Viral
“கொரோனா வைரஸ்” காதலை என்ன செய்யும்? : சீனப் பெண்ணை திருமணம் செய்த இந்திய இளைஞர் - சுவாரஸ்ய நிகழ்வு!
சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வூஹான் நகர மீன் சந்தையில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதி முதல் கொரோனா என்ற ஒரு வகை கொடிய வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. தற்போது இந்த வைரஸ் இந்தியா, ஜப்பான், தாய்லாந்து, சிங்கப்பூர் உட்பட 25 நாடுகளில் பரவி உள்ளது.
உலக நாடுகள் கொரோனா வைரஸ் குறித்து பீதியில் உறைந்திருக்கும் இத்தருணத்தில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் சீன பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
கனடா நாட்டில் படிக்கும்போது மத்திய பிரதேசத்தை சேர்ந்த சத்யார்த் மிஸ்ரா என்பவருக்கும், சீனாவின் ஜிஹாவோ வாங் என்ற பெண்ணிற்கும் இடையே காதல் மலர்ந்தது.
இதையடுத்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி மணப்பெண்ணான ஜிஹாவோ வாங், அவரது தந்தை சிபோ வாங், தாயார் ஜின் குவான் மற்றும் இரண்டு உறவினர்கள் கடந்த புதன்கிழமை மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்சார் நகருக்கு வந்தனர்.
அப்போது மத்திய பிரதேச மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்கள் அனைவரையும் கண்காணித்து மருத்துவ பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் இவர்களில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதியானது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்சாரில் சத்யார்த் மிஸ்ராவுக்கும், சீனப்பெண் ஜிஹாவோ வாங்குக்கும் இரு வீட்டார் முன்னிலையில் சிறப்பாக திருமணம் நடந்தது.
இந்தத் திருமணம் குறித்து மணப்பெண் ஜிஹாவோ வாங் கூறுகையில், ‘‘நாங்கள் கனடாவில் ஒரு கல்லூரியில் சந்தித்தோம். நான் கல்லூரியில் சேர்ந்தபோது, அவர் (சத்யார்த் மிஸ்ரா) எனக்கு நிறைய உதவிகள் செய்தார். பின்பு நாங்கள் 5 ஆண்டுகளாக காதலித்தோம். பெற்றோரின் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவுசெய்து தற்போது அதை நிறைவேற்றி இருக்கிறோம்.
என் உறவினர்கள் 4 பேர் திருமணத்திற்காக சீனாவிலிருந்து வரவிருந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் பிரச்னையால் விசா பெற முடியவில்லை. எனவே, அவர்கள் திருமணத்திற்கு வர இயலவில்லை’’ என்றார்.
மேலும் அவர் கூறும்போது, ‘‘சீனாவில் நாங்கள் வசிக்கும் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை. அதனால் எத்தனை மருத்துவ பரிசோதனை செய்ய விரும்பினாலும் அதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்’’ என்றும் குறிப்பிட்டார்.
சத்யார்த் மிஸ்ரா-ஜிஹாவோ வாங் தம்பதிக்கு சீனாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதற்கும் இந்தக் காதல் தம்பதியர் முடிவு செய்துள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!