Viral
“கட்டினா டாக்டர் பொண்ணுதான்; இந்த வரதட்சணை வேணும்”-IAS அதிகாரியின் விருப்பத்தால் வியப்பில் ஆழ்ந்த மக்கள்!
திருநெல்வேலி மாவட்டத்தில் உதவி ஆட்சியராகப் பணிபுரிந்து வருகிறார் சிவகுரு பிரபாகரன். இவர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள மேல ஒட்டங்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.
விவசாயக் கூலிகளாகவும், கீற்று பிண்ணும் தொழிலிலும் ஈடுபட்டு சிவகுரு பிரபாகரனை அவரது பெற்றோர் வளர்த்தெடுத்திருக்கிறார்கள். சிவகுரு பிரபாகரன் சிறுவயதில் இருந்தே தன் ஊர் மக்கள் படும் கஷ்டத்தை கண்முன்னே பார்த்து வளர்ந்தவர். மக்கள் நலனில் மிகுந்த அக்கறையோடும் இருப்பவர். ஆகையால், கலெக்டராகி ஊர் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.
தன் பெற்றோருடன் இணைந்து கீற்று பிண்ணும் வேலையைச் செய்துகொண்டே படிப்பைத் தொடர்ந்த சிவகுருவுக்கு முதலில் ரயில்வேயில் வேலை கிடைத்தது. அதன் பிறகு அங்கிருந்தபடியே, ஆட்சியர் தேர்வுக்கு படித்து தற்போது நெல்லை மாவட்டத்தின் சப் கலெக்டராக பணியாற்றி வருகிறார்.
மேல ஒட்டங்காடு மக்களின் நலனுக்காக ஏ.பி.ஜே கிராம வளர்ச்சிக் குழுவை உருவாக்கி அதன் மூலம் மருத்துவம் உள்ளிட்ட நலத்திட்டப் பணிகளை செய்து வருகிறார். இந்நிலையில், சிவகுரு பிரபாகரனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக பெற்றோர் பெண் தேடும் படலத்தில் இறங்கியுள்ளனர்.
அப்போது, திருமணம் செய்வதாக இருந்தால் மருத்துவராக உள்ள பெண்ணையே திருமணம் செய்வேன் என்றும், நான் கேட்கும் வரதட்சணையை கொடுக்க மனமுள்ள பெண்ணே வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். அது என்ன என பெற்றோர் கேட்டதற்கு, எனக்கு மனைவியாக வரும் பெண், நம் ஊர் மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கவேண்டும். வேறு எதுவும் எனக்குத் தேவையில்லை என சிவகுரு பிரபாகரன் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அறிந்த சென்னை நந்தனம் அரசு கல்லூரியில் பணிபுரியும் கணித பேராசிரியர், சிவகுரு பிரபாகரனின் வரதட்சனை கண்டிஷனுக்கு ஒப்புக்கொண்டு மகளை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். மேலும், அவரது மகளான மருத்துவர் கிருஷ்ணபாரதியும் இதற்குச் சம்மதித்துள்ளார்.
இதனையடுத்து, மேல ஒட்டங்காடு கிராமத்தில் விவசாயிகள் உள்ளிட்ட கிராம மக்களின் முன்னிலையிலேயே சிவகுரு பிரபாகரன், கிருஷ்ணபாரதியின் திருமணம் நடைபெற்றுள்ளது. பின்னர் அவர்களுக்கு அக்கிராம மக்கள் சிறந்த வரவேற்பை அளித்துள்ளனர். இந்தச் செய்தி சுற்றுவட்டார மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!