Viral
இந்தோனேசியா தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட்டிருந்த 272 பேர் பலி!
இந்தோனேசியாவில் தேர்தல் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த 272 பேர் பணிச் சுமை காரணமாக உயிரிழந்திருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் கடந்த ஏப்ரல் 17-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. செலவீனத்தை குறைக்க வேண்டி, அதிபர் தேர்தலோடு, மாநிலம் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களையும் ஒரே நேரத்தில் சேர்த்து நடத்தியது தேர்தல் ஆணையம். இதனால் ஒவ்வொருவரும் 3 வாக்குகள் அளித்தனர்.
மொத்தம் இருக்கும் 19 கோடி வாக்காளர்களில் 80% பேர் வாக்களித்தனர். 8 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்த தேர்தல் பணியில் மொத்தம் 70 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த வாக்கு எண்ணும் பணி கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது. கையால் வாக்கு எண்ண வேண்டும் என்பதால் இரவு பகலாக வாக்கு எண்ணும் பணி நடந்து வந்தது. அளவுக்கு அதிகமான பணிச்சுமை மற்றும் சோர்வு காரணமாக பலருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. போதுமான வசதிகள் இல்லாததாலும் பணியாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதில் 272 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் 1,878 பேர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேர்தல் பணியாளர்களில் பெரும்பாலானோர் பகுதி நேர ஊழியர்கள் என்பதால், அவர்களுக்கு தகுந்த மருத்துவ பரிசோதனை ஏதும் செய்யப்படவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஓராண்டுக்கு நிகரான ஊதியத்தை இழப்பீட்டு தொகையாக வழங்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இவ்வளவு உயிரிழப்புகளைத் தாண்டியும் வாக்கு எண்ணிக்கை முடிந்ததா என்றால் இல்லை என்கிறார்கள். மே 22-ம் தேதி வரை வாக்கு எண்ணிக்கை நடத்தி இறுதி முடிவுகள் வெளியிடப்படுமாம்.
Also Read
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!
-
நாகூர் சந்தனக்கூடு திருவிழா ஏற்பாடுகள்! : நேரில் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!