Viral

மீண்டும் மீண்டும் போன் பண்ணி கிரெடிட் கார்டு பில் கட்ட சொன்ன வங்கிக்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதம் !

கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி உபயோகித்த தொகையைக் கட்டிய பின்னரும், தொடர்ந்து போன் செய்து தொல்லை கொடுத்து வந்த தனியார் வங்கிக்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த பகீரதா என்பவர் தனியார் வங்கியின் கிரடிட் கார்டை பயன்படுத்தி 4,500 ரூபாய்க்கு பொருள் வாங்கி உள்ளார். அந்தத் தொகையை கடந்த 2017 ஏப்ரல் 21ம் தேதி வேறு ஒரு வங்கிக் கணக்கின் இன்டர்நெட் பேங்கிங் வசதி கொண்டு தனியார் வங்கிக்கு செலுத்தியுள்ளார்.

ஆனாலும் அவர் கிரெடிட் காட்டுக்கு பில் தொகை செலுத்தவில்லை எனக் கூறி, வங்கி ஊழியர்கள் தினமும் செல்போனில் அழைத்துத் தொல்லைக் கொடுத்து வந்துள்ளனர். மேலும் ஆன்லைன் மூலம் பணம் பரிவர்த்தனை செய்ததற்கான பில் உள்ளிட்ட மற்ற ஆவணங்களை போனில் ஸ்கீரின் ஷாட் எடுத்து, அந்த புகைப்படத்தையும் ஆவணமாக வங்கிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதற்குப் பிறகும் தனியார் வங்கி மேலாளர் செல்போனில் தொடர்புக் கொண்டு, “ இன்று மாலைக்குள் பணம் செலுத்த வேண்டும், இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுத்துவிடுவோம்” என்று மிரட்டியுள்ளார்.

இதனால், தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்த பகீரதா, பணியில் கவனம் செலுத்தமுடியாமனால் போனது. மன உளைச்சலுக்கு ஆளான பகீரதா ஒரு கட்டத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர் முடிவு எடுத்துள்ளார்.

பின்னர், தன்னை போனில் தொல்லைசெய்யும் தனியார் வங்கி மீது பெங்களூருவில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

நீதிமன்றத்தில் நீதிபதிகள் எச்.ஆர்.சீனிவாஸ் மற்றும் டி.சுரேஷ் ஆகியோர் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தார்.

பின்னர், ‘‘ வங்கிகள் தங்கள் வாடிக்கையாளரிடம் இருந்து மிரட்டி பணம் வசூல் செய்தாலோ அல்லது கடன் வசூல் செய்தாலோ ஆர்.பி.ஐ சட்ட விதிமுறைகளுக்கு எதிரானதாகும். மனுதாரர் பகீரதா விஷயத்தில் உச்ச நீதிமன்றம் மற்றும் ரிசர்வ் வங்கி உத்தரவுகளை தனியார் வங்கி காற்றில் பறக்கவிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

எனவே, கிரெடிட் கார்டு பணம் செலுத்தியும் தொல்லை கொடுத்து வந்த தனியார் வங்கிக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும், வழக்கு செலவுகளுக்காக ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும்’’ என்று தீர்ப்பு வழங்கி உத்தரவு அளித்தார்.

இதுபோன்று பல சம்பவங்கள் நாடு முழுவதும் நடந்து வருகின்றன. கிரெடிட் கார்டு கொடுக்கும்போது போனில் அழைத்து கெஞ்சும் ஊழியர்கள், கார்டுக்கான தொகையை வசூலிக்கும்போது பெரியண்ணன் தோரணையில் நடந்துகொள்கிறார். இதனால் பல வாடிக்கையாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில், நுகர்வோர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை பலரும் வரவேற்றுள்ளனர்.