Tamilnadu
கனமழை எச்சரிக்கை : பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் KKSSR செய்தியாளர்களிடம் பேசியது என்ன?
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியது வருமாறு :
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. இதனால் தமிழகத்திலுள்ள கடற்கரை ஓர மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து தமிழக முதலமைச்சர் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் காணொளி காட்சி வாயிலாக நேரடியாக பேசினார். அவர்களிடம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளீர்களா என கேட்டு, அவர்களுக்கு சரியான யோசனைகளையும் முதலமைச்சர் கூறி உள்ளார். அதன் அடிப்படையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தகுந்த ஏற்பாடுகளை செய்துள்ளார்கள்.
வானிலை ஆய்வு மையம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என்று தெரிவித்துள்ளது அதனை நாங்கள் எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சரியாக எடுத்திருக்கிறோம். மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம் ஆகியவற்றை துரிதப்படுத்தி எல்லா பணிகளையும் செய்து வருகிறோம். முதலமைச்சர் நேரடியாக ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். தொடர்ந்து மழை நிலவரங்களை அரசாங்கம் கவனிப்பதுடன் கண்காணிப்புடன் வைத்துக் கொண்டுள்ளது.
தொடர்ந்து வாய்க்கால்களில் தேங்கும் நீரை வெளியேற்றும் பணி தொடர்பான கேள்விக்கு,
மழைநீர் வாய்க்கால்களில் தேங்கும் மழை நீரை உடனடியாக வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது கூட துணை முதலமைச்சர் மழை நீர் வடிகால் பணிகளை பார்வையிட சென்றுள்ளார். அரசாங்கம் துரித கதியில் நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாத வகையை இந்த அரசு உருவாக்கும்.
மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு நேற்று, இன்று காலை வரை எவ்வளவு மழை பெய்துள்ளது அந்த மழை அளவுக்கு ஏற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பதையும் அதுபோல பொதுமக்களுக்கு தங்க வைக்க முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? அவர்களுக்கு தேவையான உணவு, பால் போன்ற பொருட்கள் தயாராக உள்ளதா? என்று முதலமைச்சர் நேரடியாக மாவட்ட ஆட்சித்தலைவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார். தெரிந்து கொள்வது மட்டுமல்லாமல் அது தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கையாகவும் சொல்லியிருக்கிறார்.
டெல்டா மாவட்ட விவசாய நிலங்களில் சேதம் ஏற்படும் பட்சத்தில் விவசாயத்துறை அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து உரிய நஷ்ட ஈடு அரசாங்கம் வழங்கும். இதுவரை நிவாரண முகங்களில் தங்க வைக்கும் அளவிற்கு மழை இல்லை. மழை பெய்யும் என்று எதிர்பார்க்கிறோம் அதற்கு ஏற்ப முகாம்களை தயார் நிலையில் வைத்துள்ளோம். நீர் நிலைகளை பொதுப்பணித்துறையில் இருந்து கண்காணிக்கிறார்கள் பெரிய மழை வரும்போதுதான் அவற்றை எச்சரிக்கையாக பார்க்க வேண்டிய உள்ளது.
சென்னையில் குடிநீர் தரும் ஏரிகளில் பாதி அளவு தான் தண்ணீர் உள்ளது. மழை வரும் நேரத்தில் அதில் நீரை சேமிக்க வேண்டும்; அதிகரிக்கும் பொழுது கரையோர மக்களுக்கு எச்சரிக்கை தெரிவித்து அளவுக்கு மீறி இருந்தால் சரியான நேரத்தில் நீரை திறந்து விட வேண்டும்.
பொதுமக்கள் கட்டுப்பாட்டறைக்கு தொலைபேசி வாயிலாக என்ன உதவி கேட்கிறார்களோ நாங்கள் அதை அந்த துறைக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்து எங்களுக்கு தொடர்பு கொண்டவர்களின் தொலைபேசி எண்ணையும் கொடுத்து அவர்களின் தேவையை நிறைவேற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுப்போம்" என்றார்.
Also Read
-
மக்களே உஷார்... அடுத்த 24 மணி நேரத்தில் எங்கெல்லாம் அதி கனமழை பெய்யும்? - பாலச்சந்திரன் எச்சரிக்கை!
-
கன மழை எதிரொலி : உங்கள் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறையா?
-
கன மழை எச்சரிக்கை : களத்தில் இறங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
மரணத்திலும் இணை பிரியாத தம்பதி : சோகத்தில் மூழ்கிய கிராமம்!
-
பூம்புகார் கைத்திறன் விருதுகள் : 227 கைவினை கலைஞர்களுக்கு பரிசுத்தொகை வழங்கினார் அமைச்சர் TM அன்பரசன்!