Viral
‘கோச்சானிக்கு வயசு 67- லட்சுமிக்கு வயசு 66’ : திருமணத்திற்கு காத்திருக்கும் காதல் ஜோடி- இது கேரள விநோதம்!
கேரள மாநிலத்தின் திருச்சூர் ராம வர்மபுரத்தில் உள்ளது அந்த அரசு முதியோர் இல்லம். அங்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சேர்ந்த கோச்சானியனுக்கும் (67), சுமார் 11 மாதங்களுக்கு முன்பு சேர்ந்த லட்சுமி அம்மாள் (66) ஆகியோருக்கு திருமணம் நடைபெற இருக்கிறது.
இருவருக்குமிடையே வெறும் இரண்டே மாதங்களில் உருவான காதல் அல்ல இது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளை கடந்துள்ளது இவர்களின் அறிவிக்கப்படாத காதல். “எப்போதும் லைஃப் பார்ட்னர் வேண்டும்; அன்பு 50,60 ஆன போதும் மலரும்” என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த கேரள ஜோடியின் காதலும் அமைந்துள்ளது.
லட்சுமி, கோச்சானி இடையே காதல் மலர்ந்த கதை:
திருச்சூர் தைக்காட்டுச்சேரியைச் சேர்ந்தவர் லக்ஷ்மி அம்மாள். சுமார் 21 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி அம்மாளின் கணவர் கிருஷ்ணன் ஐயர் உடல்நலக் குறைவு காரணமாக படுத்தப் படுக்கையில் இருந்தார். சமையல் வேலை செய்து வந்த கிருஷ்ணன் ஐயர் உயிரிழக்கும் சமயத்தில் அவருக்கு உதவியாளராக இருந்த கோச்சானியிடம் தன் மனைவி லக்ஷ்மி அம்மாளை கவனித்துக்கொள்ளச் சொல்லி கேட்டுள்ளார்.
அதன்படி, பல ஆண்டுகளாக கோச்சானியும் எந்த சுணக்கமும் இல்லாமல் லட்சுமி அம்மாளை அன்போடும், பரிவோடும் கவனித்து வந்திருக்கிறார். வயதானதால் லட்சுமியை ஒழுங்காக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக 11 மாதங்களுக்கு முன்பு திருச்சூரில் உள்ள அரசு முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளார்.
கிருஷ்ணன் ஐயரின் சமையல் வேலையையும் கோச்சானியே ஒருங்கிணைத்து வருவதால் அதன் மூலம் வரும் வருவாயில் லட்சுமிக்கும் தனக்கும் செலவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் கோழிக்கோடு பகுதிக்கு வேலை நிமித்தமாக சென்றிருந்த கோச்சானி திடீரென சாலையில் மயங்கி விழுந்துள்ளார்.
இதனையறிந்த சில தன்னார்வலர்கள் கோச்சானியை வயநாட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளனர். இதனையடுத்து விசாரித்ததில் லட்சுமி தங்கியிருக்கும் ராமவர்மபுரம் முதியோர் இல்ல முகவரி மட்டுமே அவரிடம் இருந்ததால் வயநாட்டில் இருந்து திருச்சூர் முதியோர் இல்லத்துக்கு கோச்சானி மாற்றப்பட்டார்.
அங்கு லட்சுமியும், கோச்சானியும் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர அன்பு பாராட்டி கவனித்து வந்துள்ளனர். அப்போது இவர்கள் இருவருக்குள்ளும் பல ஆண்டுகளாக மறைந்திருந்த காதல் வெளிப்பட்டுள்ளது. இதனை அறிந்த இல்ல கண்காணிப்பாளர் ஜெயக்குமார் லட்சுமிக்கும், கோச்சானிக்கும் திருமணம் செய்து வைக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
அதற்காக, அதிகாரிகளிடம் இருந்து அனுமதி பெற்று, திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறார் ஜெயக்குமார். அதன்படி, வருகிற டிசம்பர் 30ம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகளை அந்த இல்லத்தில் வசிப்பவர்களே செய்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் திருமணம் ஆன பிறகும் அவர்கள் இருவரும் தங்குவதற்கு அந்த முதியோர் இல்லத்திலேயே அறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
லட்சுமி-கோச்சானி இருவருக்கும் நடைபெறும் திருமணம் குறித்து அவர்களிடமே கேட்டபோது, “எவ்வளவு நாட்கள் எங்களால் இணைந்து வாழ முடியும் என தெரியவில்லை. ஆனால் இந்த நிகழ்வு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. என்னுடன் ஒருவர் துணையாக இருக்கிறார் என நினைக்கும் போது மகிழ்வாக இருக்கிறது” என லட்சுமி அம்மாளும், எங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அனைவரும் உதவிப்புரிவது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது” என கோச்சானியும் கூறியுள்ளார்.
அரசு முதியோர் இல்லத்தில் முதல் முறையாக 60 வயதை கடந்த காதல் ஜோடிக்கு திருமணம் நடத்த இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏதோ சினிமா பாணியிலான கதை போன்று லட்சுமி அம்மாள் கோச்சானியின் காதல் கதை புலப்பட்டாலும் முன்பே குறிப்பிட்டதை போல காதலுக்கு கண் இல்லை என்பது போல வயதும் தடையில்லை என இந்த ‘மாயநதி’ இணை நிரூபித்துள்ளது.
Also Read
-
மசூதியை ஆய்வு செய்ய அனுமதி - ”மதவாதத்துக்கு துணை போகிறதா உச்சநீதிமன்றம்?” : பிருந்தா காரத் கேள்வி!
-
குடியரசுத்தலைவர் உரையில் இடம் பெறாத ’சோசலிஸ்ட்’, ’மதச்சார்பற்ற’ சொற்கள் : டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு!
-
நாளை உருவாகும் FENGAL புயல் : 2 நாள் சென்னைக்கு கன மழை எச்சரிக்கை!
-
“அதானி ஊழலை திசைத் திருப்ப பார்க்கிறார்” - மருத்துவர் ராமதாஸ் அறிக்கைக்கு வைகோ கண்டனம்!
-
ரூ.27.34 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட 7 சுற்றுலாத் தலங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!