Viral

வார இறுதிநாளை வாழ்க்கையின் இறுதிநாளாக மாற்றிக்கொண்ட போதை நண்பர்கள் - கர்நாடகாவில் நடந்த பயங்கரம்!

சமூக வலைதளங்களில் வைரலாகும் பல வீடியோக்களில் அபாயகரமான சூழ்நிலைகளில் எடுக்கப்பட்டதே அதிகம் காணப்படுகிறது. அதுபோல, கர்நாடகாவின் கல்புர்கி மாவட்டத்தின் ஜப்ராபாத் பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் நடந்த வீடியோவும் வைரலாகியுள்ளது.

அந்த பகுதிக்குச் சென்ற இளைஞர்கள் நால்வரில் ஒருவர் மிஜ்குரி பகுதியைச் சேர்ந்த ஜாஃபர் ஆயுப். நால்வரும் வார இறுதிநாளை குடித்துவிட்டு பொழுதை கழிப்பதற்காக குவாரியில் உள்ள குட்டையில் நீச்சல் அடித்துள்ளனர்.

ஜாஃபருடன் வந்த சக போதை நண்பர்கள் மூவரும் நீச்சல் அடித்துவிட்டு கரை திரும்பினர். முழு போதையில் இருந்த ஜாஃபர் மீண்டும் குட்டையில் குதித்து நீச்சல் அடித்தபோது, அதனை சக நண்பர்கள் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, உடன் இருந்த நண்பர் ஒருவர், நீருக்குள் மூழ்கி மூச்சை அடக்குமாறு கேட்க அவ்வாறு ஜாஃபரும் செய்துள்ளார். போதையில் இருந்த ஜாஃபர் அதன்பிறகு, தொடர்ந்து நீச்சலடிக்க முடியாமல் திணறியுள்ளார்.

கொஞ்சம் கொஞ்சமாக கரைக்கு அருகே வந்த ஜாஃபர் நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளார். அப்போது கரையில் நின்றுக்கொண்டிருந்த மற்றொரு நண்பரை அவரை காப்பாற்ற முயலாமல் சிரித்துக் கொண்டிருக்க, மேலும் நீரில் மூழ்கிய ஜாஃபர் சிறிது நேரத்தில் காணாமல் போயுள்ளார். அதுவரை இன்னொரு நண்பர் அந்த செய்கைகள் அனைத்தும் வீடியோ எடுத்து கிண்டலடித்து ரசித்துக் கொண்டிருந்தார்.

வெகுநேரமாகியும் ஜாஃபர் கரைக்கு திரும்பாததும் உண்மையை உணர்ந்த நண்பர்கள் உடனே போலிஸாருக்கு தெரிவிக்க, தீயணைப்புத் துறையினருடன் வந்த போலிஸார் ஆழமான குட்டையில் மூழ்கிய ஜாஃபரை சடலமாக மீட்டனர்.

பின்னர் போலிஸ் விசாரணையில், நீரில் மூழ்கிய ஜாஃபர் மூச்சை அடக்கி விளையாடுவதாக நினைத்துக்கொண்டோம் என உடன் இருந்த நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

"கூடா நட்பு கேடாய் முடியும்" என்ற சொற்றொடர் போல், வார இறுதிநாளை குடிகார நண்பர்களுடன் சேர்ந்து குதூகலத்தில் ஈடுபட்டது வாழ்க்கையையே இறுதிநாளாக ஆக்கிவிட்டது.