Viral

மோடியின் புல்லட் ரயில் திட்டம் : 54,000 மாங்குரோவ் மரங்களை காவு கொடுக்க முடிவு?

குஜராத் சட்டமன்றத் தேர்தலையொட்டி, வாக்குகளைக் கவர்வதற்காக, மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். இது தனது கனவுத்திட்டம் என்று அப்போது கூறிய மோடி, இதற்கான கடனுதவியை ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையிடம் ( Japan International Cooperation Agency) பெறப் போவதாகவும் கூறினார்.

கடந்த ஆட்சியின் போது பிரதமர் மோடி மும்பையில் இருந்து அகமதாபாத் வரை புல்லட் ரயில் இயக்கப்படும் திட்டத்தை அறிவித்தார். அந்த திட்டம் தான் இந்தியாவின் கனவு திட்டம் என மோடி அவ்வப்போது பேசிக்கொண்டிருந்தார்.

இந்த திட்டத்திற்கு சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில் 88 ஆயிரம் கோடி ஜப்பானிடம் கடன் கேட்கப்பட்டது. அதன்படி ஜப்பான் கூட்டுறவு மையமும் 88 ஆயிரம் கோடி கடனுதவி வழங்குவதாக ஒப்புக்கொண்டது. அதனையடுத்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அழைத்து புல்லட் ரயில் திட்டத்திற்கு மே மாதம் அடிக்கல் நாட்டினார். அப்போது பிரதமர் மோடி 2023ம் ஆண்டு இந்தியாவில் புல்லட் ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்தார்.

இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதே கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்தத் திட்டத்தின் படி, மகாராஷ்டிராவின் பால்கர் வழியாக 108 கி.மீ தூரம் செல்வதால், அந்தப் பகுதியில் நிலம் எடுக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த திட்டத்திற்கு 8 மாவட்டங்களில் சுமார் 850 ஹெக்டேர் அளவுக்கு நிலம் தேவைப்படுகிறது. இதற்கு நிலங்களை கையகப்படுத்தும் முயற்சிக்கு ஏதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்களின் நிலத்தை எடுப்பதற்கு எதிராக அகமதாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

மேலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர். அதுமட்டுமின்றி, விவசாய அமைப்புகள் சார்பில், ஜப்பான் நாட்டு அரசுக்கு கடிதங்கள் அனுப்பினர். இதையடுத்து புல்லட் ரயில் திட்டத்திற்கு வழங்குவதாக தெரிவித்த கடன் உதவியை ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை (JICA) நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. இதனிடையே 2-வது முறையாக மோடி பதவி ஏற்றியதும் புல்லட் ரயில் திட்டப் பணிகளை மீண்டும் துவங்க உத்தரவிட்டுள்ளார்.

இதனால் விவசாயிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிர சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிவசேனா எம்.எல்.ஏ மனீஷா கயாந்தே புல்லட் ரயில் திட்டத்தை கடுமையாக எதிர்த்தார். அவர் பேசுகையில், புல்லட் ரயில் திட்டம் கொண்டுவந்து சுமார் 14 ஹெக்டேரில் பரவியிருக்கும் 54 ஆயிரம் சதுப்பு நில மரங்களை அழிக்க பா.ஜ.க அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் கொண்டுவரப்படுவதால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை, அவர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். 14 ஹெக்டேர் சதுப்பு நில பகுதி அழிக்கப்பட்டும் அபாயம் உள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்தத் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.