Viral

“டாக்டர்கள், என்ஜினியர்கள் மட்டுமே மகிழ்ச்சியா இருக்கிறதா நினைக்காதீங்க” - சவுதி பள்ளியின் வைரல் கடிதம்!

தற்போதைய காலகட்டத்தில் படிப்பு எந்த அளவுக்கு முக்கியமாக கருதப்படுகிறதோ அதே அளவுக்கு பெற்றோருக்கான கவுரமாகவும் கருதப்பட்டு வருகிறது. குழந்தைகளின் எண்ண ஓட்டங்களை அறியாமல் அவர்கள் குறைவான மதிப்பெண் எடுத்துவிட்டால் அவர்களை வசைபாடி நம்பிக்கையைச் சிதைத்து வருகின்றனர் பெற்றோர்கள்.

குழந்தைகளின் மனநிலையையும், அவர்களின் சூழலையும் அறியாமல் மதிப்பெண்களுக்காக அவர்களைச் சாடுவது தவறு என உணர்த்தும் வகையில் சவுதியின் தம்மம் பகுதியில் உள்ள சர்வதேச இந்திய பள்ளியின் முதல்வர், தனது பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், “விரைவில் பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ளன. உங்கள் பிள்ளைகள் ஒழுங்காக தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்ற ஆவல் உங்களுக்கு இருக்கும் என்று தெரியும். ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். தேர்வு அறையில் இருக்கும் மாணவர்களில் கணிதத்தின் மீது புரிதல் இல்லாதவர்கள் கலைஞனாக மாறக்கூடும்.

வரலாறு மற்றும் ஆங்கிலப் புலமை குறித்து அக்கறை கொள்ளாதவர்கள் தொழில் முனைவோராகக் கூடும். வேதியியலை பொருட்டாக நினைக்காதவர் இசையமைப்பாளராகக் கூடும். இயற்பியலை விட உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து விளையாட்டு வீரனாக / வீராங்கனையாகக் கூடும்.

தேர்வில் உங்கள் குழந்தை அதிக மதிப்பெண்கள் எடுத்தால் அது அருமையான ஒன்று. ஆனால் உங்கள் மகளோ, மகனோ எடுக்காமல் போனால் அவர்களின் தன்னம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் நடந்துகொள்ளாதீர்கள். இது வெறும் தேர்வுதான். எல்லாம் சரியாகும் என ஆறுதல் கூறுங்கள். இதனைச் தொடர்ந்து செய்து வாருங்கள்.

தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் எடுப்பதினால் அவர்களின் கனவுகளும், திறமைகளும் பறிபோய்விடாது. ஆகையால் இந்த உலகத்தில் வெறும் மருத்துவர்களும், பொறியாளர்களும் மட்டுமே சந்தோஷமாக வாழ்வதாக எண்ணாதீர்கள்” என அந்தக் கடிதத்தில் அந்த நல்லாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

ஏதோ ஒரு நால்வர் நம்மைத் தவறாக பேசிவிடக்கூடாது என்பதற்காகவும், சுய கவுரவத்துக்காகவும் குழந்தைகள் மீது நமது எண்ணங்களை திணிப்பதும் குற்றச்செயலை செய்வதும் ஒன்றே என்று இந்தக் கடிதத்தை படித்த பலர் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.