Tamilnadu

ரூ.1,792 கோடியில் ஸ்ரீபெரும்புதூரில் Foxconn நிறுவன ஆலை விரிவாக்கம்... 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ்நாட்டின் தொழிற்துறையை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளில் நடைபெறும் தொழிற்துறை கூட்டங்களில் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் தொழில்களை தொடங்க அழைப்பு விடுத்து வருகிறார்.

அதன்படி தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை அமைத்துள்ளன. இதன் மூலம் ஏராளமான தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இந்த சூழலில் சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள Foxconn நிறுவனம், தங்கள் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதாக கூறியது.

இந்த விரிவாக்கத்தினால் ஆயிரக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே இங்கு ஆப்பிள் நிறுவனத்தின் I Phone தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த ஜூலை மாதம் I Phone-களுடன், வரும் காலத்தில் I Pad-களையும் தயாரிக்க Foxconn நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அறிவித்தது.

இந்த நிலையில் தற்போது ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் சிப்காட் வளாகத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் செயல்பட்டு வரும் தங்கள் தொழிற்சாலையை ரூ.1,792 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்வதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரியது Foxconn நிறுவனம் இந்த முதலீட்டின் மூலம் கூடுதலாக 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு 3.55 லட்சம் சதுர அடியாக உள்ள கட்டுமான பகுதியை 4.79 லட்சம் சதுர அடியாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் ப்ரீமியம் வகை மொபைல் போன் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே ரூ.2,601 கோடி முதலீட்டில் செயல்பட்டு வரும் இந்த தொழிற்சாலை மூலம் 40,000 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: நீதிமன்றத்தில் காணொளி மூலம் வழக்கு விசாரணை! : டெல்லி காற்று மாசு எதிரொலி!