Viral

''சாதியைப் பார்த்து ப்ளுடிக் தருகிறதா ட்விட்டர் நிறுவனம்'' - குற்றச்சாட்டால் எழுந்த பரபரப்பு!

உலகில் பெருமளவு பயனாளர்கள் கொண்ட ஒரு சமூக வலைதளம் ட்விட்டர். முக்கியத் தகவல்களை குறும்பதிவாக பகிரப்படும் தளமாக ட்விட்டர் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ட்விட்டர் நிறுவனம் பயனாளர்கள் மத்தியில் சாதிய பாகுபாடு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து #cancelallblueticks என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் வைரலானது.

பத்திரிகையாளரும், சமூக செயற்பாட்டாளருமான திலீப் மண்டலின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. பின்னர் அது சரிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தனது ட்விட்டர் கணக்கிற்கு ப்ளூ டிக் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் அவரது பதிவுகளை வைத்து ட்விட்டர் நிறுவனம் ப்ளூ டிக் தர மறுப்பு தெரிவித்துள்ளது.

ட்விட்டரில் ஒரு பயனாளர் இணைந்து குறிப்பிட்ட காலம், பின்தொடர்வோர் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில்தான் ப்ளூ டிக் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஆனால், ட்விட்டரில் இணைந்த சில நாட்களிலேயே அமித்ஷா மகன் ஜெய்ஷாவிற்கு மட்டும் ப்ளூ டிக் எப்படி வழங்கப்பட்டது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், ஜெய்ஷாவை வெறும் 218 பேர்தான் பின் தொடர்வோர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் பிரபலங்களின் பெயர்களில் போலியான கணக்குகள் தொடங்கப்படக்கூடாது என்ற காரணத்தினால் சமூக வலைதள நிறுவனங்கள் உணமையான கணக்கை சரிப்பார்த்து ப்ளூ டிக் வழங்குகின்றன.

ஆனால், ட்விட்டர் தளத்தில் வழங்கப்படும் ப்ளூ டிக் என்பது வெறும் வெரிஃபிகேஷன் அடையாளமாக இல்லாமல் அரசியல், சமூகம், சாதிய அடிப்படையிலேயே வழங்கப்படுவதாகப் பலரும் குற்றம் சுமத்தியுள்ளனர். மேலும், சிறுபான்மை மக்களுக்கு இந்தப் ப்ளூ டிக் கிடைப்பதில்லை எனப் புகார் எழுந்துள்ளது.

பத்திரிகையாளரும், சமூக செயற்பாட்டாளருமான திலீப் மெண்டல், ட்விட்டர் நிறுவனம் பயனாளர்கள் மத்தியில் சாதிய பாகுபாடு பார்ப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், #verifyscstobcminority என்கிற ஹேஸ்டேகை தொடங்கினார். இதேபோல் #JaiBhimTwitter, #CasteistTwitter ஆகிய ஹேஷ்டேக்குகளும் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றன.