Viral

இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவு எது? தவிர்க்க வேண்டியவை எது?

எந்த வேளை நீங்கள் அதிகமாக சாப்பிடுவீர்கள் எனக் கேட்டால், உடனே வரும் பெரும்பாலான பதில் இரவு வேளை என்பது தான். உண்மையில் இரவு வேளை என்பது உணவு அதிகம் சாப்பிட வேண்டிய வேளையல்ல.

மூன்று வேளை சாப்பாட்டில் குறைவாக உணவு உட்கொள்ள வேண்டியது இரவு மட்டுமே. இது கொஞ்சம் கடினம் தான். எனினும் 9 மணிக்குள் உணவை முடித்துக்கொள்வது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

நன்கு உறங்கி ஓய்வெடுக்க வேண்டிய உறுப்புகளுக்கு, செரிமான வேலை சுமையைக் கொடுத்தால் செரிமானப் பிரச்சனைகள் நிச்சயம் வரும். எனவே, இட்லி, இடியாப்பம், தோசை, ஆப்பம், பழங்கள் போன்றவை இரவில் சாப்பிட ஏற்றது.

அதேநேரத்தில், பரோட்டா, பூரி, நூடுல்ஸ், சிக்கன், தந்தூரி, கிரில் உணவுகளைப் போன்றவை இரவு நேரத்தில் தவிர்க்க வேண்டும். பொறித்த, வறுத்த உணவுகள் நெஞ்செரிச்சலை உண்டாக்கும். அசைவ உணவுகளை இரவில் உண்பதைத் தவிர்க்கவே மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

சித்த மருத்துவப் பாடல்களில் இரவு உணவை பற்றிக் குறிப்புகள் உள்ளது. அவை, அவரை பிஞ்சு, முருங்கை பிஞ்சு, தூதுவளை, துவரம் பருப்பு, அத்திக்காய், பால் போன்றவை இரவில் சாப்பிடலாம் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும், கீரை வகைகளும் தயிரும் இரவில் சாப்பிட கூடாது.