Viral

முதல்வர் உட்பட 18 அமைச்சர்கள் குடிநீர் வரி செலுத்தவில்லை -  ஆர்.டி.ஐ மூலம் அம்பலம்!

தகவல் அறியும் உரிமை சட்டப்படி அரசு செயல்பாடுகள் குறித்த தகவல்களை இந்திய மக்கள் தெரிந்துகொள்ளமுடியும். இதன் மூலம் சமீபத்தில் அரசு முறைகேடு செய்த பல விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

இந்நிலையில், தற்போது பா.ஜ.க ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவில் அமைச்சர்கள் குறித்து ஆர்.டி.ஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த "என்.ஜி.ஓ அதிகார் பவுண்டேஷன்" என்ற அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று, "மகாராஷ்டிராவில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி செலுத்தாத அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் யார் என்றும், எவ்வளவு ஆண்டுகளாக வரி செலுத்தாமல் உள்ளனர். எவ்வளவு பாக்கி தொகை உள்ளது" என்பவை உள்ளிட்ட பல கேள்விகளை தொகுத்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மும்பை மாநகராட்சியிடம் விண்ணப்பம் அளித்திருந்தது.

இந்த மனுவிற்கு மும்பை மாநகராட்சி பதில் அளித்துள்ளது. அந்த பதிலில் தெரிவித்திருப்பதாவது, "மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தங்கியுள்ள வர்ஷா அரசு பங்களா, மாநகராட்சிக்கு குடிநீர் வரி மட்டும் 7 லட்சத்து 44 ஆயிரத்து 981 ரூபாய் பாக்கி உள்ளது.

மேலும் கடந்த 2001-ம் ஆண்டு முதல் பங்கஜ முண்டே, ராம்தாஸ் கதம் உட்பட 17 அமைச்சர்கள் தங்கியுள்ள பங்களா குடிநீர் வரி செலுத்தப்படவில்லை. அதாவது 19 ஆண்டுகளாக வரி செலுத்தவில்லை என அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது, ”முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தங்கியுள்ள அரசு பங்களாக்களுக்கான குடிநீர் வரி கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் செலுத்தப்பட்டுவிட்டது. பணம் செலுத்திய காசோலைகளை சரிபார்த்த பிறகு பாக்கி இல்லை என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு பெரிய தொகை பாக்கியுள்ள போது அதிகாரிகள் கசோலையில் பிரச்னையுள்ளது சரிசெய்யப்படும் என்று சொல்வது மெத்தனப்போக்கை காட்டுகிறது. ஊடகங்களுக்கு இந்த தகவல் தெரிந்ததால் சமாளிப்பதற்காக அதிகாரி பொய் சொல்கிறாரா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.