Tamilnadu

கன மழை எச்சரிக்கை : களத்தில் இறங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 800 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (27-11-2024) புயலாக வலுபெறக்கூடும். இது அதற்கடுத்த இரு தினங்களில் மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும். வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெங்கல் என்ற பெயர் சூட்டப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் இன்று முதல் டிச.2 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றும், நாளையும் மற்றும் நாளை மறுநாளும் மிக கன மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கால்வாய்கள் தூர்வாறும் பணியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.

அரும்பாக்கத்தில் உள்ள விருகம்பாக்கம் கால்வாயில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்து, விருகம்பாக்கம் கால்வாயை தொடர்ந்து முறையாக பராமரித்து, அடுத்தடுத்து வரும் மழை நாட்களிலும், அரும்பாக்கத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகள் - சாலைகளில் தண்ணீர் தேங்காத நிலையை ஏற்படுத்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதேபோல், ஓட்டேரி நல்லா கால்வாயில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். கனமழை எச்சரிக்கையை அடுத்து தமிழ்நாடு அரசு அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டு மழையை எதிர்கொள்ள தயாராக உள்ளது.

Also Read: நாளை உருவாகும் FENGAL புயல் : 2 நாள் சென்னைக்கு கன மழை எச்சரிக்கை!