மதுபாட்டில்கள் கடத்திவந்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு சொந்தமான கார் மற்றும் பெண்தோழி சமுத்திரக்கனி.
Viral

“மதுபாட்டில்களை கடத்தி வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்”- பெண் தோழியுடன் பிடிபட்ட போது தப்பி ஓடியதால் பரபரப்பு! 

கடலூர் மது விலக்கு அமல் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையில் போலீசார் கடலூர் அருகே உண்ணாமலைச்செட்டி சாவடியில் உள்ள சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பொலிரோ காரை மறித்தனர். போலீசை கண்டதும், அந்த காரில் இருந்தவர் திடீரென இறங்கி தப்பி ஓடிவிட்டார். உஷாரான போலீசார் காரை சோதனை செய்த னர். அதில் 148 மதுப்பாட்டில்கள், 30 லிட்டர் சாராயம் கண்டுபிடிக்கப்பட்டது.

காரில் இருந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், அவர் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் சூலாங்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நடராஜன் என்பவரின் மனைவி சமுத்திரக்கனி (வயது 48) என தெரிய வந்தது.

இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவர் இறந்து விட்ட நிலையில் புதுச்சேரியில் இருந்து அவர் அடிக்கடி மதுப்பாட்டில்கள் கடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இவருக்கு கடலூர் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் நட்பாக மாறியது.

பின்னர், இருவருமாக சேர்ந்து காரில் சாராயம் மற்றும் மதுப்பாட்டில்களை புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்து தமிழக பகுதிகளில் அதிகவிலைக்கு விற்று வந்துள்ளனர். கிடைத்து வந்த லாபத்தில் இருவரும் பங்கு போட்டுக் கொண்டுள்ளனர்.

தப்பி ஓடிய போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரேசனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

வேலியே பயிரை மேய்வது போல், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரே கடத்தல்பேர்வழியாக மாறியிருப்பது கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.