Viral
கேரளாவில் தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகன் : ஃபேஸ்புக் பதிவில் உருக்கம்!
இந்தியாவில் மறுமணம் என்பது பெரும் பாவத்திற்குரிய செயலாகவே இன்றும் பலரால் பார்க்கப்படுகிறது. குழந்தை பெற்ற பெண்ணுக்கு மறுமணம் என்பது நிறைவேறாத கனவு எனக் கூட சொல்லலாம். அதற்குக் குடும்பம் சம்மதித்தாலும், பக்குவப்படாத சமூகம் அவர்களைச் சும்மா விடுவதில்லை. இந்தச் சூழலில் கேரளாவைச் சேர்ந்த ஒரு 23 வயது இளைஞரின் பக்குவமிக்க பதிவு வைராக வலம் வருகிறது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த மினி, அரசுப் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றுகிறார். இவரது மகன் கோகுல் ஸ்ரீதரன். இவரது தாயாருக்கும் அவரது முதல் கணவருக்கும் அடிக்கடி சண்டை மூண்டு பெரும் தகராறு வரை சென்றுள்ளது. கணவர் அடித்துத் துன்புறுத்தியதால், ஆசிரியை பணியை மேற்கொள்ள கடினமாக இருந்துள்ளது. இந்த நிலைமை தொடர்ந்து நீடித்ததால், மினி அவரது கணவரை விவாகரத்து செய்தார்.
கோகுல் மற்றும் அவரது தாயார் மினி, இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி சிறிதுகாலம் உறவினர்கள் வீட்டில் வசித்து வந்துள்ளனர். பின்னர் கடுமையான வாழ்க்கைச் சூழலில் நூலகத்தில் வேலைபார்த்து கோகுலை இன்ஜினியரிங் படிக்க வைத்துள்ளார் மினி. தற்போது கோகுல் ஒரு பொறியியல் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தனது தாய் தனியாக இருந்து கஷ்டப்படுவதை உணர்ந்த கோகுல், தனது தாயாருக்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார்.
கோகுல், அவரது நண்பர்கள், உறவினர்களிடம் ஆலோசித்துவிட்டு அவர்களின் உதவியுடன் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவைச் சேர்ந்த வேணு என்ற முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவரை தாயாருக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளார். இதற்கு, மினி சம்மதித்தைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன் திருமணம் செய்து வைத்துள்ளார்.
இந்த தகவலை கோகுல் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “நேற்றய தினம் எனது தாயின் திருமணம் நடந்தது. இந்தத் தகவலை பொதுவெளியில் சொல்வதற்கு பல முறை யோசித்தேன். இந்த நவீன காலகட்டத்திலும் இன்னும் மறுமணத்தை ஏற்றுக்கொள்ளாத ஏராளமானோர் உள்ளனர். எனது தாயார் வாழ்க்கை முழுவதும் தனக்காக வாழ்ந்துள்ளார். அவருக்காக இதைச் செய்ய முடிவு செய்தேன்.
அவரின் திருமண வாழ்க்கை மிக கசப்பானதாகவே இருந்துள்ளது. ஒருமுறை எனது அப்பா அடித்ததில் அவர் தலையில் இருந்து இரத்தம் வழிந்தது. அப்போது எனது தாயிடம் ஏன் இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்கிறீர்கள் எனக் கேட்பேன், அதற்கு அம்மா, “உனக்காகத்தான்” என்று சொல்வார். உனக்காக எவ்வளவு கடினமான வாழ்க்கையையும் சகித்துக்கொண்டு வாழ்வேன் எனக் கூறினார்.
அப்போதிருந்தே எனது தாயை மகிழ்ச்சியாக வாழவைக்க வேண்டும் என முடிவு செய்தேன். படித்து முடித்து வேலையில் சேர்ந்துவிட்டேன். நான் வேலைக்குச் செல்லும்போதெல்லாம் அவர் தனியாக இருப்பார். எனவே அவருக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்தேன். முதலில் அவர் சம்மதிக்கவில்லை. பின்னர் எனது வேண்டுகோளை ஏற்றுச் சம்மதித்தார். இப்போது நான் நிம்மதியாக உணர்கிறேன்” என தனது பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கோகுலின் இந்தச் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கோகுல், இடதுசாரி மாணவர் அமைப்பிலும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திலும் பகுதி குழு உறுப்பினராக உள்ளார். அவரது நடவடிக்கைக்கு இடதுசாரி கட்சியினர் ஆதரவளித்து வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!