேசுராறு.. மோடி படமே வைக்கலங்க... சார்.. மோடிப் படமே.... நம்ப பி.ஜே.பி. கேண்டிடேட்டுங்களுக்காக... சொல்லிவிட்டு பின்னர் எஸ்.வி.சேகர் தொடர்கிறார். “நான் கேள்விப்படுறேன்.... ஒவ்வொரு பி.ஜே.பி. கேண்டிடேட்டுக்கும் 13 கோடி ரூபாய் கொடுத்திருக்காங்க.. இப்ப தோல்வி அடைஞ்சவங்களும் ஜெயிச்சவங்களும் கணக்கு கொடுக்குறாங்களா?” - இவ்வாறு எஸ்.வி.சேகரும், அவரது பி.ஜே.பி. நண்பரும் அலசுகிறார்கள்.
இந்த இருவரிடையே நடைபெற்ற பேச்சு பல உண்மைகளை உடைத்தெறிந்தாலும் இங்கே முக்கியமாக கவனிக்கத்தக்கது, பி.ஜே.பி சார்பில் அதன் வேட்பாளர் ஒவ்வொருவருக்கும் தேர்தலுக்காக 13 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது! நடந்த தேர்தலில் பி.ஜே.பி. சார்பில் 20 பேர் போட்டி யிட்டுள்ளனர்! ஒரு தொகுதிக்கு 13 கோடி ரூபாய் என்றால் 20 தொகுதிகளுக்கு 260 கோடி ரூபாய் பி.ஜே.பி செலவிட்டுள்ளது!
இதனை அந்தக் கட்சியின் முக்கியப் பிரமுகரான எஸ்.வி.சேகரே வெளிப்படுத்தி அது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது! இந்த 260 கோடி ரூபாயும் கருப்புப் பணமாகவே வந்திருக்கிறது! கருப்புப் பணத்தை ஒழித்துவிடவே அவதாரம் எடுத்துள்ளதாக மார்தட்டி மக்களை முட்டாளாக்கிடும் தந்திரங்களை மேற்கொண்ட பி.ஜே.பி.யின் “சுத்த சுயம்பிரகாசத் தன்மை” இங்கே தோலுரிந்து, உண்மை சொரூபம் வெளியாகிறது.
நடந்து முடிந்த தேர்தலுக்கு முன் எதிர்க் கட்சியினர்களின் வீடுவீடாகச் சென்று தனையிட்ட வருமான வரித்துறை - இப்படி வெளிப்படையாக சேகர் அறிவித்தபின்னும் வாலாய் இருப்பதேன்? இந்தத் தொகையை பி.ஜே.பி.யின் தலைமை எப்படி ஈட்டியது, தேர்தல் கமிஷன் நாடெங்கும் வாகன சோதனையிட்ட போதும் - வருமான வரித்துறை பல வீடுகளுள் புகுந்து சோதனை செய்த பின்னும் எப்படி இந்தப் பணம் பி.ஜே.பி வேட்பாளர்களுக்கு வந்து சேர்ந்தது? குறைந்த பட்சம் வருமான வரித்துறை எஸ்.வி.சேகரை அழைத்து விசாரிக்குமா? கருப்புப் பணத்தை ஒழித்து விட்டதாக கூறிடும் பா.ஜ.க. ஆட்சியில் 260 கோடி ரூபாய் கருப்புப் பணம் 20 தொகுதிகளில் மட்டும் கரைபுரண்டோடியுள்ளது!
இது தவிர மேற்கு வங்கம், கேரளா, பாண்டிச்சேரி, அசாம் போன்ற மாநிலங்களில் எத்தனை ஆயிரம் கோடி கருப்புப் பணம் பி.ஜே.பி.யால் செலவிடப்பட்டிருக்கும்? மேற்கு வங்கத்தில் தேர்தலில் நின்று வெற்றிபெற்று அமைச்சர்களானவர்களைக் கூட 2014-ல் நடந்த நாரதா ஊழல் தொடர்பாக 2021 ஆம் ஆண்டு சி.பி.ஐ. கைது செய்கிறது.
இதோ; பி.ஜே.பி தேர்தலில் நடத்திய திருவிளையாடலை, கொட்டி குவித்த கருப்புப் பணம் குறித்து அந்தக் கட்சியின் முக்கியப் பிரமுகரே தகவல் தந்துள்ளார்! வருமான வரித்துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை, தேர்தல் கமிஷன் இவை எல்லாம் என்ன செய்யப் போகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!