Viral

ஏ.டி.எம் கார்டு மோசடிகளைத் தடுக்க OTP முறை : கனரா வங்கியின் புதிய உத்தி!

ஸ்கிம்மர் மற்றும் ஜாமர் போன்ற தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி போலி ஏ.டி.எம் கார்டுகளைத் தயாரித்து கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றன.

இதுபோன்ற மோசடி சம்பவங்களைத் தடுக்கும் வகையில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் சிப் கொண்ட ஏ.டி.எம். கார்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு விநியோகித்தன. இதன் மூலம் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரிப்பது கடினமாக்கப்பட்டது.

இதனையடுத்து மேலும், வாடிக்கையாளர்களின் பணத்தை காக்கும் வகையிலும், ஏ.டி.எம். கார்டுகளின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையிலும் கனரா வங்கி புதிதாக ஒரு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது, ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கும்போது, பணத்தேவையை பதிவு செய்த பின்னர், வங்கிக் கணக்கில் இணைத்துள்ள செல்போன் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும். அந்த எண்ணை ஏ.டி.எம். இயந்திரத்தில் பதிவு செய்த பின்னர் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். ஓ.டி.பி எண்ணை பதிவு செய்யாவிட்டால் பணம் கிடைக்காது.

மேலும், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு மட்டுமே OTP எண் வரும் என்றும், இது, கனரா வங்கி ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்கும் கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்துக்கு குறைவாக பணம் எடுப்பவர்கள் பழைய முறையிலேயே பணம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த வழிமுறை மூலம், பெரும் தொகை மோசடிகள் தவிர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை கூடிய விரைவில் மற்ற வங்கிகளிலும் பின்பற்றப்படும் வாய்ப்பிருப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.