Tamilnadu

திராவிட மாடலின் ’மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தால் 1.8 கோடி பேர் பயன் : அப்பாவு புகழாரம்!

இயற்கை மருத்துவ நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையுடன் இணைந்து ரோட்டரி சங்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் மு.அப்பாவு கலந்து கொண்டார். அரசு யோகோ இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவ பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பொதுமக்கள் என 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தொடர்ந்து விழா மேடையில் பேசிய சட்டமன்ற பேரவை தலைவர் மு.அப்பாவு, “1996ஆம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவர் காலத்தில் தான் அரும்பாக்கத்தில் இருக்கக்கூடிய யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியை ஆரம்பித்து ஆண்டுதோறும் 60 பேர் இளங்கலை பட்டதாரியாகவும், 15 முதுகலை பட்டதாரியாகவும் வகையில் இந்தியாவில் அற்புதமான ஒரு அரசு கல்லூரியை முதன்முதலாக ஓமியோபதி துறைக்கு தரப்பட்டது.

தொலைநோக்கு சிந்தனை உடையவர் கலைஞர், அவர் வந்துதான் டைடல் பூங்கா ஆரம்பித்தார், சிறுசேரி தகவல் தொழில்நுட்ப பூங்கா ஆரம்பித்தார், ஆண்டுக்கு அதில் 2 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற வித்திட்டவர் கலைஞர்.

அதே வழியில் தற்போதைய முதலமைச்சர் திருவள்ளூரில் 300 கோடி ரூபாய் அளவில் ஒரு டைடல் பூங்காவை திறந்து உள்ளார். இந்திய அளவில் மருத்துவத்துறைக்கு தமிழ்நாடு அரசு மிக அதிக அளவில் செலவு செய்து வருகிறது, இந்தியாவில் மருத்துவத்துறையில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது அதை உருவாக்கி இருக்கிறார் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முதலமைச்சர் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை கொண்டு வந்தார், நான் கூட அது தேவையா என்று எண்ணி இருப்பேன் ஆனால் அது ஒரு மகத்தான திட்டம் நோயாளிகளை பிணியில் இருந்து நீக்கிய பெருமை நம்முடைய முதலமைச்சரை சாரும் ஒருவர் இருவரல்ல 1 கோடியே 80 லட்சம் பேர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பயனடைந்துள்ளனர், இதற்காக ஐக்கிய நாடு சபை உலகில் இருக்கக்கூடிய நாடுகளில் இந்தியாவில் தமிழ்நாட்டின் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்திற்கு விருது கொடுத்து பெருமை படுத்தி உள்ளது.

இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு. கடந்த ஆண்டு 78 வரை இருந்த அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், தற்போது 80ஆக உள்ளது. இந்த அளவிற்கு கல்லூரிகள் வளர்வதற்கு காரணம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர், இந்தியாவில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரியை அமைக்க வேண்டும் என்று கொள்கை முடிவை எடுத்து அதை நிறைவேற்றியவர் கலைஞர்.

ஆண்டுக்கு 11 ஆயிரத்து 500 பேர் பிடிஎஸ், எம்பிபிஎஸ் படிப்பை படிக்கிறார்கள். 10 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு மருத்துவர் அதைத் தாண்டி இருக்கக் கூடாது என்று ஒன்றிய அரசு கொண்டு வந்தது. மக்களுக்கு விரோதமான திட்டங்கள் வந்தால் நாங்கள் எதிர்ப்போம், நீட் தேர்விற்கு நாங்கள் எதிரி இல்லை ஆனால் அது எப்படி நடக்கிறது யார் நடத்துகிறார்கள்.

தேசிய தேர்வு முகமை நடத்துகிறது அது ஒரு தனியார் அமைப்பு. நீட் தேர்வை நேர்மையாக நடத்தினால் பிரச்சனை இல்லை, கிரேஸ் மார்க் போட்டதனால் தான் தமிழ்நாட்டு மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதைத்தான் தமிழ்நாடு அரசு எதிர்த்து கேட்கிறது, தனியார் அமைப்பிடம் நீட் தேர்வை கொடுத்திருக்கிறார்கள் இந்த ரோட்டரி இடம் கொடுத்திருந்தால் கூட தன்னனலம் இல்லாமல் அந்த தேர்வை 100% நேர்மையாக நடத்தி இருப்பார்கள்.

தமிழ்நாட்டின் கல்விக்கட்டமைப்பை சீரழித்து விடுகிறது நீட் தேர்வு, இந்தியாவில் தமிழ்நாடு தான் கல்வியில் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு தமிழ்நாட்டில் 51%க்கு மேல் பட்டம் பெற்று உள்ளனர், இது தான் தமிழ்நாட்டின் பெருமை.

இந்தியாவிற்கே வரலாறாக தமிழ்நாடு செயல்பட்டு கொண்டிருக்கிறது, இந்தியாவில் பணிபுரிகின்ற பெண்களில் 70% பெண்கள் தமிழ்நாட்டு பெண்கள், இந்திய கல்வி தலைசிறந்த கல்வி அதில் தமிழ்நாடு மிக உயர்ந்த இடத்தில் உள்ளது” என்று கூறினார்.

Also Read: “பேரம் பேசக்கூடிய கூட்டணியாக எதிர்க்கட்சி கூட்டணிகள் அமைந்துள்ளது!” : துணை முதலமைச்சர் உதயந்தி கண்டனம்!