Viral
ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து 116 சவரன் நகையை நூதன முறையில் கொள்ளையடித்த கும்பல்: உஷார் ரிப்போர்ட்!
கோவையில் ஒரு கும்பல் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து 116 சவரன் நகையை முதியவரிடம் இருந்து நூதன முறையில் கொள்ளை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் உக்கடத்தை சேர்ந்தவர் அபினவ். இவர் ஒரு நகை தயாரிக்கும் பட்டறை வைத்துள்ளார். தனது பட்டறையில் தயாரிக்கும் நகைகளை வெளி மாவட்ட, மாநில வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் அவரது கடையில் பணி செய்யும் ரவிச்சந்திரன் என்ற 60 வயது முதயவரிடம் நகைகளைக் கொடுத்து, சேலத்தில் உள்ள வாடிக்கையாளர் ஒருவரிடம் கொடுத்துவிட்டு வருமாறு கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட நபரிடம் கொடுக்கவேண்டிய நகையைக் கொடுத்து விட்டு, மீதமுள்ள 116 சவரன் நகையை பைகளில் வைத்து பத்திரமாக எடுத்துக் கொண்டு தனியார் பேருந்தில் வந்துள்ளார் ரவிச்சந்திரன். பேருந்து பீளமேடு பகுதியில் செல்லும் போது தனது கையில் வைத்திருந்த நகை காணாமல் மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் நகை பட்டறை உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து இருவரும் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.
பின்னர் விசாரணையைத் தொடங்கிய போலிஸார், ரவிசந்திரன் பயணித்த பேருந்தில் சோதனை செய்தனர். அப்போது பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஐந்து பேர் கொண்ட கும்பல் நூதன முறையில் கொள்ளை சம்பங்களில் ஈடுபட்டத்து கண்டுபிடிக்கப்பட்டது.
ரவிசந்திரன் கையில் நகை வைத்திருப்பதனை அறிந்திருந்த அந்த கும்பல் அவர் பேருந்தில் ஏறும் போது, அவருக்கு பின்னாலே ஏறி அவர் அருகில் அமர்ந்துள்ளனர். அப்போது அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவன் ரவிசந்திரன் அமர்ந்திருக்கும் இடத்தை நோக்கி ஒரு நாணயத்தை சுண்டி விடுகிறான்.
ஏதோ தெரியாமல் விழுந்து விட்டது என்பது போல, நாணயத்தை தேடத் தொடங்குகிறான். அப்போது ரவிசந்திரனின் இருக்கைக்கு அருகில் தேடுவது போல் தேடி பையில் இருந்த நகைகளை அவருக்கு தெரியாமல் எடுத்துவிடுகிறான். நகை எடுத்த உடனே அவர்கள் ஐந்து பேரும் பேருந்தில் இருந்து கீழே இறங்கி சென்றுவிடுகிறார்கள்.
இந்த வீடியோ காட்சிகளை வைத்து மலைச் சாமி என்பவரை போலிஸார் கைது செய்து விசாரித்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். பின்னர் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட வீரபாண்டி, சீனிவாசன் மற்றும் பாண்டியனை கைது செய்தனர். இதில் மற்றொரு குற்றவாளியை போலிஸார் தேடி வருகின்றனர்.
மேலும் அவர்களிடம் இருந்து ஒருகிலோ தங்கக் கட்டிகளை போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான மலைச்சாமி மீது பல்வேறு மாவட்டக் காவல் நிலையத்தில் 25-க்கும் மேற்பட்ட வழக்கு பதிவாகியுள்ளதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
மரணத்திலும் இணை பிரியாத தம்பதி : சோகத்தில் மூழ்கிய கிராமம்!
-
பூம்புகார் கைத்திறன் விருதுகள் : 227 கைவினை கலைஞர்களுக்கு பரிசுத்தொகை வழங்கினார் அமைச்சர் TM அன்பரசன்!
-
மசூதியை ஆய்வு செய்ய அனுமதி - ”மதவாதத்துக்கு துணை போகிறதா உச்சநீதிமன்றம்?” : பிருந்தா காரத் கேள்வி!
-
குடியரசுத்தலைவர் உரையில் இடம் பெறாத ’சோசலிஸ்ட்’, ’மதச்சார்பற்ற’ சொற்கள் : டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு!
-
நாளை உருவாகும் FENGAL புயல் : 2 நாள் சென்னைக்கு கன மழை எச்சரிக்கை!