Viral

நாடாளுமன்றத்தில் எம்.பி-யின் குழந்தைக்குப் பாலூட்டித் தூங்கவைத்த சபாநாயகர் : நெகிழ்ச்சி சம்பவம்! (Video)

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ட்ரெவார் மலார்ட், எதிர்க்கட்சி எம்.பி., ஒருவரின் குழந்தைக்கு பால் ஊட்டி, கவனித்துக்கொண்ட நெகிழ்ச்சியான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெகுவாகப் பரவி வருகிறது.

நியூசிலாந்து நாட்டின் தொழிலாளர் கட்சி எம்.பி-யாக இருக்கிறார் டமாட்டி கோஃபி. டமாட்டி கோஃபி மற்றும் டிம் ஸ்மித் ஆகியோர் செயற்கைக் கருவூட்டல் முறையில் வாடகைத் தாய் மூலம் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தனர்.

கடந்த ஜூலை மாதம் பிறந்த அந்தக் குழந்தைக்கு ஸ்மித் கோஃபி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பேறுகால விடுமுறை முடிந்து நேற்று, தனது குழந்தையுடன் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளார் டமாட்டி.

நாடாளுமன்ற அவையில் நடந்த விவாதமொன்றில் டமாட்டி பங்கேற்றுப் பேசும்போது, அவரிடமிருந்து குழந்தையை வாங்கிய சபாநாயகர் டிரெவார் மலார்ட், குழந்தைக்கு பால்புட்டியில் பாலூட்டினார். பின்னர் தனது இருக்கையை அசைத்துக் குழந்தையை தட்டிக்கொடுத்து மலார்ட் கவனித்துக்கொண்டார்.

இதுகுறித்து ட்விட்டரில், “தலைமை அதிகாரிகள் மட்டுமே அமரக்கூடிய இந்த நாற்காலியை, இன்று ஒரு விஐபி எடுத்துக்கொண்டுள்ளார்.” எனக் குறிப்பிட்டுள்ளார் சபாநாயகர் மலார்ட். மலார்ட் பகிர்ந்த இந்தப் புகைப்படம் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

குழந்தைகள் மீது மிகுந்த பிரியம் கொண்ட மலார்ட், கடந்த 2017ம் ஆண்டு எம்.பி., வில்லோவ் ஜீன் ப்ரைமின் குழந்தையை இதேபோன்று நாடாளுமன்றத்தில் கவனித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.