Viral

காளை மாடு போடும் சாணத்தை பிடிக்க ஆவலோடு காத்திருக்கும் வட இந்தியக் குடும்பம் - இப்படியும் ஒரு காரணமா ?

ஹரியானா மாநிலம் கலன்வாலி பகுதியைச் சேர்ந்தவர் ஜனக்ராஜ். வியாபாரியான இவர் வீட்டில் இருந்த 40 கிராம் தங்க நகைகளை கழற்றி டப்பா ஒன்றில் வைத்திருக்கிறார்.

டப்பாவில் தங்க நகைகள் இருப்பதை அறியாத வீட்டில் உள்ள மற்றவர்கள், காய்கறி கழிவுகளுடன் அதனை வீட்டுக்கு வெளியே வீசி இருக்கின்றனர். அந்த காய்கறி கழிவுகளை அங்கே சுற்றி திரிந்த காளை மாடு ஒன்று சாப்பிட்டுள்ளது.

இது தெரியாமல் வீட்டில் உள்ள ஒருவர் தான் நகைகளை திருடி இருக்க வேண்டும் என நினைத்த ஜனக்ராஜ் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்.

அப்போதுதான், நகைகளை காய்கறி கழிவுகளுடன் தூக்கிப்போட்டதும், அதனை காளை மாடு சாப்பிட்டதும் தெரிய வந்துள்ளது. இதனால், பதற்றமடைந்த குடும்பத்தினர் அந்த காளை மாட்டினை தேடியுள்ளனர்.

5 மணி நேர தேடுதலுக்கு பின்னர் மாட்டை தேடிக் கண்டுபிடித்து வீட்டுக்கு கொண்டு வந்தனர். மேலும், மாடு சாணம் போட்டால் அதனுடன் நகைகளும் வந்து விடும் என்பதால், அதிக உணவுகளை கொடுத்து சாணம் போடுவதற்காக காத்திருக்கின்றனர்.

காளை மாடு ஒன்று சாணம் போடுவதற்காக ஒரு குடும்பமே காத்திருக்கும் சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதுவரை அந்த மாடு சாணம் போடாமல் இருப்பதால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.