Viral
தமிழ் ஹிப்ஹாப் பாடல்களுக்கு அரசியல் முகம் கொடுத்திருக்கும் ‘தெருக்குரல்’!
கலை எப்போதும் கிளர்ச்சியின் மொழிதான். உலகின் எல்லாப் புரட்சிகளிலும் ஏதோ ஒரு தூரிகையோ, ஒரு பேனாவோ, ஒரு புத்தகமோ, இல்லை சாவின் விளிம்பிலிருந்தாலும் கொண்டாட்டமாய் ஒலிக்கும் ஒரு பாடலோ நிச்சயம் இடம் பிடித்திருக்கும். கலை வெகுஜனங்களைச் சென்றடைய வேண்டும், அவர்களுக்குப் பிடிப்பதாய் பாடல்கள் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் அவர்கள் பாடல்களின் வரிகளையும் அந்த வரிகள் தரும் கருத்துக்களையும் கவனிப்பார்கள் என்கிறார்கள் 'கேஸ்ட் லெஸ் கலெக்ட்டிவ்ஸ்' குழுவைச் சேர்ந்த அறிவு மற்றும் ஆப்ரோ.
‘தெருக்குரல்’ என்ற 7 பாடல்கள் கொண்ட தொகுப்பை இயக்குநர் பா.ரஞ்சித்தின் முன்னெடுப்பான ‘கேஸ்ட் லெஸ் கலெக்ட்டிவ்ஸ்’ சார்பில் சமீபத்தில் வெளியிட்டார்கள். இந்தியாவின் அரசியல் சூழலை விவரிப்பதாய், மௌனிக்கப்பட்ட, மௌனமாய் இருக்கும் எல்லோரையும் கொஞ்சம் கிண்டிப் பார்ப்பதாய் இருக்கிறது அறிவு எழுதியிருக்கும் வரிகள்.
கள்ள மௌனி -
பெட்ரோல் விலை ஏறிப்போனால் என்ன தோழர்
கட்டும் வரி கூடிப்போனால் என்ன தோழர்
முட்டாள் ஒரு மன்னனானா என்ன தோழர்”
என்று கேளிக்கையாய் துவங்குகிறது இந்தப் பாடல், நாட்டின் எல்லாப் பெரிய பிரச்னைகளையும் ஒரு சின்ன கிண்டலோடு பதிவுசெய்திருக்கிறது இந்தப் பாடல். 'தோழர்' என்கிற வார்த்தையை வெகுஜனப் புழக்கத்தில் கொண்டு சேர்த்திருக்கிறது என்றும் சொல்லலாம். இடையில் வரும் 'ஒயின் ஷாப்' வரிகள் சமீபத்தில் கோவையில் தன் மனைவியின் பிணத்தோடு போராடிய சமூக செயல்பாட்டாளர் ரமேஷின் கதையை நினைவுக்குக் கொண்டுவந்தது. ‘கள்ள மௌனி’ பாடலின் தொனி கொண்டாட்டமாய் இருந்தாலும் வரிகள் யதார்த்தத்தை விளக்குகின்றன.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்த ஸ்நோலினின் நினைவாய் வந்திருக்கும் பாடல் கடந்த சில வருடங்களாக இந்தியாவில் நடந்து வரும் மக்கள் போராட்டங்களின் ரத்தமும் சதையுமான கதையாய் வந்திருக்கிறது. நாட்டின் அரசியலில் எந்த விதத்திலும் தொடர்பில்லாத, தன்னுடைய ஊருக்காக அமைதியாய் முற்றுகை போராட்டம் செய்யச்சென்ற 16 வயதுப் பெண்ணை பிணமாக வீட்டுக்கு அனுப்பிய 'தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டையும்' கத்துவாவில் ஆசிஃபா என்ற சிறுமிக்கு நடந்த கொடுமையும் இசை வழி பதிவு செய்வதாய் இருக்கிறது இந்தப் பாடல்.
நாம் கேட்டு நிற்கிறோம் காவேரி
தனியாய் இருக்குதே நம் சேரி
உயிரைப் பறிக்குதே உன் கல்வி
ஆன்ட்டி - இந்தியனுக்கான பெயர்க்காரணம் கூறுக என்றால் முழு மதிப்பெண் பெற்றுவிடும் இந்தப் பாடல். பாடல் புதிய கல்விக்கொள்கை அறிவிக்கப்படும் முன்பே உருவாக்கப்பட்டதால் அதைப் பற்றிய கருத்துகள் மட்டும் மிஸ்ஸிங்.
மெல்லிய வரிகளால் துள்ளலாய் பெண்களுக்கான அரசியலைப் பேசுகிறது தமிழச்சி பாடல்.
நீ நீயா நிம்மதியா இரு
நீங்காதே உனை எப்போதும்
இந்த வரிகளோடு ஆப்ரோவின் இசை துள்ளிக்குதிக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.
மிடில் கிளாஸ் பாடல் எல்லா நடுத்தர வர்க்கத்தினரின் தினசரி ரோதனைகளைச் சொல்வதாய் சிரிப்பு கலந்த பாடலாய் ஒலிக்கிறது. உண்மையில், கலையின் வழி சமூகத்தின் நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கிறது 'தெருக்குரல்'.
- சௌமியா ராமன்
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!