Tamilnadu

”தி.மு.க-வை யாராலும் தொடக்கூட முடியாது” : ஆர்.எஸ்.பாரதி பேச்சு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜின்னா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை ராணி அண்ணா நகர் பகுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே. மோகன் ஆகியோர் ஜின்னா அவர்களின் திருஉருவ படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் இந்நிகழ்வில் பேசிய ஆர்.எஸ்.பாரதி,”பணத்திற்காக பதவிக்காக பல கட்சிகளில் அரசியல் செய்கின்றனர். ஆனால் கொள்கைக்காகவே வாழ்ந்து கொள்கைக்காகவே மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜின்னா போன்ற பல தியாகிகள் இருப்பதால்தான் தி.மு.க இயக்கத்தை எவராலும் தொட்டுக் கூட பார்க்க முடியவில்லை.

13 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாத போது கழகத்தினர் பட்ட துன்பங்கள் ஏராளம். அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கொள்கைக்காகவே ஜின்னாவைப் போல பல தியாகிகள் நமது கழகத்தில் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இதனால்தான். எத்தனை கட்சிகள் வந்தாலும் தி.மு.கவை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது. புதிய கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் தி.மு.கவில் சேரும் நிலை ஏற்படும்.” என தெரிவித்துள்ளார்.

Also Read: ”யார் நினைத்தாலும் டெல்டா பகுதியில் இது நடக்கவே நடக்காது” : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா சொல்வது என்ன?