Viral

“நான் ஸ்னோலின் பேசுறேன், உன்காதில் விழுதா” : தூத்துக்குடி படுகொலையை நினைவுகூரும் பாடல்! 

சுகாதாரமான வாழ்க்கை கேட்டு தொடர்ச்சியாக போராட்டம் நடத்திய மக்களுக்கு 100 நாளில் வெற்றிக்கு பதிலாக துப்பாக்கி குண்டுகளே பரிசாக கிடைத்தது. அதிகார வர்க்கம் அவர்களின் உயிரை பறித்த கொடூர நாள் தான் இந்த மே 22.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 100 நாள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர் தூத்துக்குடி மக்கள். 100-வது நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தமிழக காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

கடந்தாண்டு நடத்தப்பட்ட இந்தப் படுகொலை சம்பவம் நடந்து முடிந்து ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஓராண்டாகியும் நீதிமன்றம், மனித உரிமை ஆணையம் என பல இடங்களில் இந்த அநீதிக்கு எதிராக நியாயம் வேண்டும் என்று கோரியும் இதுநாள் வரை இவர்களுக்கான நீதி இன்னமும் கிடைக்கவில்லை என்பது தான் உண்மை.

‘தெருக்குரல்’ அறிவு சமூகத்தில் நிலவும் சாதிய பிரச்சனைகள், பெண் சுதந்திரத்தை வலியுறுத்தும் பாடல்கள் உள்ளிட்டவற்றை எழுதிப் பாடும் நபர். ‘தெருக்குரல்’ அறிவு துப்பாக்கிச்சூட்டில் பலியான ஸ்னோலின் படுகொலையைக் கண்டித்து The Casteless Collective சார்பில் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பாடலில் "நான் ஸ்னோலின் பேசுறேன், உன்காதில் விழுதா" என் தங்கை ஆஷிபா என்கூட தான் இருக்கா" என்று தொடங்குகிறது. இந்தப் பாடலின் தொடக்கத்தில் துப்பாக்கியால் சுட்ட போலீஸ் ஒருவரிடம் பேசும் வார்த்தைகளும் வருகின்றன. இந்தப் பாடலை இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்துள்ளார்.