Viral

இலங்கை மக்கள் விசா இன்றி கனடாவிற்கு செல்லலாமா? : கனடா தூதரகம் விளக்கம்!

ஈஸ்டர் தினத்தன்று இலங்கையின் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 253 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. பின்னர், பல்வேறு இடங்களிலிருந்து வெடிகுண்டுகளும், டெட்டனேட்டர்களும் கண்டெடுக்கப்பட்டதால் அந்நாட்டில் பதற்றம் நீடித்து வருகிறது.

இந்தநிலையில் இலங்கை மக்கள் விசா இன்றி கனடாவிற்குச் செல்லலாம் என்ற செய்தி அண்மையில் வலைத்தளங்களில் வரலானது. இந்த உத்தரவை கனடா பிரதமர் அதிகாரப் பூர்வமாகக் கூறியதாகவும் தகவல்கள் வெளியானது. இந்தச் செய்தியை ஆங்கில ஊடகம் பதிவு செய்துள்ளது. ஆனால் இந்த செய்தி போலியானது என தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த போலியாகப் பரவிய செய்தி குறித்து இலங்கையில் இருக்கும் கனடா தூதரகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் ஒன்றை பதிவு செய்துள்ளது. அதில் "இலங்கை மக்களுக்கு கனடாவுக்கு “விசா அற்ற” அனுமதி என்பது தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளிவரும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை. விசா நடைமுறைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை. மேலதிக தகவல்களுக்கு: http://www.cic.gc.ca" என்று குறிப்பிட்டு லிங்க்-கையும் பதிவு செய்துள்ளது.