Viral

'சாவர்க்கரும் சிப்பாய்க் கலகமும்...' : வாய்க்கு வந்ததை வரலாறாகச் சொன்ன அமித் ஷா - இதுதான் சங்கி வரலாறா ?

மகாராஷ்ட்ர மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வி.டி. சாவர்க்கருக்குப் ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படும் என பா.ஜ.க தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சாவர்க்கருக்கு மட்டும் விருது என்றால், எதிர்ப்பு கிளம்பும் என்று கருதி, சமூகநீதிப் போராளிகள் ஜோதிபாய் பூலே, இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் பூலே ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது வழங்க உள்ளதாக பா.ஜ.க அறிவித்துள்ளது.

பா.ஜ.க-வின் இந்தத் தேர்தல் அறிக்கைக்கு அரசியல் கட்சினர் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விடுதலைப் போராட்டத்தின்போது பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து, நாட்டையே காட்டிக் கொடுத்தவர் சாவர்க்கர்.

இந்து மகா சபையின் தலைவரான அவர், மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் 7-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு பின்னர் அதிலிருந்து தப்பித்தவர் என பல்வேறு விமர்சனங்கள் உள்ளது.

இந்நிலையில் மகாராஷ்ட்ராவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித்ஷா, சாவர்க்கர் தான் இந்தியா விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி என பொய்களை அள்ளி வீசியுள்ளார். மேலும் சாவர்க்கர் குடும்ப சொத்துகளை பிரிட்டிஷ் அரசாங்கம் பறிமுதல் செய்தது என்றும் இஷ்டத்துக்கு வாயில் வந்த பொய்யை எல்லாம் பேசியுள்ளார்.

அதுமட்டுமா! அவரைப் போல சிறையில் சித்திரவதை அனுபவித்தவர்கள் யாருமில்லை. சாவர்க்கரும் அவரது சகோதரரும் சுமார் 12 ஆண்டுகாலம் சிறைவாசம் இருந்தார்களாம். சிறையில் இருந்த போது அவர்களை யாரும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என பேசி இருக்கிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, 1857- ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் கலகத்தின் புரட்சியை முதல் சுதந்திரப் போர் என அறிவித்து பெயர் சூட்டியதும் அவர்தான் என்று சொன்னதுதான் மொத்த பேச்சிலுமே கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

காரணம், சிப்பாய் கலகம் குறித்துப் பேசும்போது உண்மையான வரலாற்றை மறந்துவிட்டார் அமித் ஷா. பா.ஜ.க-வின் தலைமை அமைப்பான ஆர்.எஸ்.எஸ் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. மேலும், அவர்கள் வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரத்தை விரும்பவில்லை என்பதே வரலாற்று உண்மை.

இந்திய சுதந்திரத்தின் முதல் சுதந்திரப்போராட்டமான (Indian Rebellion of 1857) சிப்பாய்க் கலகம் 1857-ம் ஆண்டு மே 10-ம் தேதி மீரட் என்ற நகரில் தொடங்கியது.

அமித்ஷா சொல்வது போல 1857க்கு முன்பே சாவர்க்கர் பிறந்திருந்தால் மட்டுமே, அவர் சிப்பாய்க் கலகப் போராட்டத்தில் பங்கு பெற்றிருக்க வேண்டும். ஆனால் விநாயக் தாமோதர் சாவர்க்கரோ 1883-ம் ஆண்டு தான் பிறந்துள்ளார். அதாவது சிப்பாய் கலகம் நடந்து முடிந்து சுமார் 26 வருத்திற்கு பின்பு தான் சாவர்க்கர் பிறந்துள்ளார்.

இதன் மூலம் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசி இருப்பது கடைந்தெடுத்த பொய் என்பது நிரூபணமாகி உள்ளது. இந்திய வரலாற்றையும், அரசியலையும் எப்படியாவது மாற்றி இந்துத்துவா கருத்துக்களைத் திணித்துவிட வேண்டும் என பா.ஜ.க.,வும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. அமித் ஷா மட்டுமில்லாது மோடி அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்கள் பலரும் இதுபோன்ற பொய்யைப் பரப்பி வருவது தேசத்தின் நலனைப் பாதிக்கும் வகையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.