Viral

பிஸ்கட்டில் டூத் பேஸ்ட் வைத்து ப்ராங்க் வீடியோ: யூட்யூப் பிரபலத்திற்கு 15 மாதங்கள் சிறை !

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த யூடியூப் பிரபலம் காங்குவா ரென் (வயது 21). இவர் ‘பிராங்’ எனப்படும் குறும்பு வீடியோக்களை பதிவு செய்து, தனது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்வது வழக்கம். இவரது யூடியூப் சேனலை சுமார் 12 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு காங்குவா ரென், சாலையோரம் அமர்ந்திருந்த ஒருவருக்கு கிரீம் பிஸ்கட்டில் இருந்த கிரீமை எடுத்துவிட்டு, அதில் பற்பசையை நிரப்பி கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட அந்த நபர் வாந்தி எடுத்தார். இவை அனைத்தையும் வீடியோ பதிவு செய்து அந்த வீடியோவை வழக்கம் போல் தனது யூடியூப் சேனலில் காங்குவா ரென் பதிவேற்றம் செய்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்குவா ரென்னுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து, காங்குவா ரென் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு பார்சிலோனா கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணையில் காங்குவா ரென் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவரது யூடியூப் சேனலை முடக்கவும் உத்தரவிடபட்டுள்ளது. மேலும், காங்குவா ரென்னால் பாதிக்கப்பட்ட நபருக்கு 22 ஆயிரத்து 390 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15 லட்சத்து 50 ஆயிரம்) இழப்பீடாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.