Viral

கொரோனா வைரஸ் பிடியில் இருந்து தப்பிக்க கேரள போலிஸ் வெளியிட்ட அசத்தல் வீடியோ! - #COVID 19

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவில் 127 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகப்படியாக மகாராஷ்டிர மாநிலத்தில் 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக கேரளாவில் 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 65 பேர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா முழுவதும் பொது இடங்கள் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

கோயில்கள், சர்ச்சுகள் உள்பட வழிபாட்டு தலங்களிலும் பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டம் சொற்ப அளவிலேயே உள்ளன. கேரளாவில் இதுவரை 16 பேருக்கு வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடைசியாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 2 பேரும் மருத்துவமனைகளில் முதல்கட்ட பரிசோதனைக்கு பின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் பிறகு இவர்கள் ஆட்டோ, டாக்சியில் வீடுகளுக்கு சென்றனர். மேலும் கடைகள், உறவினர் வீடுகளுக்கும் சென்றதாக கூறப்படுகிறது. உடல்நிலை பாதிக்கப்பட்ட பிறகுதான் மீண்டும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கேரளத்தில் ஆளும் பினராய் விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கூட்டணி அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

கேரள அரசின் சுகாதாரத்துறை ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களும் நடைபெற்று வருகின்றன.

கேரள போலிஸின் சமூக வலைத்தள பிரிவு சார்பில் நூதனமான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக சமூக வலைத்தளங்களான டுவிட்டர், முகநூல் பக்கங்களிலும் வாட்ஸ் அப் குழுக்களிலும் வித்தியாசமான முறையில் கேரள போலிஸார் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒருகட்டமாக, சில நாட்களுக்கு முன்பு பாகுபலி படத்தில் மகேந்திர பாகுபலி, ஒரு பெரிய இரும்புச் சங்கிலியை உடைத்து நொறுக்குவது போன்ற காட்சியை காண்பித்து, கொரோனா தொற்று சங்கிலியை உடையுங்கள் என்ற அர்த்தம் பொருந்தும் ‘Break the Chain‘ என்ற வாசகத்துடன் விளம்பரம் வெளியிட்டனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது.

‘அய்யப்பனும், கோஷியும்’ Kalakkatha என்ற வைரல் பாடல் பாடிய நஞ்சம்மா

இந்நிலையில் நேற்றையதினம் கேரள போலிஸார் வெளியிட்ட ஒரு அசத்தல் வீடியோ இணையத்தில் அனைவரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சமீபத்தில் வெளியாகி கேரளாவில் சக்கை போடுபோட்ட மலையாள படமான ‘அய்யப்பனும், கோஷியும்’ திரைப்படத்தில் உள்ள பாடல் ஒலிக்கிறது.

இந்த பாடலுக்கு ஏற்றவாறு கேரள போலிஸார் முகத்தில் கவசம் அணிந்து, கைகளை எப்படி கழுவ வேண்டும் என்று நடனம் ஆடி காண்பிக்கின்றனர். இந்த வீடியோவில் வரும் ‘களக்காட்டில் சந்தன மரம் வெகுவாக பூத்திருக்கு...’ எனத் தொடங்கும் பாடல் கேரளாவில் வெகுபிரபலம். இந்த பாடலை முணுமுணுக்காத வாய்களே இல்லை எனலாம். இதன்காரணமாக இந்த பாடலைப் போட்டு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்த கேரள போலிஸார் அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.

கேரளாவில் கொரோனா ஏற்படுத்திவரும் பாதிப்பின் சோகத்தை மறந்து மக்கள் இந்த வீடியோவை இணையத்தில் தங்கள் உறவுகளுக்கு ஷேர் செய்து வருகின்றனர்.