Viral
”இதுதான் நாங்க...!” : இந்து குடும்பத்தின் திருமணத்திற்காக மிலாடி நபி விழாவைத் தள்ளி வைத்த முஸ்லிம்கள்
கேரள மாநிலம் கோழிக்கோடு அடுத்த செம்மாங்குழியைச் சேர்ந்தவர்கள் நாராயணன் நம்பியார் - இந்திரா தம்பதியர். இவர்களுக்கு பிரதியுஷா என்ற மகள் உள்ளார். இவர்களது வீடு செம்மாங்குழியில் உள்ள இடிவெட்டி ஜூம்மா மசூதிக்கு மிக அருகில் அமைந்துள்ளது.
எப்போதும் மசூதியில் வழிபாடு நடக்கும்போது, நாராயணன் நம்பியாரின் வீட்டில் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். அதற்காக நாராயணன் நம்பியாரின் குடும்பத்தினர் முகம் சுளித்ததில்லை. மாறாக மசூதிக்கு வருவோருடன் நல்ல நட்பையே கடைபிடித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நாராயணன் நம்பியாரின் மகள் பிரதியுஷாவுக்கும், பாலாரியைச் சேர்ந்த வினு பிரசாத் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு, நவம்பர் 10-ம் தேதி திருமணம் நடத்த உறவினர்களால் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, திருமணத்திற்கான ஏற்பாடுகளை நாராயணன் நம்பியாரின் உறவினர்கள் செய்து வந்தனர்.
இதற்கிடையே, மசூதியில் மிலாடி நபிக்காக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதில், மிலாடி நபி கொண்டாட்டம், பிரதியுஷா - வினு பிரசாத் திருமண விழாவை பாதிக்கக்கூடும் என்பதை உணர்ந்த அவர்கள் பிரதியுஷா திருமணத்திற்காக மிலாடி நபி கொண்டாட்டத்தை 17ம் தேதிக்கு தள்ளி வைக்க முடிவு செய்தனர்
இதுகுறித்து பிரதியுஷா குடும்பத்தினரிடமிருந்து எந்த கோரிக்கையும் வராத நிலையில் மசூதி நிர்வாகிகளின் இந்த செயல் பிரதியுக்ஷா குடும்பத்தினரை நெகிழச்செய்துள்ளது.
திருமணம் முடிந்த கையோடு மணப்பெண் பிரதியுஷா தனது கணவர் வினு பிரசாத் மற்றும் உறவினர்களுடன் சென்று மசூதி நிர்வாகிகளை சந்தித்து தனது நன்றியை தெரிவித்தார்.
இதுகுறித்து மசூதி செயலாளர் அப்துர் ரகுமான் கூறும்போது, “திருமணம் என்பது ஒருவரின் வாழ்வில் நடைபெறும் முக்கிய நிகழ்வு. மிலாடி நபி கொண்டாட்டம் அதற்கு இடையூறாக இருக்க வேண்டாம் என்று மசூதி நிர்வாகிகள் முடிவு செய்தோம். எனவேதான் திருமணத்திற்காக மிலாடி நபி விழாவை தள்ளி வைத்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதியுஷாவின் தாய் இந்திரா கூறுகையில், “கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் மசூதிக்கு வருபவர்களுடன் நல்ல உறவை பேணுகிறோம். நாங்கள் வேண்டுகோள் விடுக்கவில்லை என்றபோதிலும், அவர்களாகவே முன்வந்து கொண்டாட்டங்களை தள்ளி வைத்ததுடன், அனைத்து உறுப்பினர்களும் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை ஆசீர்வதித்து நெகிழ்ச்சியாக இருந்தது.
ஒருவேளை திருமணத்துக்கு நாள் குறிக்கும் போதே மிலாடி நபி எனத்தெரிந்திருந்தால் வேறு ஒரு நாள் பார்த்திருப்போம் எங்களுக்குள் மதம் வேறாக இருந்தாலும், இதயம் அன்பால் இணைந்திருக்கிறது" என்றார்.
இந்து தம்பதியின் திருமணத்திற்காக மிலாடி நபி விழா தள்ளி வைக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் ஆச்சர்யமாகப் பேசப்படுவதுடன் மசூதி நிர்வாகிகளுக்கும் பாராட்டுகள் குவிகிறது. என்னதான், இந்துத்துவா அமைப்புகள் மத பிரச்னையை உண்டு செய்ய நினைத்தாலும், சகோதர பாசத்துடன் இருக்கும் மக்களை அந்தச் செயல்களால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது.
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!