Viral

3 வயதில் தினமும் கிரிக்கெட் பயிற்சி: அடித்து நொறுக்கும் லிட்டில் மாஸ்டர் - வைரல் வீடியோ

கிரிக்கெட் என்பது பரந்துபட்டு ஒரு விளையாட்டாகவும், வியாபார தளமாகவும் பார்க்கப்பட்டாலும், பல்வேறு இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட்டை தங்கள் வாழ்நாள் லட்சியமாகவே கொண்டுள்ளனர். அதனாலேயே கபில்தேவ் முதற்கொண்டு சச்சின், ஷேவாக், தோனி, விராட் என பல கிரிக்கெட் வீரர்களை நம் இந்திய ரசிகர்கள் இன்றளவும் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

இந்திய வீரர்கள் மட்டுமல்லாமல் மற்ற நாட்டு வீரர்களின் ஆட்டத் திறன்களும் அனைவராலும் ரசிக்கப்பட்டும் கவரப்பட்டும் வருகிறது. ஏனெனில் முன்பு குறிப்பிட்டது போன்று கிரிக்கெட்டை பலர் வெறும் விளையாட்டாகவும், சிலர் தனது லட்சியமாகவும் கருதுகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியில் சேர வேண்டும் என பலர் நித்தமும் துடித்துக்கொண்டும், அதற்கான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அது சிலருக்கே கிட்டுகிறது.

தற்போது இந்த கிரிக்கெட் இளசுகளை மட்டுமல்லாமல் சிறுசுகளையும் விட்டுவைக்கவில்லை என்றே கூறலாம். நிகழ்காலத்தில் கிரிக்கெட் போட்டிகளை ரசிக்காதவர்களோ பார்க்காதவர்களோ இருப்பது அரிதே. அந்த வகையில் அண்மையில் இங்கிலாந்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 80 வயது மூதாட்டி ஒருவர் இந்திய அணி விளையாடுவதை நேரில் பார்த்து நெகிழ்ச்சி அடைந்தார்.

அதுபோல, இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து எம்.எஸ்.தோனி ஓய்வு பெற போகிறார் என்ற பரவிய யூகச் செய்திகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதித்தது. அதற்கு கிரிக்கெட் மற்றும் அதனை விளையாடும் வீரர்கள் மீது கொண்ட அதீத ஆர்வமும் ஈர்ப்புமே காரணம்.

இந்த நிலையில், கொல்கத்தாவில் சிறுவன் ஒருவன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியில் சேர வேண்டும் என்பதற்காக தனது 3 வயதில் இருந்து கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வருகிறான் சிறுவன் எஸ்.கே.ஷாஹித். இந்திய கிரிக்கெட் அணியின் Master Blaster ஆக இருக்கும் சச்சின் டெண்டுல்கரை ரோல் மாடலாக கொண்டு விளையாடி வருகிறார் சிறுவன் ஷாஹித்.

ஹேல்மெட், சேஃப் கார்டு, க்ளவுஸ் அணிந்து கிரிக்கெட் விளையாடும் சிறுவன் ஷாஹித்தின் வீடியோ Samsofshd SK என்ற ஃபேஸ்புக் கணக்கில் தினந்தோறும் பதிவிடப்பட்டு வருகிறது. இந்த சிறுவனது கிரிக்கெட் ஆட்டத்துக்கு சமூக வலைதளங்களில் பிரமாதமான வரவேற்பு கிட்டி வருகிறது. பலர் ஷாஹித்தின் வீடியோவை பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

சிறுவனின் ஆட்டத்திறனை கண்டு பின்னூட்டங்களில் (Comment) பலர் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல், மேன்மேலும் கிரிக்கெட் பயிற்சியை தொடர்வதற்கு உதவி செய்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

நாளுக்கு நாள் சமூக வலைதளங்களில் அநாவசிய செய்திகளும், வதந்திகளும் எத்தனையோ எத்தனை பரவினாலும், இது போன்று நற்பயக்கும் பதிவுகளும் ஒரு சேர உலா வருகின்றன என்ற இடத்தில் சமூக வலைதளங்களின் பயனை நாம் மறுக்க முடியாது.