Tamilnadu
தூத்துக்குடி, கொடநாடு, கும்பகோணம், கோவை.. அதிமுக ஆட்சியின் சட்ட ஒழுங்கு பிரச்னையை பட்டியலிட்ட RS பாரதி!
திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் சார்ந்த எந்த நல்லத் திட்டங்கள் வந்தாலும், அதனை எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வருகிறார். மேலும் இல்லாத பொல்லாததை கூறி அவதூறுகளையும் பரப்பி வருகிறார். இப்படி தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் பழனிசாமிக்கு முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் இன்று (21.11.2024) சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியது வருமாறு :
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீ்திமன்றம் உத்தரவிட்டது தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். முதலில் அவர் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக தன்னை பரிசிலீத்துக் கொள்ள வேண்டும்.
கடந்த, 2018ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நெடுஞ்சாலை துறையில் 4,800 கோடி ரூபாய்க்கு ஊழல் செய்தது தொடர்பாக திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. திமுகவின் சார்பில், நான்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். இருப்பினும், நாங்கள் சிபிஐ விசாரணை கோரவில்லை. ஆனால் நீதிமன்றம், இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
சென்னை நீதிமன்றத்தின் சிபிஐ விசாரணை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தடை பெற்றார். இதில் சிபிஐ விசாரணை வேண்டாம் என எடப்பாடி கேட்டதற்கு, உச்சநீதிமன்றத்தில் நாங்கள் ஆட்சேபனை இல்லை எனக் கூறினோம். ஆனால் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றம் செல்லக் கூடாது என, நேற்றயை தினம் எடப்பாடி பழனிசாமி மனசாட்சியை அடகு வைத்து விட்டு அறிக்கை விட்டிருக்கிறார்.
கடந்த 2016-ம் ஆண்டு தமிழ்நாட்டில் திருப்பூர் அருகே தேர்தல் நேரத்தில், 570 கோடி ரூபாய் கன்டெய்னர் லாரில் பிடிப்பட்டது. அப்போது அதிமுக ஆட்சி நடைபெற்றது. கட்டுக்கட்டாக நோட்டுகளை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றினர். கோவை மாவட்டத்தில் இருந்து கன்டெய்னர் லாரியில் கொண்டு வரப்பட்ட நிலையில், திருப்பூரில் நடு சாலையில் பணம் பிடிபடுகிறது. இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடுத்தோம்.
கடந்த, 2017–18ல் இந்த வழக்கில் சிபிஐ விசாரணை என உத்தரவிடப்பட்டது. இதுவரை சிபிஐ தனது விசாரணையை துவக்கவில்லை. சிபிஐ விசாரணை எப்படி இருக்கும் என்பதற்கு இதுவே உதாரணம். ஆகவே சிபிஐ விசாரைணையை எப்போதும் நாங்கள் கோருவதில்லை.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய இறப்பு சம்பவத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துரித நடவடிக்கை எடுத்தார். 57 மருத்துவர்களை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்ததுடன், மாவட்ட ஆட்சியர் மாற்றம்., எஸ்பி சஸ்பென்ட். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது என நடவடிக்கைகள் பாய்ந்தன. ஆனால் எடப்பாடி பழனிசாமி அவர்கள், தான் யோக்கியரை போல, இந்த வழக்கில் மேல் முறையீடு செல்லக் கூடாது என்கிறார். சட்டம் ஓழுங்கு கெட்டு போச்சு என பேசுகிறார்.
அதிமுக ஆட்சியில் நடக்காத சம்பவங்களா? மத்திய அமைச்சராக இருந்த தலித் எழில்மலையின் மருமகன் சென்னையில் கொலை செய்யப்பட்டார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அந்த வழக்கில் தீர்ப்பு கூட வந்தது. ஆக தனிப்பட்ட கொலைகளுக்கும் சட்டம் ஒழுங்குக்கும் சம்பந்தமில்லை. இதனை எடப்பாடி பழனிசாமி புரிந்துக் கொள்ள வேண்டும். ஓசூர் நீதிமன்றம் சம்பவம், தஞ்சையில் ஆசிரியை கொலை இரண்டும் தனிப்பட்ட விவகாரங்களின் அடிப்படையில் நடந்தவை.
துாத்துக்குடி சம்பவத்தில் நடந்த உயிரிழப்புதான் சட்டம் ஒழுங்கு பிரச்சினை. மறைந்த ஜெயலலிதா கடைசி நாட்களில் வாழ்ந்தது கொடநாட்டில் தான். இது அதிகாரிகளுக்கும் தெரியும். கொடநாட்டில் இருந்து கோட்டையை இயக்கிக் கொண்டிருந்தார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது, கொடநாட்டில் நடந்த சம்பவங்களில் யாரையும் காப்பாற்ற முடியவில்லை. அங்கு பணியில் இருந்த காவலாளி உட்பட 5 கொலைகள் நடந்துள்ளது. அங்கிருந்து பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், கடந்த, 2018 நவம்பர் 2ஆம் தேதியன்று கும்பகோணத்தில் தனியார் பள்ளி ஆசிரியை குத்திக் கொலை; கடந்த, 2018 ஆகஸ்ட் 14ல் பெரம்பலுார் அருகே பட்டபகலில் ஆசிரியை வழிமறித்து கத்தியால் குத்திக் கொலை.; கடந்த 2020 டிசம்பர் 23ல் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ஆசிரியை படுகொலை, கணவன் கைது; கடந்த 2017 ஜனவரி 8-ல் கோவையில் கல்லுாரி ஆசிரியை கழுத்து அறுத்து தீ வைத்து கொலை; கடந்த 2017 மே 9-ல் கள்ளக்காதல் விவகாரத்தில் காதலியை காரை ஏற்றி கொலை; கடந்த 2019 ஜூலை 8-ல் துாத்துக்குடியில் அரசு பள்ளி ஆசிரியர் படுகொலை நடந்துள்ளது. இவையெல்லாம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை என எடுத்துக் கொள்ள முடியுமா? ஆகவே எடப்பாடி பழனிசாமி புரிந்துகொள்ள வேண்டும்.
இன்றைய ஆட்சியில், தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைந்து உள்ளது. அதிமுக ஆட்சியில் 2020ம் ஆண்டில்1,672 கொலைகள் நடந்துள்ளது. தற்பொழுது பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் நடப்பாண்டில் கடந்த ஜூன் மாதம் 30 வரை, 792 கொலைகள் நடந்துள்ளது. இனியும் கடும் நடவடிக்கைகள் தொடரும்.
சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் பொறுப்பு ஏற்றதற்கு பின்பு, டிஎஸ்பி ரேங்கில் மண்டலம் வாரியாக ரவுடிகளை கட்டுப்படுத்த அதிகாரிகளை நியமித்து நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால் சென்னையில் ரவுடியிசம் குறைந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
=> கேள்வி : மூன்று ஆண்டுகளில் 6 ஆயிரம் கொலைகள் நடந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறாரே?
பதில் : அப்படியானால் ஒட்டு மொத்த அதிமுக ஆட்சியில் 1 லட்சம் கொலைகள் நடந்ததாக நான் சொல்வேன். நான்தான் புள்ளி விபரத்துடன் கூறியிருக்கிறேனே? விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கள்ளக்குறிச்சி விவகாரம், ஆம்ஸ்ட்ராங் கொலை போன்ற விசயங்களை அதிமுக பெரிதுபடுத்தியது. பிரச்சாரம் செய்தனர். இருந்தும் திமுக வெற்றி பெற்றது. மக்கள் உண்மையை புரிந்து கொண்டு இருக்கிறார்கள். மக்கள் மத்தியில் தவறான கருத்தை பரப்ப எடப்பாடி பழனிசாமி முட்டிப் போட்டு குட்டிக்கரணம் போடுகிறார். அது எடுபடாது.
அக்னி நியூஸ் சர்வீஸ் என்கிற நிறுவனம் கருத்து கணிப்பு எடுத்துள்ளது. மகாராஷ்டிராவில் காங் கூட்டணி வெற்றி பெறும் என அந்த நியூஸ் ஏஜென்சி கூறியுள்ளது. அந்த நிறுவனம்தான் தமிழ்நாட்டில் 54 சதவீதம் மக்கள் இந்த ஆட்சி திருப்தி என சொல்லி இருக்கிறார்கள். சில விசயங்களில் திருப்தி என 17 சதவீதம் சொல்லி உள்ளனர். 29 சதவீதம் பேர் மட்டுமே ஆட்சியில் திருப்தி இல்லை என சொல்லி இருக்கிறார்கள். ஆக 71 சதவீதம் ஆதரவு ஆட்சிக்கு உள்ளது.
=> கேள்வி : கொலை நடந்த இடம் பள்ளி, மருத்துவமனை, நீதிமன்றம் ஆகிய இடங்களாக இருக்கிறதே?
பதில் : நடந்த சம்பங்களை நியாயப்படுத்தவில்லை. உண்மையில் வருந்துகிறோம். அரசு நடவடிக்கை எடுத்தது. சில சம்பவங்கள் தவிர்க்க முடியாத நிலையில் உள்ளது. அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சுவாதி கொலை வழக்கு என்னாச்சு?. ஆகவே சில தனிப்பட்ட நிகழ்வுகளை மையப்படுத்தி மட்டும் கேள்வி கேட்கக்கூடாது. பொள்ளாச்சி சம்பவத்தைகூட இந்த நேரத்தில் நினைவு கூற முடியும் என்றார்.
=> கேள்வி : ஆட்சி மாற்றம் அதற்காகத்தான் உங்களுக்கு மக்கள் தந்து இருக்கிறார்கள்?
பதில் : இந்த ஆட்சியில் நிறைய நல்ல மாற்றம் நடந்துள்ளது.
=> கேள்வி : அரசின் நடவடிக்கை என்ன?
பதில் : சம்பவங்கள் அனைத்தும் விரும்பத்தகாத நிகழ்வுதான். அரசு நடவடிக்கை எடுத்து இருக்கிறது.
=> கேள்வி : அதிமுக, திமுக மாறி மாறி குறைகள் கூறிக் கொள்வதாக நீதிமன்றம் கூறியுள்ளதே?
பதில் : அதே நீதிமன்றம்தான் எங்களை இரண்டு நாட்களுக்கு முன் பாராட்டியும் உள்ளது. ஆகவே அதில் கருத்துக் கூற விரும்பவில்லை.
=> கேள்வி: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு எதிராக மேல் முறையீடு செய்வீர்களா?
பதில் : அரசுதான் முடிவு செய்யும். கட்சி நிலைப்பாட்டை சொல்லி இருக்கிறேன்.
=> கேள்வி: மருத்துவத் துறையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளாரே?
பதில் : இதற்கு ஆதாரம் இருக்கிறதா. பத்திரிகையாளராகிய உங்களுக்கு தெரி்ந்தால் நீங்களே தெரிவித்து இருப்பீர்களே !
இவ்வாறு கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
Also Read
-
”இது உங்களின் வெற்றி” : வயநாடு மக்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா காந்தி!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!