Viral
“ஏய்.. நீ அழகா இருக்கே!” : குடிபோதையில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய காவலர்!
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள வன்னியன் கோவில் பகுதியில் லேத் வொர்க்ஷாப் நடத்தி வருபவர் ரவிக்குமார் (38). அவரது மனைவி சரண்யா (35) நேற்று மாலை கீரநத்தம் பகுதியில் உள்ள தனது உறவினர்களைப் பார்ப்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அத்திப்பாளையம் அடுத்துள்ள டாஸ்மாக் கடை அருகே சென்றபோது காவலர் சீருடையில் ஒருவர் தன்னை பின்தொடர்ந்து வருவதைக் கண்டு பயந்த சரண்யா, தனது இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றிருக்கிறார்.
ஆனால், அவரை முந்திச் சென்ற அந்தக் காவலர் வழிமறித்து எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த சரண்யா கீரநத்தம் செல்வதாகக் கூறி வண்டியின் வேகத்தை கூட்டியுள்ளார்.
இருப்பினும், பின்தொடர்ந்து வந்த அந்த நபர், நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், உங்கள் கண் அழகாக இருக்கிறது என்று வரம்பு மீறிப் பேசியவாறே சரண்யாவை பின்தொடர்ந்துள்ளார்.
இதனால் கலவரமடைந்த சரண்யா அத்திப்பாளையம் பகுதியிலுள்ள ஒரு ஃபேன்சி ஸ்டோரில் தஞ்சம் அடைந்துள்ளார்.
பின்னர், தன் கணவர் ரவிக்குமாருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்ததையடுத்து பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து ரவிக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் அத்திப்பாளையம் பகுதிக்கு வந்தனர். அவர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சுற்றி வளைத்து எச்சரித்தனர்.
அப்போது அந்தக் காவலர் குடிபோதையில் இருந்ததையும், அவரது இருசக்கர வாகனத்தில் மதுபானத்தை வைத்திருந்ததையும் கண்ட பொதுமக்கள் ஆவேசம் அடைந்தனர். மேலும் சீருடையில் இருப்பதால் அடிக்காமல் விடுகிறோம் என்று கூறி கோவில்பாளையம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அந்த காவலரின் பெயர் பிரபாகரன் என்பதும், அவர் பெரியநாயக்கன்பாளையம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளரின் ஓட்டுநர் என்பதும் தெரியவந்தது.
மது போதையில் காவலர் ஒருவர் பெண்ணிடம் ஆபாசமாக பேசி நடந்து கொண்ட இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு சுஜித் குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் குடிபோதையில் பெண்ணை ஆபாசமாக பேசிய போலிஸ்காரர் பிரபாகரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !