Viral
ஆடி காரில் வந்து ஏ.டி.எம் மையத்தில் கொள்ளையடித்த பலே திருடன் - போலிஸ் சுற்றிவளைத்த பின்னணி
சென்னை அயனாவரம் கான்ஸ்டபிள் சாலையில் இயங்கி வரும் எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம் மையத்தில் கோபி என்பவர் பணம் எடுக்கும் போது, ஸ்கிம்மர் கருவி மற்றும் ரகசிய கேமரா பொருத்தியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலிஸாருக்கு தகவல் கொடுத்ததும் போலீசாரும் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்த விசாரணையின் போது சி.சி.டி.வி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது ஏ.டி.எம் திருட்டு நடந்த இடங்களில் உயர் ரக ஆடி கார் ஒன்று அங்கு அடிக்கடி வந்துள்ளது தெரியவந்தது. அந்த கார் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை வரை சென்றது தெரியவந்தது. பின்னர் அந்த ஆடி காரின் எண்ணை வைத்து, உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே தனிநபர்கள் வங்கி கணக்கில் பணம் காணாமல் போனது, கொள்ளை, மோசடிகள் என 10க்கும் மேற்பட்டவர்கள் புகார் அளித்திருந்தனர். அந்த புகார்களை விசாரிக்கும் போது இந்த சம்பவங்களில் ஈடுபட்ட அதே கும்பல்தான் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளது தெரியவந்துள்ளது.
அந்த மோசடி கும்பல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சில வங்களின் ஏ.டி.எம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவிகளை பொருத்தி அதில் இருந்து பயனாளர்களின் தகவல்களை திருடி மோசடி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விசாரணையில் ஆடி காரின் உரிமையாளர் இர்ஃபான் என்பவர் என தெரியவந்துள்ளது. முன்னதாக பாண்டிச்சேரியில் இதே போன்று ஸ்கிம்மர் கருவி பொருத்தி பணத்தை திருடி கைதாகியுள்ளார்.
சமீபத்தில் தான் ஜாமினில் வெளிவந்ததாகக் கூறப்படுகிறது. இவர்தான் அந்த மோசடி கும்பலுக்கு முக்கிய காரணமானவர் என்றும், அவருக்கு துணையாக அல்லா பக் ஷா மற்றும் அப்துல் ஹாதி ஆகியோர் இருந்துள்ளனர் என்பதும் தெரிவந்துள்ளது. இவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, ஸ்கிம்மர் கருவிகளை பொருத்துவதற்கு இரண்டு பேரையும், ஸ்கிம்மர் கருவி மூலம் திருடப்பட்ட பயனாளர்களின் தகவல்களை வைத்து போலி ஏ.டி.எம் கார்டுகளை தயாரிக்கவும், பணத்தை எடுப்பதற்கு தனியாக ஒரு குழுவையும் வைத்து இந்த சம்பவங்களை திட்டமிட்டு நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
விலை உயர்ந்த காரில் சென்றால் போலிஸாருக்கு சந்தேகம் வராது என நினைத்து இந்த சம்பத்திற்கு ஆடி காரைப் பயன்படுத்தி வந்ததாகவும். அதன் மூலம் கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 20 லட்சம் வரை கொள்ளையடித்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இர்ஃபான், அல்லா பக் ஷா , அப்துல் ஹாதி ஆகிய மூவரும் இந்த பணத்தில் சொகுசு கார்கள், சொத்துக்கள், ஷேர் மார்கெட்டில் முதலீடு, வெளிநாட்டு டிராவல்ஸ் நிறுவனம் என நடத்தி வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!