Tamilnadu

பூம்புகார் கைத்திறன் விருதுகள் : 227 கைவினை கலைஞர்களுக்கு பரிசுத்தொகை வழங்கினார் அமைச்சர் TM அன்பரசன்!

பூம்புகார் கைவினைக் கலைஞர்கள் விருது வழங்கும் விழா, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவர்கள் தலைமையில் மாமல்லபுரத்தில் 26.11.2024 அன்று நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் அவர்கள் 227 கைவினை கலைஞர்களுக்கு ரூ.24 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான ரொக்க பரிசு, தங்கப்பதக்கம் வழங்கி கௌரவித்தார்கள்.

இதைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது, “தமிழ் சமுதாயம் உலகம் முழுவதும் அறியப்படுவதற்கும், போற்றப்படுவதற்கும் அதன் கலைகளே காரணம். தென் இந்தியா முழுவதும் உள்ள மாபெரும் கற்கோயில்களுக்கு அடித்தளமாக விளங்குவது மாமல்லபுரத்தில் உள்ள குடைவரை கோயில்கள். உலகமே வியந்து பார்க்கும் கற்சிற்பங்கள், மரசிற்பங்கள், உலோக சிற்பங்களின் பிறப்பிடமாக தமிழ்நாடு உள்ளது.

தமிழ்நாட்டில் 130 இடங்கள் கைவினை கலைஞர்கள் அதிகம் உள்ள இடங்களாகவும், இதில் 40 இடங்கள் மிக முக்கிய கைவினை பொருட்கள் தயாரிக்கும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை தொழில்கள் அழியாமல் பாதுகாத்திடவும், கைவினை கலைஞர்களின் வாழ் வாதாரத்தை உயர்த்தவும், தமிழ்நாட்டின் கலைப் பொருட்களை உலக அளவில் கொண்டு சேர்க்கவும், கலை பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்திடவும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1973-ஆம் ஆண்டு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் - “பூம்புகார்” என்ற பெயரில் துவக்கப்பட்டு,50 ஆண்டுகளை கடந்து பொன்விழாவை கொண்டாடி வருகிறது.பூம்புகார் நிறுவனம், 7 உற்பத்தி நிலையங்கள் மற்றும் 21 விற்பனை நிலையங்களுடன் செயல்பட்டு வருகிறது.

கடந்த 3 ½ ஆண்டு காலத்தில் ரூ.134 கோடியே 8 லட்சம் மதிப்பிலான கலை பொருட்களை விற்பனை செய்துள்ளது. கழக அரசு பொறுப்போற்றதில் இருந்து ஆண்டுக்கு ஆண்டு அதன் விற்பனை அதிகரித்து,கடந்த ஆண்டு இதுவரை இல்லாத வகையில் ரூ. 48 கோடியே 34 லட்சம் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இதில், ரூ.3 கோடியே 91 லட்சம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கைவினைஞர்களை ஊக்கப்படுத்த, தமிழ்நாட்டின் சிறந்த கைவினை கலைஞர்களுக்கு ஆண்டுதோறும், 263 விருதுகள் வழங்கி, இந்தியாவிலேயே அதிக கைவினைஞர்களுக்கு விருதுகளை வழங்கும் மாநிலாமாக தமிழ்நாடு திகழ்கிறது. கடந்த ஜூலை மாதம் முதல்வர் அவர்களால் ரூ. 22 லட்சம் மதிப்பில் 8 சிறந்த கைவினை கலைஞர்களுக்கு வாழும் கைவினை பொக்கிஷம் விருதும்,10 கைவினை கலைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகளும் வழங்கி கௌரவித்தார்கள்.

இன்று இந்த விழாவில்,

1. குழு உற்பத்தி விருதுகள் : 3 குழுவிற்கு தலா ரூ.40 ஆயிரம் ரொக்க பரிசும், 4 கிராம் தங்க பதக்கம், தாமிர பத்திரம், சான்றிதழ் வழங்கப்படுகிறது.

2. பயன்பாடு சார்ந்த கைவினை பொருட்கள் விருது : 3 நபர்களுக்கு தலா ரூ.40 ஆயிரம் ரொக்க பரிசும், 4 கிராம் தங்க பதக்கம்,தாமிரம் பத்திரம், சான்றிதழ் வழங்கப்படுகிறது.

3. பூம்புகார் மாவட்ட கைத்திறன் விருது : 71 நபர்களுக்கு ரொக்க பரிசாக தலா ரூ.10 ஆயிரம் 5 கிராம் வெள்ளி நாணயம், சான்றிதழ் வழங்கப்படுகிறது.

4. அடுத்த தலைமுறைக்கான கைவினை விருது : 143 இளைய கைவினைஞர்களுக்கு ரொக்க பரிசாக தலா ரூ.2,000, 5 கிராம் வெள்ளி நாணயம், சான்றிதழ் என மொத்தம் 227 கைவினை கலைஞர்களுக்கு ரூ.24 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறார்கள்.

மேலும், இந்த விழாவில் பூம்புகார் நிறுவனத்தின் பொன்விழாவை முன்னிட்டு, நிறுவனத்தின் பணியாளர்களுக்கு நினைவு பரிசுகளும், கள்ளக்குறிச்சி மர சிற்ப புவிசார் குறியீட்டை 20 கைவினை கலைஞர்கள் பயன்படுத்தி கொள்ள அனுமதி சான்றிதழும் வழங்கப்படுகிறது. நலிந்த கைவினை தொழில்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு வகையான இயந்திரங்கள் பொறுத்தப்பட்ட பொது வசதி மையங்கள் சுவாமிமலை, நாச்சியார் கோயில், தஞ்சாவூர், வாகைக்குளம், மதுரை, கன்னியாகுமாரி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

கழக அரசு பொறுப்பேற்று 3½ ஆண்டு காலத்தில், காஞ்சிபுரம், அரும்பாவூர், அம்பாசமுத்திரம், ஆசனூர், விக்கிரவாண்டி, பத்தமடை தம்பம்பட்டி, காரைகுறிச்சி 8 இடங்களில் ரூ.4 கோடியே 80 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 6 ஆயிரம் கைவினை கலைஞர்கள் பயனடைந்து வருகிறார்கள்.கைவினை கலைஞர்களால் கலை பொருள்களை விற்பனை செய்ய பெருநகரங்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் விற்பனையுடன் கூடிய நகர்ப்புர கண்காட்சி திடல்கள் அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் ரூ.2 கோடியே 75 லட்சம் மதிப்பிலும், மாமல்லபுரத்தில் ரூ.4 கோடியே 70 லட்சம் மதிப்பில் நகர்ப்புர குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கைவினை கலைஞர்களின் உற்பத்திக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தநாச்சியார் கோயில், மதுரை, வாகைகுளம், சுவாமிமலை, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, மாமல்லபுரம் ஆகிய 7 உற்பத்தி நிலையங்கள் ரூ.3 கோடியே 50 லட்சம் செலவில் மேம்படுத்தும் பணிகள் முடிவடைந்து உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும், ரூ. 5 கோடி மதிப்பீட்டில் புது டெல்லி, கொல்கத்தா சென்னை, கோவை, ஆகிய இடங்களில் புதுப்பிக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. கடலூரில் ரூ. 1 கோடி செலவில் புதிய விற்பனை நிலையம் விரைவில் திறக்கப்படவுள்ளது.

கைவினைஞர் கலைஞர் அதிகம் வாழும் பகுதிக்கு முக்கியத்துவம் அளித்து மேம்படுத்தும் விதமாக மாமல்லபுரத்தில் ரூ.1 கோடியே 86 லட்சம் செலவில்கைவினை சுற்றுலா கிராமம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. மல்லபுரத்தின் நுழைவாயிலில் சிற்ப வேலைப்பாடு நிறைந்த 40 அடி உயர சிற்பக்கலை தூண் அமைக்கப்பட்டுள்ளது. காரணை கிராமத்தில் 27 குடியிருப்புகள், ஐந்து ரத வீதியில் 28 உற்பத்தி நிலையங்கள் புதுப்பித்து அழகுபடுத்தும் பணிகள் முடிக்கப்படுள்ளன. பூம்புகார்நிறுவனம், MSME துறையுடன் இணைந்து குறுங்குழும திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம், தம்பம்பட்டியில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் மரச்சிற்ப கைவினை கிராம் அமைக்க புதிய திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது.

கைவினை கலைஞர்களின் நலனுக்காக செயல்படுத்தும் நல திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை பெற தமிழ்நாடு முழுவதும் 20 இடங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. இந்த முகாம்களில், இதுவரை 1200 கலைஞர்கள் கலந்து கொண்டு பயனடைந்து உள்ளனர்.பாரம்பரிய மற்றும் தனித்துவம் வாய்ந்த பொருட்களுக்கு, அதன் சிறப்பை உணர்த்த ஒன்றிய அரசு புவிசார் குறியீடு வழங்குகிறது.

தமிழகத்தில் தஞ்சாவூர் – தட்டு, ஒவியம், பொம்மை வடசேரி – கோயில் நகைகள்,சுவாமிமலை – பஞ்சலோக சிற்பங்கள்,மாமல்லபுரம்- கற்சிற்பம் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடுகள் பெறப்பட்டுள்ளது. கழக அரசு பொறுப்பேற்ற பின், கள்ளக்குறிச்சி – மரச்சிற்பம், கருப்பூர் - கலம்காரி ஒவியம், தஞ்சாவூர் - நெட்டி வேலை அரும்பாவூர் - மரச்சிற்பம் மைலாடி - கற்சிற்பங்கள் என மொத்தம் 14 புவிசார் குறியீடுகள் இதுவரை பெறப்பட்டுள்ளது. மேலும், 10 கைவினை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு அறிவிக்கப்பட்ட கைவினை கலைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் திட்டத்தின் கீழ் ரூ. 52 லட்சம் மதிப்பீட்டில் 6 திறன் மேம்பாட்டு பயிற்சிகள் பத்தமடையில்-பாய் நெசவு, செஞ்சியில்-கை அச்சு பதிப்பு, காணாத்தூர், கும்மிடிபூண்டியில் - சித்திர தையல் வேலைபாடு, தஞ்சாவூர் - ஓவியம்,கருப்பூர் கலம்காரி - ஓவியம் போன்றவற்றில் 180 கைவினைக் கலைஞர்களுக்கு பயிற்சிகள் அளிப்பட்டுவருகிறது.

பூம்புகார் விற்பனை நிலையங்களில் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வந்து அழகிய கலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. அதுபோன்று, நம்முடைய கலைஞர்களும் இளைஞர்களை கவரும் வகையில், புதிய வடிவங்களில் அழகிய கலை பொருட்களை தயாரித்து, வெளிமாநிலங்களில் விற்பனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

பாரம்பரிய கலைகளை பாதுகாத்திடவும், சிறந்த கைவினை கலைஞர்களை ஊக்கப்படுத்தவும், நலிந்த கலைஞர்களுக்கு உதவிடவும், பொது பயன்பாட்டு மையங்கள் கைவினை கலைஞர்கள் கிராமம், மாநில – மாவட்ட அளவில் விருதுகள், உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்கள் விரிவாக்கம், நகர்ப்புர குடில்கள், விழிப்புணர்வு முகாம்கள் என எண்ணற்ற நலத்திட்டங்களை கழக அரசு நிறைவேற்றி வருகிறது. எனவே, கலைஞர்களை போற்றி பாதுகாக்கும் முதல்வர் அவர்களின் கழக அரசு உங்களுக்கு என்றும் துணை நிற்கும்.” என்றார்.

நிகழ்ச்சியில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறையின் அரசு செயலர் வி.அமுதவல்லி, I.A.S, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர் எஸ். அமிர்த ஜோதி, I.A.S, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் எஸ்.அருண் ராஜ், I.A.S, திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் பாலாஜி, விருது பெற வருகைதந்துள்ள கைவினை கலைஞர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

Also Read: மசூதியை ஆய்வு செய்ய அனுமதி - ”மதவாதத்துக்கு துணை போகிறதா உச்சநீதிமன்றம்?” : பிருந்தா காரத் கேள்வி!