Viral

நடிகர் விஜய் சொன்னதை உடனடியாக கடைபிடித்த ரசிகர்கள்... ட்விட்டரில் ட்ரெண்டாகும் #JusticeForSubaShree !

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் கடந்த செப்டம்பர் 12 அன்று அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் மகனின் திருமணத்துக்காக சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்த விபத்தில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பேனர் விழுந்ததால் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம், அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களை கடுமையாகச் சாடியது. இதனையடுத்து போலிஸார் அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவு செய்து ஒருவாரம் ஆன நிலையில் தலைமறைவாக உள்ள ஜெயகோபாலை போலிஸார் இன்னும் கைது செய்யவில்லை.

இந்தச் சம்பவத்திற்கு தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

மேலும் பள்ளிக்கரணை காவல் உதவி ஆய்வாளரான பாஸ்கர் மற்றும் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் விஜய் என்பவரும் பேசிக்கொண்ட ஆடியோ வெளியாகியுள்ளது. இந்த ஆடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் பாடல் வெளியீட்டுவிழா நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய், பேனர் விழுந்து சாலை விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ விவகாரத்தில் யார் மீது கோபப்பட வேண்டுமோ அவர்கள் மீது கோபப்படாமல், யார் யார் மீதோ பழிபோடுகிறார்கள். யாரைக் கைது செய்ய வேண்டுமோ அவர்களை விட்டுவிட்டு, பிரின்ட் செய்தவரையும் லாரி ஓட்டுநரையும் பிடிப்பதாகவும் விஜய் குற்றம்சாட்டினார்.

மேலும், பேனரால் இறந்த சுபஸ்ரீ குடும்பத்திற்கு ஆறுதல் கூறிக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். சுபஸ்ரீ இறப்பு உள்ளிட்ட சமூக பிரச்னைகள் மீது கவனம் செலுத்தி ஹேஷ்டேக் பயன்படுத்துங்கள். சமூக வலைதளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இதனையடுத்து இன்று காலை முதல் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் #JusticeForSubaShree ஹேஸ்டேக்கை பயன்படுத்தி சுபஸ்ரீ-க்கு நியாயம் வேண்டும்; உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது இந்த ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.